தேடுதல்

Vatican News
பெத்தானியாவில் மார்த்தா, மரியா இல்லத்தில் இயேசு பெத்தானியாவில் மார்த்தா, மரியா இல்லத்தில் இயேசு 

விவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 2

பெத்தானியாவையும், அவ்வூரில், இயேசுவின் நண்பர்களாய் வாழ்ந்த இலாசர், மரியா, மார்த்தா என்ற மூன்று பேரையும், இன்னும் சிறிது ஆழமாகப் புரிந்துகொள்ள, இன்றையத் தேடலில் முயல்வோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

120918 விவிலியம் இலாசர் உயிர்பெற்ற புதுமை - பகுதி 2

எருசலேம் நகரில் தனக்கு எதிராக வளர்ந்துவந்த வெறுப்புச் சூழலிலிருந்து விலகி, மன அமைதியையும், உறுதியையும் பெறுவதற்கு, யோர்தான் நதிக்கரையை நாடிச் சென்ற இயேசு, அங்கிருந்த வேளையில், தன்னுடன், பாசத்தையும், நட்பையும் பகிர்ந்துகொண்ட  பலரை நினைவு கூர்ந்திருக்கவேண்டும். அவர்களில் மூவர், இயேசுவின் நெருங்கிய நண்பர்கள். இந்த மூவரையும், நற்செய்தியாளர் யோவான், 11ம் பிரிவின் ஆரம்பத்தில் இவ்வாறு அறிமுகம் செய்து வைக்கிறார்:

யோவான் 11: 1-2

பெத்தானியாவில் வாழ்ந்து வந்த இலாசர் என்னும் ஒருவர் நோயுற்றிருந்தார். அவ்வூரில்தான், மரியாவும், அவருடைய சகோதரியான மார்த்தாவும், வாழ்ந்துவந்தனர். இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசி, தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர். நோயுற்றிருந்த இலாசர் இவருடைய சகோதரர்.

நற்செய்தியாளர் யோவான், நமக்கு அறிமுகம் செய்துவைக்கும் பெத்தானியாவையும்,  அவ்வூரில், இயேசுவின் நண்பர்களாய் வாழ்ந்த இலாசர், மரியா, மார்த்தா என்ற மூன்று பேரையும், இன்னும் சிறிது ஆழமாகப் புரிந்துகொள்ள, இன்றையத் தேடலில் முயல்வோம். "பெத்தானியா எருசலேமுக்கு அருகில் ஏறக்குறைய மூன்று கிலோ மீட்டர் தொலையில் இருந்தது" (யோவான் 11:18) என்று யோவான் குறிப்பிட்டுள்ளார். எனவே, இயேசு, எருசலேமுக்கு சென்ற வேளைகளில், குறிப்பாக, அந்நகரில், வெறுப்பானச் சூழலை உணர்ந்த வேளைகளில், அன்பையும், ஆதரவையும் தேடி, எருசலேமுக்கு அருகிலிருந்த பெத்தானியாவுக்குச் சென்றிருப்பார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

'பெத்தானியா' என்ற சொல்லுக்கு, விவிலிய விரிவுரையாளர்கள் வெவ்வேறு அர்த்தங்கள் வழங்கியுள்ளனர். 'பாடலின் இல்லம்', 'அத்திப்பழங்களின் இல்லம்', 'ஈச்சம் பழங்களின் இல்லம்' என்று பல்வேறு அர்த்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பெரும்பாலானோர் கூறும் ஒரு முக்கியமான அர்த்தம், "துயரத்தின் இல்லம்". அந்த ஊர், "துயரத்தின் இல்லம்" என்ற பெயரைத் தாங்கியிருந்தாலும், இயேசுவுக்கு, அந்த ஊரில் இருந்த ஓர் இல்லம், "ஆறுதலின் இல்ல"மாக இருந்ததென்பதில் ஐயம் இல்லை.

இயேசுவின் வாழ்வில், சில முக்கிய நிகழ்வுகள், பெத்தானியாவில் இடம்பெற்றன என்பதை, நான்கு நற்செய்திகளும் பதிவு செய்துள்ளன. தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில் இயேசு விருந்துண்ட நிகழ்வு, பெத்தானியாவில் நிகழ்ந்ததென்பதை, மத்தேயு (26:6), மாற்கு (14:3), ஆகிய இரு நற்செய்திகளிலும் காண்கிறோம்.

எருசலேம் கோவிலை இயேசு தூய்மையாக்கிய நிகழ்வு, நான்கு நற்செய்திகளிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால், மத்தேயு நற்செய்தியில் மட்டும், இந்நிகழ்வின் இறுதியில், "பின்பு அவர் அவர்களை விட்டு அகன்று, நகரத்திற்கு வெளியே உள்ள பெத்தானியாவுக்குச் சென்று, அன்றிரவு அங்குத் தங்கினார்" (மத்தேயு 21:17) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எருசலேமில் சந்தித்த பகைமை, வெறுப்பு ஆகிய எதிர்மறை அனுபவங்களுக்கு ஒரு மாற்று மருந்தாக, பெத்தானியாவில் தன் நண்பர்கள் இல்லத்தில் இயேசு தங்கச் சென்றார் என்பதற்கு, இந்தக் குறிப்பு ஓர் எடுத்துக்காட்டு.

இலாசரை உயிர்பெற்றெழச் செய்யும் நிகழ்வு, பெத்தானியாவில் நிகழ்ந்தது என்று யோவானும் (யோவான் 11), இயேசு, கழுதைக்குட்டியின் மீது அமர்ந்து, எருசலேம் நகருக்குள் நுழைந்தபோது, அந்த ஊர்வலம், பெத்தானியாவிலிருந்து துவங்கியது என்று, மாற்கும் (11:1), லூக்காவும் (19:29) கூறியுள்ளனர். இவ்வாறு, இயேசுவின் வாழ்வில் இடம்பெற்ற பெத்லகேம், நாசரேத்து, எருசலேம் போன்ற நகரங்களைப் போலவே, பெத்தானியாவும் அவர் வாழ்வில் முக்கிய இடம் பெற்றுள்ளது.

அடுத்து, நம் சிந்தனையைத் தூண்டுவது, 'இலாசர்'. 'இலாசர்' என்ற பெயர், நற்செய்தியில் இருமுறை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்து புதைக்கப்பட்ட இலாசரை இயேசு உயிர்ப்பிக்கும் நிகழ்வு, யோவான் நற்செய்தி 11ம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. மற்றொன்று, லூக்கா நற்செய்தி 16ம் பிரிவில், 'செல்வரும் இலாசரும்' என்ற உவமையின் கதாநாயகன், இலாசர்.

இயேசுவின் புதுமையால் உயிர் பெற்றெழுந்த மூவரைக் குறித்து நற்செய்தியில் வாசிக்கிறோம். இந்த மூவரில், நயீன் நகர் கைம்பெண்ணின் மகன் (லூக்கா 7:11-17), மற்றும், தொழுகைக்கூடத் தலைவன், யாயீரின் மகள் (மாற்கு 5:21-43) என்ற இருவரும் இயேசுவால் உயிர் பெற்றனர். இவர்கள் இருவரின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை. யோவான் நற்செய்தியில் கூறப்பட்டுள்ள புதுமையில் மட்டுமே, உயிர் பெற்றெழும் மனிதருக்கு 'இலாசர்' என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவண்ணம், இயேசு கூறிய உவமைகள் அனைத்திலும், 'விதைப்பவர் ஒருவர்', 'சமாரியர் ஒருவர்', 'தந்தை ஒருவருக்கு இரு மகன்கள்' 'பத்துத் தோழியர்' என்று, அந்த உவமையில் பங்கேற்போர் அனைவரும் பெயர் ஏதுமின்றி பேசப்பட்டுள்ளனர். லூக்கா 16ம் பிரிவில் (லூக்கா 16:19-31) கூறப்பட்டுள்ள 'செல்வரும் இலாசரும்' உவமையில் மட்டும், ஏழையின் பெயர் 'இலாசர்' என்று சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு, இயேசுவின் உவமையிலும், புதுமையிலும் தனிப்பட்ட வகையில் குறிப்பிடப்பட்டுள்ள 'இலாசர்' என்ற பெயர், 'எலியேசர்' என்ற எபிரேயச் சொல்லிலிருந்து உருவானது. 'எலியேசர்' என்ற பெயருக்கு, 'கடவுள் உதவினார்' என்பது பொருள்.

இலாசரின் சகோதரிகளான மரியாவும், மார்த்தாவும், அடுத்து, நம் தேடலின் மையங்களாகின்றனர். "இந்த மரியாதான் ஆண்டவர்மேல் நறுமணத்தைலம் பூசி, தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர்" (யோவான் 11:2) என்று, மரியாவைப் பற்றி யோவான் கூறும் அறிமுகச் சொற்கள், புதிராக உள்ளன. யோவான் நற்செய்தியில், 11ம் பிரிவு வரையில், இலாசர், மரியா, மார்த்தா ஆகிய மூவரையும் பற்றி எவ்வித குறிப்பும் இல்லை. மரியாவை முதன்முதலாக அறிமுகம் செய்யும்போதே, 'இந்த மரியாதான்... அவரின் காலடிகளைத் துடைத்தவர்' என்று யோவான் கூறும்போது, மரியா, இயேசுவின் காலடிகளை தன் கூந்தலால் துடைத்த நிகழ்வு, நம் அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கவேண்டிய ஒரு நிகழ்வைப்போல யோவான் குறிப்பிட்டுள்ளார். யோவான் நற்செய்தி, ஏனைய நற்செய்திகளுக்குப் பின்னர் எழுதப்பட்டது என்பதை நிரூபிக்க, யோவான் கூறியுள்ள இந்த இறைவாக்கியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய மூன்று நற்செய்திகளில், இந்நிகழ்வு, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை, யோவான், இந்த இறைவாக்கியத்தில், சொல்லாமல் சொல்கிறார்.

இயேசுவின் மீது, பெண் ஒருவர், நறுமணத் தைலம் ஊற்றிய நிகழ்வை, நற்செய்தியாளர்கள் மத்தேயுவும் (பிரிவு 26), மாற்கும் (பிரிவு 14) குறிப்பிட்டுள்ளனர். இந்நிகழ்வின் ஒரு தொடர்ச்சியாக, அப்பெண், இயேசுவின் காலடிகளை தன் கூந்தலால் துடைத்தார் என, நற்செய்தியாளர் லூக்கா (பிரிவு 7) கூறியுள்ள வேளையில், அந்தப் பெண்ணை, மரியா என்று, நற்செய்தியாளர் யோவான் (பிரிவு 12) அடையாளம் காட்டுகிறார்.

மரியா பயன்படுத்திய விலையுயர்ந்த நறுமணத் தலத்தை விற்று, ஏழைகளுக்கு உதவி செய்திருக்கலாம் என்ற எதிர்ப்புகள் எழுந்த வேளையில், இயேசு, மரியாவின் செயலைப் பாராட்டினார். அத்துடன், மரியா, தன்னை அடக்கம் செய்வதற்கு ஓர் அடையாளமாக இதைச் செய்தார் என்று இயேசு கூறியது, அவரது மரணத்தைக் குறித்து வெளியிடும் முன்னறிவிப்பாகவும் விளங்குகிறது.

மரியாவின் செயலைக் கண்டனம் செய்தவர்களிடம், இயேசு, "அவரை விடுங்கள்... அவர் எனக்குச் செய்தது முறையான செயலே... உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இவர் செய்ததும் எடுத்துக் கூறப்படும்; இவரும் நினைவு கூறப்படுவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்று கூறியதாக, நற்செய்தியாளர்கள் மத்தேயுவும், மாற்கும் (மத். 26:13; மாற். 14:9) இந்நிகழ்வின் இறுதியில் கூறி முடிக்கின்றனர்.

'இயேசுவின் காலடியில் மரியா' என்ற கருத்து, நற்செய்தியில் பல தருணங்களில் இடம்பெற்றுள்ளது. இயேசுவின் காலடிகளை தன் கூந்தலால் துடைத்தவர் மரியா என்பதை இங்கு சிந்தித்தோம். மார்த்தா, மரியா என்ற இரு சகோதரிகளைக் குறித்து பேசும் நற்செய்தியாளர் லூக்கா முதலில் மார்த்தாவை அறிமுகம் செய்துவைத்தபின், "அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து, அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்" (லூக்கா 10:39) என்று, மரியாவை அறிமுகம் செய்யும் வேளையில், மீண்டும், இயேசுவின் காலடிகளை இணைத்துப் பேசியிருக்கிறார்.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்னர், அந்தச் சிலுவையடியில், அதாவது, இயேசுவின் காலடியில், இயேசுவின் தாய் மரியா, குளோப்பாவின் மனைவி மரியா, மகதலா மரியா ஆகிய மூன்று பெண்கள் நின்றுகொண்டிருந்தனர் (யோவான் 19:25) என்று நற்செய்தியாளர் யோவான் கூறியுள்ளார். எனவே, மரியா என்ற பெண்ணை நினைவுகூரும் வேளைகளில், இயேசுவின் காலடிகளையும் நினைவுகூரும் வண்ணம் நற்செய்தியாளர்கள் பல்வேறு நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளனர்.

யோவான் நற்சேய்தி, 11ம் பிரிவில், இலாசர், மரியா, மார்த்தா ஆகிய மூவரையும் அறிமுகம் செய்தபின், நற்செய்தியாளர் யோவான் கூறும் சொற்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. இலாசரின் சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, "ஆண்டவரே, உன் நண்பன் நோயுற்றிருக்கிறான்" என்று தெரிவித்தார்கள். (யோவான் 11:3) மார்த்தாவும், மரியாவும் இயேசுவுக்கு அனுப்பிய இந்தத் தகவலை எவ்விதம் புரிந்துகொள்வது, இன்னும் குறிப்பாக, இச்சொற்களை, ஒரு செபமாக எவ்விதம் புரிந்துகொள்வது என்பதை, அடுத்தவாரம், நம் தேடலாக மேற்கொள்வோம்.

11 September 2018, 14:44