Cerca

Vatican News
நமது வாழ்வாக விளங்கும் இயேசு நமது வாழ்வாக விளங்கும் இயேசு  (Dmitry Kalinovsky)

விவிலியத்தேடல் : புதையுண்டவர் புதுவாழ்வு பெற்ற புதுமை – பகுதி 1

மனிதர்கள், இவ்வுலகில் தோன்றியது முதல், சாகாவரம் பெறுவதையும், என்றும் இளமையுடன் வாழ்வதையும் கனவாகக் கண்டு வந்துள்ளனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

040918 இலாசர் உயிர்பெற்ற புதுமை - 1

யோவான் நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ள ஏழு புதுமைகளில், இறுதிப் புதுமை - இயேசு இலாசரை உயிர்பெற்று எழச் செய்த புதுமை. ஒரு கல்யாண விருந்தில் ஆரம்பமான புதுமைகள், இறுதியாக, ஒரு கல்லறைக்கருகே நம்மை அழைத்து வந்துள்ளன.

'கல்லறை' என்ற சொல்லைக் கேட்டதும், நம்மில் சிலருக்கு, சிறிய அளவிலோ, பெரிய அளவிலோ, சங்கடங்கள் ஏற்பட்டிருக்கலாம். பொதுவாகவே, சாவு, மரணம், கல்லறை ஆகியவற்றைக் குறித்து யாராவது பேச ஆரம்பித்தால், "வேறு ஏதாவது நல்லவற்றைப் பற்றிப் பேசுவோமே" என்று சொல்லி, அந்த உரையாடலைத் திசைதிருப்ப முயல்வோம். சாவு, மரணம், கல்லறை ஆகியவை, நல்லவை அல்லாத, அமங்கலமான சொற்கள், எண்ணங்கள் என்பது நம் கணிப்பு. ஆனால், சாவு, மரணம் இவற்றையும் நல்லதொரு கோணத்திலிருந்து பார்த்தால், அந்தப் பார்வை, நமது வாழ்வைக் குறித்து பல தெளிவுகளை உண்டாக்கும்.

“நாமோ, அல்லது நமக்கு நெருங்கிய ஒருவரோ ஒர் இறுதி நிலைக்கு வந்துவிடும் நேரங்களில்தாம் நாம் பெரும்பாலும் மரணத்தைப்பற்றி நினைக்கிறோம். அந்நேரங்களில், மனதில், பயம், கலக்கம் போன்ற உணர்வுகளே அதிகம் உண்டாகும். நல்ல உடல்நலத்துடன் இருக்கும்போது, எந்த வித படபடப்பும் இல்லாமல் மரணத்தைப் பற்றி ஏன் நாம் நினைத்துப் பார்ப்பதில்லை? மரணம் என்ற ஓர் எல்லைக்கு உட்பட்டதுதான் வாழ்க்கை என்பதை உணராமல், வாழ்வைப்பற்றிய ஒரு முழுமையான எண்ணத்தை எப்படி பெறமுடியும்?” இந்த எண்ணங்களைக் கூறுவது Studs Terkel என்ற அமெரிக்க எழுத்தாளர்.

வாழ்வைப்பற்றிய ஒரு முழுமையான எண்ணத்தை உருவாக்கும் முயற்சியாக, இலாசரின் மரணத்தையும், அவரை இயேசு மீண்டும் உயிர்பெற்றெழச் செய்த நிகழ்வையும், இன்றும், இன்னும் சில வாரங்களும் நாம் சிந்திக்க முயல்வோம்.

மனிதர்களாய்ப் பிறந்த நாம் அனைவரும் கட்டாயம் ஒருநாள் இறக்கத்தான் வேண்டும். இதில் எவ்வித விதிவிலக்கும் கிடையாது. அறிவியலின் துணைகொண்டு, இந்த நியதியை மாற்றியமைக்கும் முயற்சிகளை, ஒரு சிலர் மேற்கொண்டுள்ளனர் என்பதையும், நாம் ஊடகங்கள் வழியே அறிந்து வருகிறோம்.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம், 'மரணத்தின் மரணம்' (The Death of Death) என்ற நூல், ஸ்பெயின் நாட்டின் பார்சலோனா நகரில் வெளியிடப்பட்டது. மரபணு பொறியியலாளர்களான (Genetic engineers) José Luis Cordeiro, மற்றும், David Wood என்ற இருவரும் எழுதியுள்ள இந்நூலில், மனிதர்கள் இனி இறக்கத் தேவையில்லை என்ற கருத்தை வலியுறுத்த முயன்றுள்ளனர். இன்னும் முப்பது ஆண்டுகளில், விபத்துக்களில் மனிதர்கள் இறப்பதைத் தவிர, நோயினாலோ, வயது முதிர்ச்சியாலோ மனிதர்கள் இறக்கத் தேவையில்லை என்றும், குணமாக்கமுடியாததென கருதப்படும் பல நோய்களுக்கு மருத்துவத் தீர்வுகள் கிடைத்துவிடும் என்றும், இந்நூலில் கூறப்பட்டுள்ளது. 'Nanotechnology' என்ற தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி, மரணத்தைத் தடுத்து நிறுத்துவதோடு, உடல் முதிர்ச்சி அடைவதை நிறுத்தமுடியும் என்றும் மரபணுவில் மாற்றங்கள் கொணர்வதன் வழியே, உடல் முதிர்ச்சி அடைவதை, எதிர் திசையில் திருப்பி, இளமைப்பருவத்தை மீண்டும் அடையமுடியும் என்றும் Cordeiro அவர்களும், Wood அவர்களும் கூறியுள்ளனர்.

'மரணத்தின் மரணம்' நூல் வெளியீட்டு விழாவில், Cordeiro அவர்கள் பேசுகையில், சாகாமலிருக்க தான் முடிவெடுத்துள்ளதாகவும், இன்னும் 30 ஆண்டுகளில், தான் இப்போதிருக்கும் வயதைவிட, இளைய நிலையை அடையப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மனிதர்கள், இவ்வுலகில் தோன்றியது முதல், சாகாவரம் பெறுவதையும், என்றும் இளமையுடன் வாழ்வதையும் கனவாகக் கண்டு வந்துள்ளனர். தற்போது, இந்தக் கனவை, அறிவியல் வழியில் நனவாக்கும் முயற்சிகள் ஒரு சில நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மரணம் என்ற உண்மையை மறப்பதற்கு, மறுப்பதற்கு, அல்லது, அறிவியல் வழியே மாற்றுவதற்கு முயற்சிகள் நடைபெறுவது ஒருபுறம் எனில், மரணத்தைப்பற்றிப் பேசுவது நல்லது என்று வாதிடுவோர் மறுபுறம் உள்ளனர்.

Karen Wyatt என்ற மருத்துவர், மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் நோயாளிகளுக்காக, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார். அவர், 2016ம் ஆண்டு, ஓர் ஆங்கில நாளிதழுக்கு எழுதிய கட்டுரைக்கு: “How Thoughts Of Death Can Be A Key To Happiness” அதாவது, "மரணத்தைப்பற்றிய எண்ணங்கள் எவ்வாறு மகிழ்வுக்கு ஒரு முக்கியத் திறவுகோலாக அமையக்கூடும்" என்று தலைப்பிட்டிருந்தார்.

இக்கட்டுரையின் துவக்கத்தில், கேரன் அவர்கள், இமயமலையில் உள்ள பூட்டான் நாட்டைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். பூட்டான் நாடு, "பூமியில் மிகவும் ஆனந்தமான நாடு" என்று ஒரு சில ஆய்வு நிறுவனங்களால் கணிக்கப்பட்டுள்ளது.

இந்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆனந்தமாக வாழ்வதற்கு ஒரு முக்கிய காரணியாக கேரன் அவர்கள் கருதுவது, அம்மக்கள் பின்பற்றும் புத்த மதப் பாரம்பரியம். இப்பாரம்பரியத்தின்படி, ஒவ்வொரு நாளும், மரணத்தைக் குறித்து அந்நாட்டு மக்கள் தியானங்கள் மேற்கொள்கின்றனர்.

ஒவ்வொருநாளும், மரணத்தை வரவேற்கும் மனப்பக்குவத்தை இம்மக்கள் உருவாக்கி வாழ்வதால், அமைதியையும், ஆனந்தத்தையும் அவர்களால் உணரமுடிகிறது என்று, கேரன் அவர்கள், தன் கட்டுரையில் கூறியுள்ளார்.

மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருப்போரிடமிருந்து தான் கற்றுக்கொண்ட பாடங்களைத் தொகுத்து, கேரன் அவர்கள், 2011ம் ஆண்டு, ஒரு நூலை வெளியிட்டுள்ளார். "எது உண்மையிலேயே அவசியமானது: இறந்துகொண்டிருப்போரின் கதைகளிலிருந்து வாழ்வோருக்கு 7 பாடங்கள்" (What Really Matters: 7 Lessons for Living from the Stories of the Dying) என்ற தலைப்புடன் வெளியான இந்நூலில், அவர் சொல்லித்தரும் 7 பாடங்கள்: துன்பம், அன்பு, மன்னிப்பு, விண்ணகம், குறிக்கோள், சரணடைதல், நிரந்தரமற்ற நிலை. கேரன் அவர்கள் சொல்லித்தரும் இந்த 7 பாடங்களில் பலவற்றை, இலாசரை இயேசு உயிர்பெற்றெழச் செய்யும் புதுமை வழியே நாம் பயில முயல்வோம்.

இப்புதுமைக்குள் அடியெடுத்து வைப்பதற்குமுன், இப்புதுமை நிகழ்ந்த சூழலைக் குறித்து சிந்திக்க முயல்வோம். பிறவியிலிருந்து பார்வையற்ற மனிதருக்கு இயேசு பார்வை வழங்கியப் புதுமை, ஒய்வு நாளில் நிகழ்ந்தது. இந்தப் பிரச்சனை, யூதமதத் தலைவர்களின் கோபத்தைத் தூண்டியது என்று, யோவான் நற்செய்தி 9ம் பிரிவில் வாசிக்கிறோம். இதைத் தொடர்ந்து, 10ம் பிரிவில், இயேசு, தன்னை ஒரு நல்ல ஆயனாகவும், ஆட்டுக்கொட்டிலின் வாயிலாகவும் உருவகித்துப் பேசுகிறார். அதுமட்டுமல்ல, ஏனையோரை, கூலிக்கு மேய்ப்பவர்கள் என்றும், திருடர்கள் என்றும் உருவகித்துப் பேசுகிறார் (யோவான் 10:1-18). இயேசு கூறியவற்றைக் கேட்ட ஒரு சிலர், அவரைப் பேய் பிடித்தவர் என்றும், வேறு சிலர், அவர் பேய்பிடித்தவராக இருந்தால், புதுமைகள் செய்ய இயலாது என்றும் கூறவே, அங்கு கருத்து வேறுபாடுகள் எழுகின்றன (யோவான் 10:19-21).

10ம் பிரிவின் இரண்டாம் பாதியில், எருசலேம் கோவிலில் நிகழந்த அர்ப்பண விழாவில் கலந்துகொள்ள இயேசு மீண்டும் அங்கு சென்றதை யோவான் குறிப்பிடுகிறார் (யோவான் 10:22-23). அவ்வேளையில் மீண்டும் ஒரு மோதல் உருவாகிறது. "நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்" (யோவான் 10:24) என்று யூதர்கள் இயேசுவிடம் கேட்கும் வேளையில், இயேசு தன்னை இறைவனுடன் இணைத்துப் பேசி, "நானும், தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்" (யோவான் 10:30) என்று கூறி முடிக்கிறார்.

கடினமான உண்மைகளை இயேசு கூறியதால், அவர்மீது தாக்குதல்கள் நிகழ்த்த முயற்சிகள் நடந்தன என்பதை யோவான் இப்பகுதியில் குறிப்பிடுகிறார். (யோவான் 10:31,39) வெறுப்பும், வன்முறையும் நிறைந்த இச்சூழலைவிட்டு, இயேசு விலகிச்சென்றார். தன் மீது வளர்ந்திருந்த ஆத்திரம், தன் சீடர்களையும் பாதிக்கும் என்பதை உணர்ந்த இயேசு, தன் சீடர்களுடன், யூதேயாவை விட்டு வெளியேறி, "யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்கு கொடுத்துவந்த இடத்திற்கு... மீண்டும் சென்று அங்கு தங்கினார்" (யோவான் 10:40) என்று நற்செய்தியாளர் யோவான் குறிப்பிட்டுள்ளார்.

எருசலேம் நகரில் மீண்டும், மீண்டும் வெறுப்பையும், வன்முறையையும் கண்டு, தளர்ந்துபோயிருந்த இயேசுவின் உள்ளம், தந்தையின் பாசத்தைச் சுவைக்க துடித்திருக்கவேண்டும். "என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்" (மாற்கு 1:11) என்று தந்தை தன்னிடம் கூறிய யோர்தான் நதியை, இயேசுவின் உள்ளம் நாடிச் சென்றது என்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே!

தந்தையின் அரவணைப்பை, அங்கீகாரத்தை இயேசு அசைப்போட்டுக் கொண்டிருந்த வேளையில், பாசம் மிகுந்த தன் தாயையும், நண்பர்களையும் இயேசு எண்ணிப்பார்த்திருக்கக் கூடும். இயேசுவின் நெருங்கிய நண்பர்களாக இருந்த ஒரு சிறு குடும்பம், அவரது மனதில் தோன்றியிருக்க வேண்டும். அதுதான், பெத்தானியாவில் வாழ்ந்த, மார்த்தா, மரியா என்ற இரு சகோதரிகளும், அவர்களின் சகோதரர் இலாசரும்.

பாசத்திற்காக இயேசு ஏக்கம் கொண்ட அவ்வேளையில், இலாசர் நோயுற்றிருக்கும் செய்தி இயேசுவை வந்தடைகிறது. இதைத் தொடர்ந்து அங்கு நிகழ்ந்ததை நாம் அடுத்தத் தேடலில் சிந்திப்போம்.

04 September 2018, 14:57