தேடுதல்

இந்தியாவில் பழங்குடியினரின் நடனம் இந்தியாவில் பழங்குடியினரின் நடனம் 

பழங்குடியின மக்கள் உலக நாளுக்கு திருப்பீடத்தின் செய்தி

பழங்குடியின மக்களின் ஆலோசனைகளுக்கும், கவலைகளுக்கும் முன்னுரிமை தராமல் மேற்கொள்ளப்படும் முன்னேற்றத் திட்டங்கள், உண்மையில் முன்னேற்றங்களே அல்ல – திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமேசான் பகுதியை மையப்படுத்தி, 2019ம் ஆண்டு, அக்டோபர் மாதம், வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஆயர்களின் சிறப்பு மாமன்றத்தை முன்னிட்டு, பழங்குடியின மக்கள் உலக நாள், கூடுதல் பொருள் நிறைந்த நாளாக விளங்குகிறது என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

உணவு மற்றும் வேளாண்மைக்கென ஐ.நா. அவை உருவாக்கியுள்ள FAO நிறுவனத்தின் கூட்டங்களில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் அருள்பணி Fernando Chica Arellano அவர்கள், ஆகஸ்ட் 9, இவ்வியாழனன்று, உலகெங்கும் சிறப்பிக்கப்பட்ட பழங்குடியின மக்கள் உலக நாளையொட்டி வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

பழங்குடியின மக்களின் எண்ணிக்கை 37 கோடிக்கும் அதிகம்

பூமிக்கோளத்தில் 5000த்திற்கும் அதிகமான பழங்குடி இனங்கள் உள்ளன என்றும், உலகெங்கும்  வாழும் பழங்குடியின மக்களின் எண்ணிக்கை 37 கோடிக்கும் அதிகம் என்றும், இந்த எண்ணிக்கை, உலக மக்கள் தொகையில் 5 விழுக்காட்டிற்கும் அதிகம் என்றும், அருள்பணி Arellano அவர்கள், தன் செய்தியின் ஆரம்பத்தில் புள்ளிவிவரங்களை வழங்கியுள்ளார்.

அமேசான் பகுதி மக்களை மையப்படுத்தி, வத்திக்கானில் மேற்கொள்ளப்படும் ஆயர்களின் சிறப்பு மாமன்றத்தைத் தொடர்ந்து, ஆப்ரிக்காவின் காங்கோ பகுதி, ஆசியாவின் பசிபிக் பகுதி மக்களையும் மையப்படுத்தி, இனி வரும் ஆண்டுகளில், ஆயர்களின் சந்திப்புகள் திட்டமிடப்படும் என்று, அருள்பணி Arellano அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடல் வழியாகவும், அமேசான் பகுதி மக்களுடன் மேற்கொண்ட சந்திப்புக்களில் வழங்கிய உரைகள் வழியாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களில் சிலவற்றை, அருள்பணி Arellano அவர்கள், தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான முன்னேற்ற திட்டங்கள் அல்ல

பழங்குடியின மக்களின் ஆலோசனைகளுக்கும், கவலைகளுக்கும், முன்னுரிமை தராமல் மேற்கொள்ளப்படும் முன்னேற்றத் திட்டங்கள், உண்மையில் முன்னேற்றங்களே அல்ல என்று, திருத்தந்தை வெளிப்படுத்தியுள்ள கருத்தை, அருள்பணி Arellano அவர்கள், சிறப்பாக சுட்டிக்காட்டியுள்ளார்.

"மனித சமுதாயத்தின் சொத்து" என்ற தலைப்பில் அருள்பணி Arellano அவர்கள், எழுதியுள்ள இக்கட்டுரை, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவில் ஆகஸ்ட் 9, இவ்வியாழன் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2018, 15:08