ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவைத் தலைவர் கர்தினால் டர்க்சன் ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவைத் தலைவர் கர்தினால் டர்க்சன் 

மனிதர்களும், அவர்கள் செய்யும் தொழில்களும் மாண்புறவேண்டும்

மனிதர்களும், அவர்கள் செய்யும் தொழில்களும் மாண்புடன் கருதப்படவேண்டும் என்பது ஒன்றே திருஅவையின் மாறாத கண்ணோட்டம் - கர்தினால் டர்க்சன்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனிதர்கள் செய்யும் தொழிலில், சுதந்திரம், படைப்பாற்றல், மற்றும் பங்கேற்றல் ஆகிய அம்சங்கள் அடங்கியிருக்க வேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறி வரும் கருத்துக்களை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், ஒரு கத்தோலிக்க இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தொழிலுக்கும், தொழிலாளர்களுக்கும் மாண்பு

உரோம் நகரில் இயேசு சபையினர் நடத்தி வரும் La Civiltà Cattolica என்ற இதழுக்கு கர்தினால் டர்க்சன் அவர்கள் வழங்கிய பேட்டியில், மனித சமுதாயத்தில், தொழிலும், தொழிலாளர்களும், உரிய மாண்பைப் பெறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மனிதர்கள் இறைவனின் படைப்பை முன்னேற்றுவதற்கு தொழில் செய்யவேண்டும் என்ற நியதி, முதல் மனிதர்களான ஆதாம், ஏவாள் இருவருக்கும் இறைவன் வழங்கிய கட்டளை என்று, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

சுதந்திரமாகத் தெரிவு செய்யப்பட்ட தொழிலில், மனிதர்கள் ஒவ்வொருவரும் மாண்புடன் ஈடுபடுவதே, முழுமையான முன்னேற்றத்தின் அடையாளம் என்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் Caritas in Veritate என்ற திருமடலில் கூறிய கருத்துக்களை, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

திருஅவையின் சமுதாயச் சிந்தனைகள்

திருத்தந்தை 13ம் லியோ அவர்கள் 1891ம் ஆண்டு Rerum Novarum என்ற திருமடல் வழியே திருஅவையின் சமுதாயச் சிந்தனைகளை வெளியிட்டதில் துவங்கி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இன்று கூறிவரும் கருத்துக்கள் முடிய, மனிதர்களும், அவர்கள் செய்யும் தொழில்களும் மாண்புடன் கருதப்படவேண்டும் என்பதே திருஅவையின் மாறாத கண்ணோட்டம் என்பதை, கர்தினால் டர்க்சன் அவர்கள் தன் பேட்டியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 August 2018, 15:55