ஏமனில் பேருந்து தாக்குதலுக்குப் பின் பயணம் மேற்கொள்ளும் சிறார் ஏமனில் பேருந்து தாக்குதலுக்குப் பின் பயணம் மேற்கொள்ளும் சிறார்  

ஏமன் சண்டையில் விதிமுறைகள் மீறப்படுகின்றன

ஏமனில், சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி படைகள், அப்பாவி பொதுமக்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தாக்குகின்றன. கொடூரமான சூழலில் திறனற்ற உணர்வு பரவியுள்ளது - ஆயர் ஹின்டெர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஏமன் நாட்டில் இடம்பெற்றுவரும் போரில், அனைத்து விதிமுறைகளும் மீறப்படுகின்றன என்றும், போரிடும் குழுக்கள், ஒன்றையொன்று குறை கூறுகின்றன என்றும், அரேபியாவின் தென் பகுதிக்கான, திருப்பீடப் பிரதிநிதி, ஆயர் பால் ஹின்டெர் அவர்கள் கூறினார்.

அரபு ஐக்கிய அமீரகம், ஓமன் மற்றும் ஏமன் நாடுகளுக்கு, திருப்பீடப் பிரதிநிதியாகப் பணியாற்றும், ஆயர் பால் ஹின்டெர் அவர்கள், ஏமனின் நிலைமை குறித்து ஆசியச் செய்தியிடம் பகிர்ந்துகொண்டபோது, ஒரு பேருந்து நிறைய பள்ளிச் சிறாரை ஏற்றிச்சென்ற வாகனம் தாக்கப்பட்டு, அதில் பயணம் செய்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது குறித்து தன் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். போர்க்கால சூழலில் அனைத்து விதிமுறைகளையும், ஏன் அடிப்படை விதிமுறைகளையும்கூட மீறுபவர்கள், உண்மையிலேயே பழிவாங்க அஞ்சாதவர்கள் மற்றும் கொள்கையில்லாதவர்கள் என்று குறை கூறியுள்ளார், ஆயர் ஹின்டெர்.

ஏமனில் வன்முறை முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்வேளை, அந்நாட்டில் செயல்படும் ஐ.நா. சிறப்பு பிரதிநிதி Martin Griffiths அவர்கள், வருகிற செப்டம்பர் 6ம் தேதி ஜெனீவாவில் புதிய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார், ஆயர் ஹின்டெர்.

2015ம் ஆண்டில் ஏமனில் சண்டை தொடங்கியதிலிருந்து, ஏறத்தாழ பத்தாயிரம் பேர் இறந்துள்ளனர். 2 கோடிப் பேர் மனிதாபிமான உதவிகளைச் சார்ந்துள்ளனர்.  1 கோடியே 78 இலட்சம் பேர் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர் மற்றும், 1 கோடியே 64 இலட்சம் பேருக்கு நலவாழ்வு பராமரிப்பு கிடையாது என்று ஐ.நா. கூறியுள்ளது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2018, 14:59