வெனிசுவேலாவில் அரசுக்கு எதிராக போராட்டம் வெனிசுவேலாவில் அரசுக்கு எதிராக போராட்டம் 

அமைதியே அனைத்தையும் சாதிக்கும்

வெனிசுவேலாவில் அடக்குமுறைகளுக்கு உள்ளாகியுள்ள மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கிறது தலத் திருஅவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பல்வேறு வன்முறைகளாலும், அரசின் அடக்குமுறைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுவேலா நாட்டில், அமைதியின் வழியாகவே அனைத்தையும் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்தவர்களாக, நீதியின் ஆட்சிக்காக அனைவரும் முயல வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

நீதியின் ஆட்சி தடைசெய்யப்பட்டு, வன்முறைகளும், கைதுகளும், சித்ரவதைகளும் அதிகரித்து வருவது குறித்து கவலையை தெரிவித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வெனிசுவேலா ஆயர்கள், ஒவ்வொரு குடிமகனின் மாண்பும், அடிப்படை உரிமைகளும் மதிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.

அதிகாரத்தை கையில் கொண்டிருப்போர், அடக்குமுறைகளில் நம்பிக்கை கொண்டு செயல்படுவது என்பது, சட்டத்தையும் மனித உரிமைகளையும் மீறுவதாகும் எனவும் கூறும் ஆயர்கள், உணவு, மருந்து, மின்சாரம், எரிவாயு,பொதுப் போக்குவரத்து, நியாயமான ஊதியம், பணவீக்கம் குறைப்பு ஆகியவைகளுக்காக மக்கள் குரல் எழுப்பி வரும் வேளையில், அடக்குமுறைகளை மட்டும் நம்பி, அரசு செயல்படுவது குறித்து கவலையை வெளியிட்டுள்ளனர்.

உண்மைக்கான தேட்டத்தில், ஒப்புரவு மற்றும் அமைதியை ஊக்குவிக்கும் பணிகளை ஆற்றிவரும் திருஅவை, மக்களின் குரலுக்குச் செவிமடுத்து, அவர்களின் துன்பங்களோடு அரசும் உடன் நடந்து வரவேண்டும் என எதிர்பார்க்கிறது என்று, வெனிசுவேலா ஆயர்களின் அறிக்கை மேலும் அழைப்பு விடுக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 August 2018, 14:11