தேடுதல்

"ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" (யோவான் 6:68) "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" (யோவான் 6:68) 

பொதுக்காலம் 21ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

ஏனைய உயிரினங்கள், சூழ்நிலையால் உந்தப்பட்டு செயல்படும் வேளையில், மனிதர்களாகிய நாம் மட்டுமே, சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு, நல்லது, கெட்டது இவற்றை உணர்ந்து, முடிவெடுத்து, செயல்படும் ஆற்றல் பெற்றுள்ளோம்.
250818 Sunday Reflection

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

கடந்த நான்கு வாரங்களாக, ஞாயிறு வழிபாடுகளில் யோவான் நற்செய்தி 6ம் பிரிவிலிருந்து நற்செய்திப் பகுதிகளைக் கேட்டு வந்துள்ளோம். இன்று ஐந்தாவது வாரமாக, இப்பிரிவின் இறுதிப் பகுதி, நமக்கு நற்செய்தியாக வழங்கப்பட்டுள்ளது.

5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு இயேசு வழங்கிய அற்புத விருந்துடன், யோவான் நற்செய்தி 6ம் பிரிவு துவங்குகிறது. இதைத் தொடர்ந்து, இயேசு வழங்கும் உரையில், கசப்பான உண்மைகளைக் கூறுகிறார். கடினமான பல சவால்களை முன்வைக்கிறார். இறுதியில், இயேசுவைப் பின்தொடர்வதா வேண்டாமா என்று முடிவெடுக்கவேண்டிய ஓர் இக்கட்டானச் சூழலுடன் இப்பிரிவு முடிவதை, இன்றைய நற்செய்தியாக வாசிக்கிறோம்.

முடிவெடுக்கும் திறமை, மனிதர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள ஓர் அழகியக் கொடை. இக்கொடையைக் குறித்து சிந்திக்க, இந்த ஞாயிறு வழிபாடு நம்மை அழைக்கிறது. ஏனைய உயிரினங்கள், சூழ்நிலையால் உந்தப்பட்டு செயல்படும் வேளையில், மனிதர்களாகிய நாம் மட்டுமே, சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு, நல்லது, கெட்டது இவற்றை உணர்ந்து, முடிவெடுத்து, செயல்படும் ஆற்றல் பெற்றுள்ளோம்.

ஆண்டவரைப் பின்தொடர்வதா, வேற்று தெய்வங்களைப் பின்தொடர்வதா என்ற கேள்வியை மக்கள் முன் வைத்து, "இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்." (யோசுவா 24:15) என்று தன் முடிவைப் பறைசாற்றும் யோசுவாவை, இன்றைய முதல் வாசகத்தில் சந்திக்கிறோம். "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" (யோவான் 6:68) என்ற துணிவான முடிவெடுக்கும் சீமோன் பேதுருவை, இன்றைய நற்செய்தியில் சந்திக்கிறோம்.

யோசுவாவும், சீமோன் பேதுருவும் கூறிய சொற்களில் காணப்படும் ஒரு பொதுவான அம்சம் நம் கவனத்தை ஈர்க்கிறது. இருவருமே, தனி மனிதர்களாக மட்டுமின்றி, தங்களைச் சார்ந்திருப்பவர்களின் சார்பாகவும் முடிவெடுக்கிறார்கள். "நான் ஆண்டவருக்கு ஊழியம் செய்வேன்" என்று யோசுவா சொல்லவில்லை. மாறாக, “நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம்” (யோசுவா 24: 15) என்று உறுதியுடன் கூறுகிறார். "வீட்டார்" என்று யோசுவா கூறியுள்ளதை, அவரது குடும்பத்தினர் என்று மட்டும் பொருள்கொள்ளத் தேவையில்லை. தன் உற்றார், உறவினர், பணியாட்கள் என்று அனைவரையும் இந்த வார்த்தையில் யோசுவா உள்ளடக்குகிறார். இதே உறுதி, சீமோன் பேதுருவின் வார்த்தைகளிலும் ஒலிக்கிறது. "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?" என்று கேட்கும் இயேசுவிடம், பேதுரு, "ஆண்டவரே, இவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், நான் யாரிடம் செல்வேன்?" என்று தன்னைப் பிரித்துப்பேசாமல், ஏனையச் சீடர்களுக்கும் சேர்த்து அவர் பதிலிறுக்கிறார்.

தங்கள் குடும்பத்தை, குலத்தை, நண்பர்கள் குழுவை முழுமையாகப் புரிந்து கொண்டவர்களே, மற்றவர்களது முழுமையான நம்பிக்கை பெற்றவர்களே, அவர்கள் சார்பில் பேசமுடியும், முடிவுகள் எடுக்கமுடியும். இத்தகைய ஆழமான புரிதலும், நம்பிக்கை உணர்வுகளும், நம் குடும்பங்களிலும், நண்பர்கள் மத்தியிலும் உள்ளனவா என்பதை ஆய்வுசெய்வது பயனுள்ள ஒரு முயற்சி.

'தாமரை இலை மேல் நீர்' போல, 'பட்டும் படாமலும்' உள்ள உறவுகள், மேற்கத்திய குடும்பங்களில் நிலவுவதைப் பார்க்கலாம். குடும்பத்தில் ஒருவர் முடிவெடுக்கும்போது, அதை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ விரும்பாமல் ஒதுங்கிவிடுவது, குடும்பங்களில் நிலவும் ஆபத்தான போக்கு. அத்தகைய ஒரு போக்கு, தற்போது, ஆசிய குடும்பங்களிலும் பரவிவருகிறதோ என்ற கவலை எழுகிறது. இந்தப் போக்கு, தவறான முடிவுகள் எடுக்க வழிவகுக்கிறது.

ஆகஸ்ட் 21, கடந்த செவ்வாய் முதல், 26 இஞ்ஞாயிறு முடிய அயர்லாந்தின் டப்ளின் மாநகரில், குடும்பங்களின் உலக மாநாடு நடைபெறுகிறது. சனி, மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார். குடும்பங்களின் உலக மாநாடு நடைபெறும் இவ்வேளையில், குடும்ப உறவுகள் வலுப்பெறவும், அனைவரும் இணைந்து, நன்மை பயக்கும் முடிவுகள் எடுக்கும் சூழல், நம்மிடையே வளரவும் வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.

சிறிதும், பெரிதுமாக, நாம், ஒவ்வொரு நாளும், முடிவுகள் எடுத்தவண்ணம் இருக்கிறோம். "நன்மை இவ்வுலகில் இன்னும் நடமாடுகிறது" என்ற தலைப்புடன் தொகுக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் சில ஆண்டுகளுக்கு முன் மின்னஞ்சலில் வலம் வந்தன. தகிக்கும் கடற்மணலில் செருப்பில்லாமல் நடக்கும் ஓர் ஏழைப் பெண்ணுக்குத் தான் அணிந்திருக்கும் காலணிகளைக் கழற்றித் தரும் ஒரு மனிதர்; கால்களை இழந்து, பலகையில் அமர்ந்தபடியே, கொட்டும் மழையில், நகர்ந்து செல்லும் வயதான ஓருவர், சாலையைக் கடப்பதற்காக தன் குடையை விரித்து அவரை அழைத்துச்செல்லும் இளம்பெண் என்று பல படங்கள் அத்தொகுப்பில் இருந்தன.

அத்தொகுப்பில் இருந்த அனைத்துப் படங்களில் இரண்டு நம் கவனத்தை அதிகம் ஈர்க்கின்றன. முதுகுத் தண்டுவடம் வளைந்து, கூனல் விழுந்திருக்கும் 97 வயதான ஒரு பெண்மணி, உடல் முழுவதும் செயலிழந்து படுத்திருக்கும் தன் 60 வயது மகனுக்கு உணவு ஊட்டுவதுபோல் அந்தக் காட்சி அமைந்திருந்தது. இவர் இதை கடந்த 19 ஆண்டுகளாகச் செய்கிறார் என்ற குறிப்பும் தரப்பட்டுள்ளது.

அடுத்த படம் ஒரு மருத்துவமனையில் எடுக்கப்பட்டிருந்தது. இறந்து கிடக்கும் ஒரு பச்சிளம் குழந்தைக்கு, ஓர் இளம் தாய், கண்ணீருடன் முத்தமிட்டு விடை பகர்வதையும், அக்குழந்தையின் படுக்கையைச் சுற்றி மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் மிகுந்த மரியாதையுடன் வணக்கம் செலுத்தியபடி நிற்பதையும் இப்படத்தில் காணலாம். அக்குழந்தைக்கு ஏன் இவ்வளவு மரியாதை என்ற கேள்வியும், விளக்கமும், படத்திற்குக்கீழ் கொடுக்கப்பட்டிருந்தன. அக்குழந்தையின் சிறுநீரகங்கள், ஈரல் இவற்றால் வேறு இரு குழந்தைகள் அடுத்த அறையில் உயிருடன் வாழ்கிறார்கள்... என்பதே அவ்விளக்கம்.

மனதைத் தொடும் இத்தருணங்கள் அனைத்திலும் சிறிதான அல்லது பெரிதான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன. மழைக்குக் குடைபிடிப்பதும், காலணிகளைத் தருவதும் சிறிய முடிவுகளாக இருக்கலாம்... ஆனால், 97 வயதானாலும், தன் மகனை பேணிக்காப்பதும், இறந்துகொண்டிருக்கும் தங்கள் குழந்தையின் உறுப்புக்களைத் தானம் செய்ய முன்வருவதும் பெரிய, உன்னத முடிவுகள்.

முடிவுகள் எடுக்கப்படும் சூழலைச் சிந்திக்கவும், இன்றைய வாசகங்கள் வாய்ப்பு தருகின்றன. எல்லாமே நலமாக, மகிழ்வாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், தேவைப்படும் சிறு, சிறு முடிவுகள், எளிதாக எடுக்கப்படும். ஆனால், நிர்ப்பந்தங்கள், இடையூறுகள், தடைகள், பிரச்சனைகள் என்று பல வடிவங்களில் சவால்கள் நம்மை நெருக்கும்போது, முடிவுகள் எடுப்பது கடினமாக இருக்கும். எதை நம்பி முடிவெடுப்பது? யாரை நம்பி முடிவெடுப்பது?

97 வயது நிறைந்த தாய், பக்கவாத நோயால், செயலிழந்து கிடக்கும் தன் மகனை ஒரு காப்பகத்தில் சேர்த்திருக்க முடியும், ஆனால், அவரைத் தானே கவனித்துக்கொள்வதாக அந்தத் தாய் முடிவெடுத்தது எந்த அடிப்படையில்?...

இறந்துகொண்டிருக்கும் தங்கள் குழந்தையின் உறுப்புக்களை மற்றக் குழந்தைகளுக்குத் தானம் செய்யத் துணிந்த பெற்றோர்கள் எந்த அடிப்படையில் இந்த முடிவை எடுத்தனர்?...

கேரள மாநிலத்தைப் புரட்டிப்போட்ட பயங்கர வெள்ளமும், அவ்வெள்ளத்தின் நடுவில் ஊற்றெடுத்த தியாகச் செயல்களும் நம் நினைவுகளில் இன்னும் பதிந்துள்ளன. இவ்வேளையில், உயிர்காக்கும் முடிவுகள் பல எடுக்கப்பட்டன. இவ்வெள்ளத்தில், தங்கள் உயிரைப் பணயம் வைத்து உதவ முடிவெடுத்த இராணுவ வீரர்களையும்; தாங்கள் இழப்பைச் சந்தித்தாலும், தங்களைவிட அதிகம் இழந்தோருக்கு உதவிக்கரம் நீட்ட முடிவெடுத்த ஆயிரமாயிரம் எளிய மக்களையும், இறைவனின் சன்னதியில் எண்ணிப்பார்த்து, அவர்களுக்காக நன்றி கூறுகிறோம்.

இவ்வெள்ளத்தில் உதவிய மீனவர்களை இன்றைய வழிபாட்டில் சிறப்பாக எண்ணிப்பார்க்கத் தோன்றுகிறது. அவர்கள் ஆற்றிய ஒப்பற்ற பணிகளுக்காக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்போவதாக கேரள மாநில முதல்வர் அறிவித்தபோது, அதை மறுத்துவிட்ட மீனவர்கள், மனிதாபிமானத்தோடு தாங்கள் மேற்கொண்ட பணிகளைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று முதல்வரிடம் விண்ணப்பித்துள்ளனர். எதையும் எதிர்பார்க்காமல், மனித நேயத்தை உயர்த்திப்பிடிக்கும் வண்ணம் செயலாற்றிய உன்னத மீனவர்கள், நம் அனைவருக்கும் பாடங்கள் புகட்டுகின்றனர்.

அந்த மீனவர்களில், மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான ஜெய்சல் (Jaisal K.P.) என்ற மீனவரின் செயல் நம் நினைவுகளில் ஆழப்பதிந்துள்ளது. உயிர் காக்கும் படகு அருகிலிருந்தாலும், அதில் ஏறுவதற்கு பெண்களால் இயலவில்லை என்பதை உணர்ந்த ஜெய்சல் அவர்கள் ஒரு முடிவெடுத்தார். உயிர்காக்கும் படகுக்கு அருகே, தன் முகம் வெள்ளநீரில் பதியும் வண்ணம் குனிந்து நிற்க, அவரது முதுகை ஒரு படிக்கட்டுபோல பயன்படுத்தி, பல பெண்கள் அந்த படகுக்குள் ஏறிச் சென்ற காட்சி, மீனவர்களின் அன்பு, தியாகம், வீரம் ஆகியவற்றிற்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்தது. மக்களை பாதுக்காக்க, தன்னையே ஒரு படிக்கட்டாக மாற்ற முடிவெடுத்த ஜெய்சல் அவர்கள், இவ்வுலகில் மனிதாபிமானம் இன்னும் உயிரோடு உள்ளது என்பதைப் பறைசாற்றும் தூதர்.

முக்கியமான முடிவெடுக்கும் சூழல்களில், எத்தனையோ பல காரணிகளைக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும், இறுதியில், நம்மையும், கடவுளையும் நம்பியே இந்த முடிவுகளை எடுக்கமுடியும். இப்படிப்பட்ட ஓர் உணர்வையே பேதுரு தன் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். “ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம்” (யோவான் 6:68-69)

"வேறு யாரிடம் செல்வோம்?" என்று பேதுரு கூறுவதை "உம்மைவிட்டால் எங்களுக்கு வேறு கதியில்லை" என்ற அவநம்பிக்கை வார்த்தைகளாகவும் நம்மால் காணமுடியும். ஆனால், பேதுருவின் நிலை அதுவல்ல. அவரும் அவரது நண்பர்களும் மீன்பிடித் தொழிலில் இருந்தவர்கள். இயேசுவின் வார்த்தைகள் கடினமானவை என்று முடிவெடுத்து, மற்ற சீடர்கள் அவரைவிட்டு விலகியபோது, பன்னிரு சீடர்களும் நினைத்திருந்தால், அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து முடிவெடுத்து, தங்கள் பழைய வாழ்வுக்குத் திரும்பியிருக்கலாம். ஆனால், கடலையும், படகையும், வலைகளையும் நம்பி அவர்கள் வாழ்ந்துவந்த அந்த பாதுகாப்பான வாழ்வை விட, இயேசுவுடன் வாழ்ந்த பாதுகாப்பற்ற வாழ்வு அவர்களது வாழ்வை பொருள் நிறைந்ததாக மாற்றியது. அந்தப் புதுவாழ்வு, உணவு, உடை, உறைவிடம், எதிர்காலச் சேமிப்பு என்று எவ்வகையிலும் உறுதியற்ற வாழ்வாக இருந்தாலும், இயேசுவின் வார்த்தைகளில் அவர்கள் அனைத்தையும் கண்டனர். இந்த உணர்வுகளைத்தான் பேதுருவின் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன.

97 வயதான போதிலும் தன் மகனைத் தொடர்ந்து காப்பாற்றும் அந்த முதுமைத் தாய், இறக்கும் நிலையில் இருந்த தங்கள் குழந்தையின் உறுப்புக்களைத் தானம் செய்த இளம் பெற்றோர், வெள்ள நீரில் தன்னையே ஒரு படிக்கட்டாக அமைத்து, மக்களைக் காத்த மீனவர் ஜெய்சல் போன்ற உன்னத உள்ளங்களின் வாழ்வால் நாமும் தூண்டப்பட வேண்டுமென இறைவனை இறைஞ்சுவோம்.

வாழ்வின் முக்கிய முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் அன்பு உள்ளங்களை இப்போது இறைவன் பாதத்திற்குக் கொணர்வோம். முக்கியமான முடிவுகள் எடுக்கவேண்டியச் சூழலில், குடும்பத்தினர் இணைந்து வந்து முடிவுகள் எடுக்கவேண்டும் என்று மன்றாடுவோம். யோசுவாவைப் போல, பேதுருவைப் போல இறைவனை நம்பி, இறைவனைச் சார்ந்து, நம் வாழ்வின் முடிவுகள் அமைய இறையருளை இறைஞ்சுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 August 2018, 14:37