Vatican News
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகளை எதிர்த்து நீதிப் போராட்டம் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகளை எதிர்த்து நீதிப் போராட்டம்  (AFP or licensors)

பொதுக்காலம் - 20ம் ஞாயிறு - நீதி ஞாயிறு : ஞாயிறு சிந்தனை

நீதி இவ்வுலகில் நிலைபெற வேண்டுமெனில், நாம் வாழும் இன்றைய சமுதாயத்தில், அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

ஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்

180818 Sundayweb

"நண்பர்களே, காலையில் நீங்கள் படுக்கையைவிட்டு எழும்போது, 'நான் இன்று என் கால்களை எடுத்துப் பொருத்திக்கொண்டால் என்ன? பொருத்தாவிட்டால்தான் என்ன?' என்ற உணர்வு உங்களுக்கு எழுந்ததுண்டா?" (“Do you ever have one of those mornings, when you just can't be bothered to put your legs on?” – Giles Duley)

இந்தக் கேள்வியை நம் முன் வைப்பவர், மனித நேயமும், சமுதாயச் சிந்தனையும் கொண்ட ஜைல்ஸ் டூலி (Giles Duley) என்ற புகைப்படக் கலைஞர். இவர் 2011ம் ஆண்டு முதல், இரு செயற்கைக் கால்களுடன் வாழ்பவர். இவரைப்பற்றி இந்த ஞாயிறு சிந்தனையில் பகிர்ந்துகொள்வதற்குக் காரணம் உண்டு. ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படும் இந்திய சுதந்திர நாளைத் தொடர்ந்துவரும் ஞாயிறை, நீதி ஞாயிறென, இந்தியத் திருஅவை சிறப்பிக்கிறது. இவ்வாண்டு ஆகஸ்ட் 19, கொண்டாடப்படும் நீதி ஞாயிறன்று, ஜைல்ஸ் டூலி அவர்களைப்பற்றி பேசுவது பொருத்தமாகத் தெரிகிறது. Ted.com என்ற இணையத்தளத்தில் இவர் வழங்கிய ஓர் உரை, நீதி ஞாயிறுக்குரிய மறையுரையைப் போல ஒலிக்கிறது.

தன் 20வது வயதில், விளம்பர உலகில், புகைப்படக் கலைஞராக, தொழிலைத் துவங்கியவர், ஜைல்ஸ். இசை உலகில் சிறந்து விளங்கிய பல புகழ்பெற்ற பாடகர்களையும், பாடகர் குழுக்களையும் படம் பிடித்து, புகழ்பெற்ற இதழ்களில் வெளியிட்டு, பரிசுகள் பல பெற்றார். பத்தாண்டுகளாக இவர் தினமும் கண்டுவந்த அந்த செயற்கையான, பளபளப்பான உலகம், இவருக்கு, சலிப்பைத் தந்தது. அந்த உலகிற்கே உரிய ஆணவம் கொண்ட நட்சத்திரங்களுடன், பலநாட்கள் மோத வேண்டியிருந்ததால், இவரது சலிப்பு, கசப்பாக மாறிவந்தது.

ஒரு நாள் இரவு, இத்தகையதொரு மோதலுக்குப் பின் வீட்டுக்கு வந்தவர், தான் வைத்திருந்த விலையுயர்ந்த ‘காமிரா’வை கோபத்துடன் கட்டிலில் எறிந்தார். ‘ஸ்ப்ரிங்’ கம்பிகளால் ஆன அந்தக் கட்டில் சன்னலுக்கருகே இருந்தது. இவர் கோபத்தில் எறிந்த காமிரா, ‘ஸ்ப்ரிங்’ கட்டிலில் விழுந்து, துள்ளி, அவர் தங்கியிருந்த பல மாடிக் கட்டிடத்தின் சன்னல் வழியே அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது. அத்தருணத்தில், தன் வாழ்வில் முக்கியமான ஒரு மாற்றம் ஏற்பட்டது என்று, ஜைல்ஸ் அவர்கள் கூறுகிறார்.

அந்த இரவுவரை, செயற்கைத்தனம் நிறைந்த ஊடக உலகை, தன் காமிராக் கண்களால் கண்டுவந்த அவர், அடுத்தநாள் முதல், இயற்கையான, உண்மை உலகை தன் சொந்தக் கண்களால் காண ஆரம்பித்தார். அந்த இயற்கை உலகில் அவர் கண்ட உண்மைகளை, புகைப்படங்களாய் பதிவுசெய்தார். உலகின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பே இல்லாமல் துன்புற்றவர்களை, படங்களில் பதிவுசெய்ய ஆரம்பித்தார்.

இந்த முயற்சி, அவரை, ஆப்கானிஸ்தானுக்கு இட்டுச்சென்றது. அங்கு, அவர் வாழ்வில், மீண்டும், ஒரு மிகப்பெரும் மாற்றம் நிகழ்ந்தது.  பல ஆண்டுகள் யுத்த பூமியாக இருந்துவரும் அந்நாட்டில், போரின் தாக்கங்களால் துன்புறும் மக்களின் கதையைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார் ஜைல்ஸ். அப்போது ஒரு நாள், பாதையில் கிடந்த நாட்டு வெடிகுண்டை இவர் மிதித்ததால், இரு கால்களையும், இடது கையையும் பாதி இழந்தார். இது நடந்தது, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம். மருத்துவமனையில் இருந்தபோது, இருமுறை இவர் மரணத்தின் வாயில்வரை சென்று திரும்பினார். இப்போது, கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, தன் சொந்த அனுபவங்களை மேடையேறி பேசிவருகிறார் ஜைல்ஸ். இவர் Ted.com என்ற இணையத்தளத்தில் வழங்கிய உரையின் ஒரு பகுதி, நீதி ஞாயிறுக்கேற்ற மறையுரைபோல் ஒலிக்கிறது. அந்த உரையில் அவர் பகிர்ந்துகொண்ட எண்ணங்கள் இதோ:

“விளம்பர உலகில் இருந்தவரை மற்றவர்களையே நான் படங்களாகப் பதிவு செய்து அவர்கள் கதைகளைச் சொல்லிவந்தேன். ஆப்கானிஸ்தானில் அன்று நிகழ்ந்த விபத்துக்குப் பின், நானே ஒரு கதையானேன். போரினால் மனிதர்களுக்கு என்ன இழப்பு நேரிடுகிறது என்பதைக் காட்ட, என் உடல், ஒரு காட்சிப் பொருளாகிவிட்டது. என் கதையை இப்போது நானே சொல்லிவருகிறேன். இந்த விபத்தால் நான் கற்றுக்கொண்ட உண்மைகளை, என் கதையில் சொல்கிறேன்.”

ஜைல்ஸ் டூலி அவர்கள் கற்றுக்கொண்ட உண்மைகள் எவை?

  • “உடல் உறுப்புக்களை இழந்தாலும், நீங்கள் வாழ்வை இழக்கவில்லை.
  • அங்கக் குறையுள்ளவர் என்று உலகம் உங்களைச் சொல்லலாம். ஆனால், அகக் குறையுள்ளவர் அல்ல, நீங்கள்.
  • எந்த நிலையில் நீங்கள் இருந்தாலும், சாதிக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்துவிட்டால், எதையும் உங்களால் செய்யமுடியும்.

இந்த விபத்துக்குப்பின், என் வாழ்வை பின்னோக்கிப் பார்த்தால், புதிரான ஓர் உண்மை புலப்படுகிறது. முழு உடலுடன் நான் வாழ்ந்தபோது அடையாத பல நல்லவற்றை இப்போது நான் அடைந்துள்ளேன்.”

இவ்வளவு உயர்வான எண்ணங்களைப் பேசும் ஜைல்ஸ் அவர்கள், மனச் சோர்வுறும் நேரங்களைப் பற்றியும் பேசியிருக்கிறார். எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும், செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் போராடவேண்டியிருக்கும் அவருக்கு, சிலநாட்களில், காலை விடியும்போது, தன் செயற்கைக் கால்களை மாட்டிக்கொண்டு, படுக்கையைவிட்டு இறங்கவேண்டுமா என்ற கேள்வி எழாமல் இல்லை. 'நான் இன்று என் கால்களை எடுத்துப் பொருத்திக்கொண்டால் என்ன? பொருத்தாவிட்டால்தான் என்ன?' என்ற உணர்வுடன் போராடியிருக்கிறார்.

இத்தனை போராட்டங்கள் மத்தியிலும், ஜைல்ஸ் அவர்கள், செல்லுமிடங்களில் எல்லாம் சொல்லிவரும் ஒரு முக்கிய கருத்து இதுதான்: "நாம் எல்லாருமே மனதுவைத்தால், இந்த உலகை மாற்றமுடியும். உலகில் நிகழும் அவலங்களை ஊடகங்கள் காட்டும்போது, அவற்றைப் பார்த்து, விரக்தியுற்று, செயலிழந்து போகாமல், அந்த அவலங்களைப்பற்றி கருத்துக்களைப் பரிமாறுவோம். மாற்றங்களைக் கொணரும் வழிகள் பிறக்கும். சிறு, சிறு காரியங்களில் மாற்றங்களை உருவாக்கினால், பெரும் மாற்றங்களும் உருவாகும் என்று நம்புவோம்" என்பதே, அவர் மீண்டும், மீண்டும் எடுத்துச்சொல்லும் முக்கியப் பாடம்.

ஊடகங்கள் காட்ட மறந்த, அல்லது, காட்ட மறுக்கும் மனிதர்களை, ஜைல்ஸ் அவர்கள், தன் புகைப்படங்கள் வழியே மக்களின் நினைவுகளில் பதிக்கிறார். அதிலும் குறிப்பாக, போரினால் தங்கள் உறுப்புக்களை இழந்தாலும், நம்பிக்கை இழக்காமல் வாழ்வைத் தொடரும் பலரின் புகைப்படங்கள், மற்றும் கதைகளை "Legacy of War" என்ற வலைத்தளம் வழியே, நமக்கு வாழ்க்கைப் பாடங்களாக்குகிறார்.

"நாம் எல்லாருமே மனதுவைத்தால், இந்த உலகை மாற்றமுடியும்... சிறு, சிறு காரியங்களில் மாற்றங்களை உருவாக்கினால், பெரும் மாற்றங்களும் உருவாகும் என்று நம்புவோம்" என்று ஜைல்ஸ் அவர்கள் கூறும் பாடத்தை, நீதி ஞாயிறின் மையப் பொருளாக நாம் எண்ணிப்பார்க்கலாம். நீதி ஞாயிறு என்றதும், கொடிபிடித்து, கோஷம் எழுப்பி, ஊர்வலம் சென்று, உரிமைகளைப் பெறுவது என்ற கோணத்தில் நம் எண்ணங்கள் ஓடலாம். இவை அனைத்தும் தேவைதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், வெளிப்படையான இம்முயற்சிகளுடன், நமது கடமை முடிந்துவிட்டால், பயனில்லை. நமது சொற்களால் நீதியைப்பற்றி முழக்கமிட்டுவிட்டு, நமது வாழ்விலும், செயல்களிலும் நீதியை செயல்படுத்தவில்லையெனில், நமக்கும், அரசியல் தலைவர்களுக்கும் வேறுபாடுகள் இருக்காது. அவர்களும் நீதியைப்பற்றி, வறியோரைப்பற்றி, வாய் நிறைய... சில நேரங்களில், வாய் கிழியப் பேசுகின்றனர். இதுவே நமது பாணியாகவும் இருந்தால் பயனில்லையே!

நீதி இவ்வுலகில் நிலைபெற வேண்டுமெனில், நாம் வாழும் இன்றைய சமுதாயத்தில், அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால், இந்த மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்? உள்ளிருந்தா? வெளியிலிருந்தா? என்பதில் கருத்து வேறுபாடுகள் பல உள்ளன. வெளியிலிருந்து மாற்றங்கள் வரவேண்டும்... பணம் படைத்தவர்கள் மாறவேண்டும்; அரசின் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டும்; அவர் மாறவேண்டும்; இவர் மாறவேண்டும்; அது மாறவேண்டும்; இது மாறவேண்டும் என்று நீளமான பட்டியல் ஒன்றை தயாரித்துக் காத்திருப்பவர்கள், நம்மில் அதிகம் பேர் உள்ளனர். உள்ளார்ந்த மாற்றங்கள் இன்றி, வெளி மாற்றங்கள் நிகழ்ந்தால், அது வெளிப்பூச்சாக மாறும் ஆபத்து உண்டு.

வெளி உலகில் நாம் காணும் குழப்பங்கள், அக்கிரமம், அநீதி இவை அனைத்துமே மனித மனங்களில் உருவாகும் எண்ணங்கள்தானே. உள்ளத்திலிருந்து கிளம்பும் இந்தக் குழப்பங்களைத் தீர்க்காமல், மாற்றங்களைக் கொணர்வதற்கு, கட்சிகள் சேர்ப்பதையும், குண்டுகள் வீசுவதையும், நம்பி வாழ்வது, புரையோடிப் போயிருக்கும் புண்ணுக்கு, ஒப்புக்காக மருந்திட்டு, கட்டு போடுவதற்குச் சமம். சமுதாயப் புண்களுக்கு, போராட்டம், உண்ணாவிரதம், மாநாடு என்று, அரசியல் தலைவர்கள் சொல்லித்தரும் மேலோட்டமான மருந்துகள் இடுவது எளிது. ஆனால், புரையோடிப் போயிருக்கும் அந்தப் புண்களைத் திறந்து, வேர்வரைச் சென்று குணமாக்குவது, கடினமானது, கசப்பானது. இப்படிப்பட்ட ஒரு கடினமான, கசப்பான உண்மையைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்லித்தருகிறார்.

5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு இயேசு உணவளித்தபோது, வயிறார உண்டவர்கள், இயேசுவை மீண்டும் தேடி வந்தனர். ஏன்? அனைவரும் சமமாக அமர்ந்து உண்ட அந்த அனுபவம், அவர்களுக்கு இனிமையாக இருந்தது. அத்தகைய சமபந்தியை, இயேசு, மீண்டும், மீண்டும், அவர்களுக்கு உருவாக்கித் தரவேண்டும் என்ற ஆவலில், அவர்கள் இயேசுவைத் தேடிவந்தனர். சமதர்ம சமுதாயம் என்ற மாற்றத்தை, மிக எளிதாக உருவாக்கும் ஒரு மந்திரவாதியாக அவர்கள் இயேசுவைக் கண்டனர். அவர்களது பார்வை சரியானது அல்ல என்று இயேசு அவர்களிடம் எச்சரிக்கை கொடுத்தார். “அப்பங்களை வயிறார உண்டதால்தான் நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள், மற்றபடி, என் சொற்களோ செயல்களோ உங்களை என்னிடம் அழைத்து வரவில்லை” என்ற எச்சரிக்கையை இரு வாரங்களுக்கு முன் மக்களுக்குக் கொடுத்தார். அதேபோல், அவர்கள் தேடும் உணவு, அவர்கள் தேடும் எளிதான வாழ்வு, ஆபத்தானது என்பதையும், வேறொரு வகையான உணவு, வேறொரு வகையான வாழ்வு உண்டு என்பதையும் சென்ற வாரமும், இந்த வாரமும் இயேசு நற்செய்தியில் எடுத்துரைக்கிறார். இடித்துரைக்கிறார்.

அவர்கள் தேடிவந்த அப்பங்களுக்குப் பதில், தன் சதையையும், இரத்தத்தையும் தருவதாகக் கூறுகிறார் இயேசு. சதை, இரத்தம், என்று இயேசு கூறிய சொற்கள், அம்மக்களை  நிலைகுலையச் செய்கின்றன. அப்பத்தால் எங்கள் பசியைப் போக்கும் என்று இயேசுவைத் தேடிவந்தால், தன் சதையையும், இரத்தத்தையும் தருவதாக இவர் கூறுகிறாரே... என்று அவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். இருந்தாலும், இயேசு, "என் சதையை உண்டு, இரத்தத்தைப் பருகினால் நிலைவாழ்வு பெறுவீர்கள்" என்ற அந்தக் கசப்பான உண்மையை மீண்டும் மீண்டும் சொல்கிறார்:

வாழ்வின் பிரச்சனைகளுக்கு மேலோட்டமான, எளிதான தீர்வுகளைத் தேடிவந்த அந்த மக்களிடம் "உலக மீட்புக்காக, சமுதாய மாற்றத்திற்காக நான் என்னையே உங்கள் உணவாக்குகிறேன். என் சதையை உண்டு, இரத்தத்தைப் பருகி, என் தியாக வாழ்வில் நீங்களும் பங்கேற்றால், நீங்கள் எதிர்பார்க்கும் சமபந்தி ஒவ்வொரு நாளும் நடக்கும், வாழ்வு நிறைவாகும்" என்ற உண்மையை, இயேசு, சென்ற ஞாயிறன்றும், இந்த ஞாயிறன்றும், சொல்லித்தருகிறார்.

சமுதாய மாற்றங்களை, நீதி நிறைந்த சமுதாயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம்மிடமும், இயேசு, இதையொத்த எண்ணங்களையேச் சொல்கிறார். மாற்றங்கள் உன்னிடமிருந்து ஆரம்பமாகட்டும், இந்த மாற்றங்கள் வெறும் வார்த்தைகளாக அல்ல, உன் சதையாக, இரத்தமாக மாறட்டும். இந்த மாற்றங்களை உருவாக்க, உன் சதையை, இரத்தத்தை நீ இழக்க வேண்டியிருக்கலாம்... என்ற சவால்களை இயேசு இன்று, இந்த நீதி ஞாயிறன்று நம்முன் வைக்கிறார். நமது பதில் என்ன?

2018ம் ஆண்டு நீதி ஞாயிறுக்கென இந்திய ஆயர் பேரவை வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி மடலின் சுருக்கம்:

"உன்னை (உங்களை) நான் மதிக்கிறேன்" (I Respect You) என்ற மையக்கருத்தை, 2018ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் நீதி ஞாயிறுக்கென, இந்திய ஆயர் பேரவை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த ஞாயிறுக்கென வெளியிடப்பட்டுள்ள மேய்ப்புப்பணி மடலில், இவ்வாண்டு சனவரி மாதம், அசீபா பானு என்ற சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமை ஆரம்பத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது. இந்தக் கொடுமைக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்கள் "உன்னை (உங்களை) நான் மதிக்கிறேன்" (I Respect You) என்ற சொற்களை, தங்கள் போராட்டங்களின் மையக்கருத்தாகக் கொண்டிருந்தனர் என்பதை, இம்மடல் கூறியுள்ளது. நாம் அளிக்கும் மதிப்பு, அல்லது, மரியாதை, நான்கு நிலைகளில் வெளியாக வேண்டும் என்று, இந்திய ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

உண்மைக் கடவுளைப் புறந்தள்ளி, ஏனைய 'கடவுள்களை' உருவாக்கிவரும் இன்றைய உலகில், உண்மைக் கடவுளுக்கு முதலிடமும், மதிப்பும் தருவது, முதல் நிலை.

வேறுபாடுகள் நிறைந்த இவ்வுலகில், அடுத்தவரை மனமார மதிப்பது, 2வது நிலை. பாலின அடிப்படையில் நிகழும் குற்றங்களைக் களைவதற்கு, பெண்கள் மீது உண்மையான மதிப்பை இந்திய சமுதாயம் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று இம்மடலில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

வெற்றியை நோக்கி வேகமாகச் செல்லும்படி உந்தித்தள்ளும் இவ்வுலகில், இந்த வேகத்தினால் சோர்ந்துபோய் ஒவ்வொருவரும் தங்களையே இழக்கின்றனர். எனவே, ஒவ்வொருவரும், நம்மை நாமே மதிப்பது மிகவும் முக்கியம் என்பது 3வது நிலை.

4வதாக, படைப்பு அனைத்தையும் மதிப்பதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

18 August 2018, 14:17