தேடுதல்

புனித பாட்ரிக் புனித பாட்ரிக் 

சாம்பலில் பூத்த சரித்திரம் : புனித பாட்ரிக் பாகம் 1

அயர்லாந்தில் வெளிநாட்டவராகப் பணியாற்றிய புனித பாட்ரிக் அவர்களுக்கு, அந்நாட்டில் மறைப்பணியாற்றுவது எளிதாக இருக்கவில்லை

மேரி தெரேசா - வத்திக்கான்

பிரிட்டனில், ஏறக்குறைய 386ம்  ஆண்டில், உரோமைய, கிறிஸ்தவப் பெற்றோருக்குப் பிறந்த புனித பாட்ரிக் அவர்கள், சிறுவயதில் போதுமான கல்வியறிவைப் பெறவில்லை. கிறிஸ்தவ விசுவாசத்திலும் வேரூன்றாமல் இருந்தார். இவர், தனது 16வது வயதில் அயர்லாந்து கடல்கொள்ளையர்களால் அயர்லாந்துக்கு அடிமையாக விற்கப்பட்டார். அந்நாட்டில் ஆறு ஆண்டுகள் அடிமையாக வேலை செய்தார். அந்த நாள்களில் அவர் ஒரு  கனவு கண்டார். அக்கனவில் தான் கேட்ட குரலின் வார்த்தைகளை நம்பி, அடிமை வாழ்விலிருந்து, ஒரு சிலரோடு கப்பலில் தப்பித்து, பிரான்ஸ் நாட்டு கடல் பகுதியில் கரையிறங்கினார். பாட்ரிக்கும், அவரோடு இருந்தவர்களும் 28 நாள்கள் பசியோடு அங்குமிங்கும் சுற்றியலைந்தனர். உணவுக்காக பாட்ரிக் செபித்தார். தன்னுடன் இருந்தவர்களையும் கடவுளில் நம்பிக்கை வைக்குமாறு வலியுறுத்தினார். அச்சமயத்தில், காட்டுப்பன்றிகள் கூட்டமாக அங்கு வந்ததைக் கண்ட அவர்களின் விசுவாசம் அதிகரித்தது. பல நாள்கள் மிகவும் கஷ்டப்பட்டு, பிரிட்டன் சென்று தன் குடும்பத்தோடு மீண்டும் இணைந்தார் பாட்ரிக். இளைஞரான பாட்ரிக், அதன் பின்னர் கிறிஸ்தவம் பற்றி கற்றார். சில ஆண்டுகள் சென்று ஒருநாள் இரவில், அவர் ஒரு காட்சி கண்டார்.

புனித பாட்ரிக் கண்ட காட்சி

Victoricus என்ற ஒருவர் அயர்லாந்திலிருந்து ஏராளமான கடிதங்களைக் கொண்டு வந்திருந்தார். அக்கடிதங்களை அவரால் கணக்கிட இயலவில்லை. அவற்றில் ஒன்றை அந்த மனிதர் பாட்ரிக் அவர்களிடம் கொடுத்தார். அந்தக் கடிதத்தை அவர் வாசிக்கத் தொடங்கியவேளை அது அயர்லாந்து மக்களின் குரலாக இருந்தது. அக்கடிதத்தின் ஆரம்பத்தை வாசித்துக்கொண்டிருந்தபோது, மேற்கு கடலுக்கு அருகிலுள்ள Voclut காடுகளுக்கு அருகில் இருப்பவர்களின் குரலைக் கேட்பதாக உணர்ந்தார். அவர்கள் எல்லாரும் ஒரே குரலில், “புனிதச் சிறுவனே நீர் மீண்டும் எம் மத்தியில் வந்து நடமாடும்” எனக் கெஞ்சியதைக் கேட்டார். இந்தக் காட்சி பாட்ரிக் மனதை ஆழமாகத் தொட, அந்தக் கடிதத்தை அவரால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. தூக்கத்திலிருந்து எழுந்து இறைவனுக்கு நன்றி செலுத்தினார். இது நடந்து பல ஆண்டுகள் சென்று, அந்தக் கனவில் வந்த மக்கள், பாட்ரிக் அவர்களிடம் விரும்பியதைப் பெற்றனர். பாட்ரிக் அவர்களின் கனவில் வந்த Victoricus என்பவர், நான்காம் நூற்றாண்டின் இறுதியில், Rouen  ஆயராகப் பணியாற்றிய, புனித Victoricus ஆக இருக்கலாம் என, A.B.E.Hood என்பவர் சொல்லியுள்ளார்.

நாள்கள் சென்றாலும், அயர்லாந்தை கிறிஸ்தவத்திற்கு மனம் மாற்ற வேண்டுமென்ற கனவை மட்டும் பாட்ரிக் அவர்கள் மறக்கவே இல்லை. சுதந்திர மனிதராக, பிரான்ஸ் நாட்டின் Auxerre சென்று கல்வி கற்று, 432ம் ஆண்டில் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். அதற்குப்பின், திருத்தந்தை முதலாம் செலஸ்தின் அவர்கள், ஆயர் பாட்ரிக் அவர்களை அயர்லாந்துக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பினார். அவர் முதலில் அயர்லாந்தில், Inver-dea ஆற்றின் முகத்துவாரத்திலுள்ள Wicklow எனுமிடத்தில் முதலில் தரையிறங்கினார். அவ்விடத்தில் வாழ்ந்த மக்கள் பாட்ரிக் அவர்களை வரவேற்கவில்லை. அதனால் அங்கிருந்து கட்டாயமாக வெளியேறி, தன்னை ஏற்கும் மக்களைத் தேடி, வடக்குப் பக்கமாகச் சென்றார் பாட்ரிக். Skerries கடல்பகுதியிலுள்ள தீவுகளில் சில நாள்கள் தங்கினார். அத்தீவுகளில் ஒன்று, புனித பாட்ரிக் பெயரால் இன்றும் அழைக்கப்படுகின்றது. இவருக்கு எதிராக மக்கள் சுமத்திய குற்றங்கள் எல்லாமே இவரின் எளிமையை ஏற்காததுபோல் இருந்தன.

புனித பாட்ரிக் மீது குற்றச்சாட்டு

எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல், எழுத்து மூலம் கொடுக்கிறார். சில பணக்காரப் பெண்கள் கொடுத்த நன்கொடைகளைத் திருப்பிக் கொடுப்பதாக எழுதிக் கொடுக்கின்றார். இவர் திருமுழுக்கு அளிக்கையில் அதற்குப் பணம் வாங்குவதற்கு மறுக்கிறார். அவருடன் துணைக்குச் செல்பவர்களுக்குப் பணம் கொடுத்து விடுகிறார்... இவைபோன்ற குற்றச்சாட்டுகளை மக்கள் நீதி விசாரணையில் தெரிவித்தனர். பாட்ரிக் அவர்கள் எழுதிய குறிப்புகளின்படி, ஆயிரக்கணக்கான மக்களுக்கு இவர் திருமுழுக்கு அளித்துள்ளார். புதிய கிறிஸ்தவக் குழுக்களை வழி நடத்துவதற்காக அருள்பணியாளர்களைத் திருநிலைப்படுத்தினார். பணக்காரப் பெண்களை மனந்திருப்பினார். அப்பெண்களில் சிலர், தங்களின் குடும்ப எதிர்ப்புக்களையும் மீறி, துறவறம் மேற்கொண்டனர். அரசர்களின் மகன்களோடும் பழகி அவர்களையும் கிறிஸ்தவத்திற்கு மனம் மாற்றினார். சிலைகளுக்கு ஊழியம் செய்வதைத் தவிர வேறு எதையும் அறியாமல் இருந்த அம்மக்கள், ஆண்டவரின் மக்களாக, இறைவனின் பிள்ளைகளாக மாறினார்கள். அயர்லாந்து தலைவர்களின் மகன்களும், மகள்களும் கிறிஸ்துவின் துறவிகளானார்கள். ஒருசமயம், இவர் எவ்வித குற்றச்சாட்டுமின்றி அறுபது நாள்கள் சிறை வைக்கப்பட்டிருந்தார். அந்நாட்டில் பல புதுமைகளையும் இவர் ஆற்றியுள்ளார். புனித பாட்ரிக் அவர்கள், ஏறக்குறைய 461ம் ஆண்டில், அயர்லாந்தில் Saul எனுமிடத்தில் இறைபதம் சேர்ந்தார். அயர்லாந்தில் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 17ம் தேதியன்று புனித பாட்ரிக் நாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 August 2018, 14:22