இத்தாலிய இளையோரிடம் பேசுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலிய இளையோரிடம் பேசுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ் 

மரண தண்டனைக்கு மறுப்பளிக்கும் திருத்தந்தை

மனித வாழ்வு புனிதமானது மற்றும், மரண தண்டனை நிறைவேற்றுதல், மனிதரின் மீறமுடியாத மாண்பின் மீது தாக்குதல் நடத்துவதாகும் என்பதால், இத்தண்டனை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மரண தண்டனை குறித்து விடுத்துள்ள அழைப்பை, இலங்கை கத்தோலிக்கர் பின்பற்றவேண்டியது இன்றியமையாதது என்று, இலங்கை மனித உரிமை ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளார்.

இலங்கையில், போதைப்பொருள் குற்றவாளிகளை, மரண தண்டனை கைதிகள் வரிசையில் வைப்பதற்கு, இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால ஸ்ரீசேனா அவர்களும், அவரது அமைச்சரவையும் தீர்மானித்திருப்பது குறித்த செய்தி, கடந்த ஜூலையில் வெளியானபோது, தான் அதிர்ச்சியடைந்ததாக, அந்த ஆர்வலர் தெரிவித்தார்.

யூக்கா செய்தயிடம் இவ்வாறு கூறியுள்ள அந்த மனித உரிமை ஆர்வலர், இலங்கை, உள்நாட்டுப் போர்களையும், கிளர்ச்சிகளையும் எதிர்கொண்டிருந்தாலும், கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக, மரண தண்டனை மீது தடை விதித்திருந்த 29 நாடுகளுள், இலங்கையும் ஒரு நாடாக இருந்தது என்று கூறினார்.

2017ம் ஆண்டில், மேலும், 106 நாடுகள் மரண தண்டனையை முற்றிலும் இரத்து செய்தன என்றும், அதே ஆண்டில், 23 நாடுகள் மரண தண்டனையை நிறைவேற்றின என்றும் அவர் தெரிவித்தார்.

மரண தண்டனையை நிறைவேற்றுவதன் வழியாக குற்றங்கள் குறைக்கப்பட்டன என்று, இலங்கை உட்பட எந்த நாடும் கூற முடியாது என்றும் உரைத்த அந்த ஆர்வலர், மரண தண்டனை நிறைவேற்றுவது, மனிதமற்றது மற்றும் நற்செய்திக்கு முரணானது என, திருத்தந்தை கூறிய பின்னர், இலங்கை கத்தோலிக்கத் திருஅவை, திருத்தந்தையின் அறிவிப்பை ஆதரித்து வெளியிட்ட அறிக்கையையும் குறிப்பிட்டார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 August 2018, 15:47