பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளர் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளர் இம்ரான் கான் 

புதிய அரசு மீது சிறுபான்மை மதத்தவர் நம்பிக்கை

பாகிஸ்தானில் அண்மையில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களில் அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் அவர்களின் பொது அறிவிப்பு குறித்து சிறுபான்மை மதத்தவர் கருத்து

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னா அவர்கள் பாதையை, தான் பின்பற்ற விரும்புவதாக, பொதுப்படையாக அறிவித்துள்ள இம்ரான் கான் அவர்கள், இந்த அறிவிப்பை செயல்படுத்தினால், பாகிஸ்தான் வரலாற்றில் பெரிய மாற்றம் வரும் என்று, தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆயர் பேரவையின் ஊடகப் பணிக்குழு செயலர் கப்புச்சின் அருள்பணி Qaisar Feroz அவர்கள், பீதேஸ் செய்தியிடம் இவ்வாறு கூறியுள்ளார்.

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் அரசியல் தலைவர்கள், நன்றாகப் படித்தவர்கள் மற்றும் அதிகத்தரம் வாய்ந்த அரசியல்வாதிகள் என்றும், இம்ரான் கான் அவர்கள், சரியான நபர்களை அமைச்சர்களாகத் தேர்வு செய்தால், அது முன்னோக்கி எடுக்கப்படும் பெரிய முயற்சியாக இருக்கும் என்றும், அருள்பணி Feroz அவர்கள் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 25ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தல்களில், 116 இடங்களில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி வெற்றியடைந்துள்ளது.

இதற்கிடையே, ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் அவர்கள், பிரதமர் வேட்பாளராக தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் நாடாளுமன்ற குழு அதிகாரப்பூர்வமாக இச்செவ்வாயன்று அறிவித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் சுதந்திர தினமான வருகின்ற 14ம் தேதி இம்ரான்கான் அவர்கள், பிரதமராக பதவி ஏற்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 August 2018, 16:05