மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் 080818 மறைக்கல்வியுரையில் திருத்தந்தை பிரான்சிஸ் 080818 

இளையோரின் தாராள மனதை வெளிப்படுத்தும் திருப்பயணம்

70,000த்திற்கும் மேற்பட்ட இளையோர் அடங்கிய அமைதிப்படை ஒன்று உரோம் நகர் நோக்கி வருகிறது - இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருஅவைக்குத் துணையாக இருக்கும் அமைதிப்படை ஒன்று உரோம் நகர் நோக்கி நடைபயணமாக வந்துகொண்டிருக்கிறது என்று, இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் குவால்தியேரோ பஸ்ஸெத்தி (Gualtiero Bassetti) அவர்கள், ஆகஸ்ட் 7, இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

16 வயது முதல், 30 வயது வரை உள்ள 70,000த்திற்கும் அதிகமான இளையோர், இத்தாலியின் அனைத்து மறைமாவட்டங்களிலிருந்தும் உரோம் நகர் நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர் என்றும், 120 ஆயர்கள், இளையோருடன், இத்திருப்பயணத்தில் இணைந்துள்ளனர் என்றும், கர்தினால் பஸ்ஸெத்தி அவர்கள் கூறினார்.

“இளையோர், விசுவாசம் மற்றும் அழைத்தலை தெளிந்து தேர்தல்”என்ற கருத்தை மையப்படுத்தி, இவ்வாண்டு அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு ஒரு தயாரிப்பாக, இளையோர், திருத்தந்தையைச் சந்தித்து, தங்கள் எண்ணங்களையும், கேள்விகளையும் அவருடன் பகிர்ந்துகொள்ள வருகின்றனர் என்று, கர்தினால் பஸ்ஸெத்தி அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.

கோடைக்காலத்தின் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல், 70,000த்திற்கும் மேற்பட்ட இளையோர் மேற்கொண்டுள்ள இத்திருப்பயணம், அவர்களது தாராள மனதையும், திருஅவை மீது கொண்டுள்ள பற்றையும் வெளிப்படுத்துகிறது என்று, கர்தினால் பஸ்ஸெத்தி அவர்கள் மகிழ்வுடன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2018, 15:08