இந்திய கத்தோலிக்க சிறார் இந்திய கத்தோலிக்க சிறார் 

இந்திய ஆயர்களின் நீதி ஞாயிறு செய்தி

இந்திய கத்தோலிக்கத் திருஅவை, ஒவ்வோர் ஆண்டும் இந்திய சுதந்திர தினத்திற்குப் பின்வரும் ஞாயிறை நீதி ஞாயிறாகக் கடைப்பிடிக்கின்றது. “நான் உன்னை மதிக்கிறேன்” என்ற தலைப்பில், இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி பணிக்குழு அலுவலகம், நீதி ஞாயிறு செய்தியை வெளியிட்டுள்ளது

மேரி தெரேசா – வத்திக்கான்

பிறரை மதிப்பது, பிறர் மீது அக்கறை காட்டுவது, மற்றும் கடவுள் நம்மிடம் ஒப்படைத்துள்ள படைப்பின் மீது அன்பு செலுத்துவதன் வழியாக, நாம் இறைவனின் நிறைவாழ்வில் பங்குகொள்கின்றோம் என்று, இந்திய கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவில், ஆகஸ்ட் 19ம் தேதி, ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும், நீதி ஞாயிறுக்கென, செய்தி வெளியிட்டுள்ள, இந்திய ஆயர் பேரவையின், நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி பணிக்குழு அலுவலகம், மதிப்பின் நான்கு நிலைகள் பற்றி விளக்கியுள்ளது.

மதிப்பு பற்றி திருவிவிலியத்தில் கொடுக்கப்பட்டுள்ள சில பகுதிகளைக் குறிப்பிட்டுள்ள அச்செய்தி, கடவுளை எவ்வாறு பின்பற்றுவது மற்றும், இன்றைய உலகில் மதிப்பை எவ்வாறு வாழ்ந்து காட்ட முடியும் என்பது பற்றி சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

முதலில் நாம் கடவுளை மதிக்க வேண்டும், இரண்டாவதாக, நம்முடன் வாழ்பவரை, கடவுளின் பிள்ளைகள் மற்றும், மனிதர்கள் என்ற முறையில், அவர்கள் இருப்பது போலவே அவர்களை மதிக்க வேண்டும், மூன்றாவதாக, நம்மையே நாம் மதிக்க வேண்டும், நான்காவதாக, கடவுளின் படைப்பை நாம் மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது, அச்செய்தி.

இந்தியத் திருஅவையின் நீதி ஞாயிறு செய்தியில், நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி பணிக்குழுவின் உறுப்பினரான, மும்பை துணை ஆயர் ஆல்வின் டி சூசா அவர்கள் கையெழுத்திட்டு, வெளியிட்டுள்ளார். (CBCI)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 August 2018, 15:24