தேடுதல்

 உலக இளையோர் தின சிலுவை  உலக இளையோர் தின சிலுவை  

இளையோர் உலக நாளில் பங்கேற்க 105 நாள் கடல்பயணம்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 17 இளையோர், பானமா நாட்டில் நிகழும் இளையோர் உலக நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள, 105 நாள் கடல்பயணம் மேற்கொள்கின்றனர்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 17 இளையோர், 2019ம் ஆண்டு சனவரி மாதம், பானமா நாட்டில் நிகழவிருக்கும் இளையோர் உலக நாள் நிகழ்வுகளில் கலந்துகொள்ள, மூன்று படகுகளில், 105 நாள் கடல்பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர் என்று, இத்தாலிய இதழ் SIR கூறியுள்ளது.

நான்கு கடல்பயண வல்லுநர்கள், மற்றும் ஓர் ஆன்மீக வழிகாட்டியுடன், பிரான்ஸ் நாட்டின் Brest துறைமுக நகரிலிருந்து, ஆகஸ்ட் 31ம் தேதி, 17 இளையோர், தங்கள் பயணத்தைக் துவக்குகின்றனர்.

பிரான்ஸ் நாட்டு ஆயர் பேரவையில், இளையோர் பணிக்கு பொறுப்பான ஆயர் Marc Aillet அவர்களின் ஆசியுடன், தங்கள் கடல்பயணத்தைத் துவக்கும் இளையோர், ஸ்பெயின் நாட்டின் Santiago de Compostela திருத்தலத்திலும், போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா அன்னை திருத்தலத்திலும் தங்கிச் செல்கின்றனர்.

ஆபத்துக்கள் நிறைந்த இந்தக் கடல் பயணத்தில், ஒவ்வொரு நாளும், செபமாலை, விவிலிய வாசகம், மற்றும் தனிப்பட்ட தியானங்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதென்றும், தங்கள் பயணத்தில், பானமா பேராயர் José Domingo Ulloa Mendieta அவர்கள் வழங்கிய அந்திகுவா அன்னை மரியாவின் திரு உருவம் தங்களுடன் பயணம் செய்யும் என்றும் இவ்விளையோர் கூறியுள்ளனர்

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2018, 15:24