பாகிஸ்தான் கர்தினால் ஜோசப் கூட்ஸ் பாகிஸ்தான் கர்தினால் ஜோசப் கூட்ஸ் 

பசுமை பாகிஸ்தான் திட்டத்தில் கர்தினால் கூட்ஸ்

பாகிஸ்தானில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கத்தில், கத்தோலிக்கத் திருஅவையும், பொது மக்கள் அமைப்புகளும் மரங்கள் நடும் முயற்சியில் இறங்கியுள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில் சுற்றுச்சுழலைப் பாதுகாப்பதற்கென, “பாகிஸ்தானுக்காக மரம் நடுங்கள்” என்ற கத்தோலிக்கத் திருஅவையின் திட்டத்தை, கராச்சி பேராயர், கர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்கள், அந்நகரின் புனித பாட்ரிக் பேராலயத்தில் ஆரம்பித்து வைத்துள்ளார்.

ஆகஸ்ட் 12, இஞ்ஞாயிறன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய, கர்தினால் கூட்ஸ் அவர்கள், மரங்கள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கின்றன என்றும், சட்டத்திற்குப் புறம்பே மரங்களை வெட்டுதல், வளிமண்டலம் உட்பட, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்றும் கூறினார்.

கராச்சி பேராலயத்தைச் சுற்றிலும், வீடுகளிலும், அதிகமான மரங்கள் நடப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்ட கர்தினால் கூட்ஸ் அவர்கள், பாகிஸ்தானுக்கு கடந்த 11 மாதங்களாக போதுமான மழை இல்லை எனவும், நாடு தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும்வேளையில், இப்பிரச்சனை மேலும் துன்பங்களை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

கராச்சி காரித்தாஸ் அமைப்பு, இதுவரை முப்பதாயிரத்துக்கும் அதிகமான மரங்களை நட்டு வைத்துள்ளது. கராச்சியில், 15 இலட்சத்துக்கு மேற்பட்ட மரங்களையும், பாகிஸ்தான் முழுவதும் ஒரு கோடி மரங்களையும் நடுவதற்கும் திட்டமிட்டுள்ளது, கராச்சி காரித்தாஸ் அமைப்பு. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 August 2018, 14:06