தேடுதல்

கர்தினால் Jean-Louis Tauran கர்தினால் Jean-Louis Tauran  

முஸ்லிம் குருக்கள் மறைந்த கர்தினால் Tauranக்கு அஞ்சலி

அமைதியை ஊக்குவித்து, பயங்கரவாதத்தைப் புறக்கணிப்பவர், எம்மதத்தவராய் இருந்தாலும், அவரை நாங்கள் மதிக்கின்றோம் என, மறைந்த கர்தினால் Tauran பற்றி பாகிஸ்தான் முஸ்லிம்கள் கூறியுள்ளனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் முன்னாள் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran அவர்கள், மதங்களுக்கிடையே பிணைப்பை ஏற்படுத்துவதற்கு உண்மையாக உழைத்தவர் என்று, பாகிஸ்தான் முஸ்லிம் குருக்கள் பாராட்டியுள்ளனர்.

மறைந்த கர்தினால் Tauran அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் லாகூர், திருஇதயப் பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு செப நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய, Allama Zubair Abid அவர்கள், எங்களைப் போன்ற மக்கள் மத்தியில் வாழ்ந்த கர்தினால் Tauran அவர்களின் இறப்பு எங்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தது என்று கூறினார்.

இஸ்லாமிய நாடான பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ள கர்தினால் Tauran அவர்கள், பல மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு எடுத்த முயற்சிகள், மிகுந்த நல்தாக்கங்களை உருவாக்கியுள்ளன என்றும், Abid அவர்கள் தெரிவித்தார்.

கர்தினால் Tauran அவர்கள், 2010ம் ஆண்டில் பாகிஸ்தான் வந்தபோது, இஸ்லாமபாத்தில், முன்னாள் அரசுத்தலைவர் Asif Ali Zardari  அவர்களைச் சந்தித்தார் என்றும், ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முன்னர், பாகிஸ்தானில், இத்தகைய பல்சமய கூட்டங்கள் இயலக்கூடாதவைகளாக இருந்தன என்றும், Abid அவர்கள் கூறினார்.

பார்க்கின்சன் நோயினால் துன்புற்ற கர்தினால் Tauran அவர்கள், தனது 75வது வயதில், கடந்த ஜூலை 5ம் தேதி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் காலமானார். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 August 2018, 15:55