கந்தமால் பத்தாமாண்டு நிறைவு திருப்பலி நிறைவேற்றிய இந்திய ஆயர்கள் கந்தமால் பத்தாமாண்டு நிறைவு திருப்பலி நிறைவேற்றிய இந்திய ஆயர்கள் 

இந்திய கிறிஸ்தவர்கள் திருத்தந்தைக்கு கடிதம்

ஒடிசா மாநிலத்தில் 2008ம் ஆண்டில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற வன்முறையில் கொல்லப்பட்டவர்கள் மறைசாட்சிகளாக அறிவிக்கப்படுமாறு திருத்தந்தைக்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான்

இந்தியாவின் கந்தமால் மாவட்டத்தில், 2008ம் ஆண்டில் கிறிஸ்தவர்க்கெதிராக இடம்பெற்ற வன்முறைக்குப் பலியான கிறிஸ்தவர்கள், விசுவாசத்தின்  மறைசாட்சிகளாக அறிவிக்கப்படுமாறு, இந்திய தேசிய கத்தோலிக்க கழகத்தின் முன்னாள் தலைவர், ஜான் தயாள் அவர்கள், திருத்தந்தைக்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஒடிசாவின் கந்தமால் மாவட்டத்தில், கிறிஸ்தவர்க்கெதிராக வன்முறைகள் இடம்பெற்ற பத்தாமாண்டு நிறைவையொட்டி, இக்கடிதத்தை வெளியிட்டுள்ள, இந்திய சமூக ஆர்வலரான ஜான் தயாள் அவர்கள், கந்தமால் கிறிஸ்தவர்களின் விசுவாசம் திருஅவையில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இத்தகைய தியாகத்தை மேற்கொண்டவர்கள், திருஅவை வரலாற்றில் மறைசாட்சிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ள ஜான் தயாள் அவர்கள், கட்டக்-புபனேஸ்வர் பேராயர், இந்தியாவின் நான்கு கர்தினால்கள், மற்றும் தலத்திருஅவைத் தலைவர்களை, இவ்விவகாரத்தில் தீவிரம் காட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் சுவாமி லக்ஷ்மானந்தா அவர்கள், 2008ம் ஆண்டு ஆகஸ்டில் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில், கிறிஸ்தவர்கள் மீது குற்றம் சுமத்தி, இந்து தீவிரவாத அமைப்பினர், அதே ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதியன்று கந்தமால் மாவட்டத்தில், வன்முறையில் ஈடுபட்டனர்.

இவ்வன்முறையில், சிறார், பெண்கள், கர்ப்பிணி பெண்கள், புதிதாகப் பிறந்த குழந்தைகள் உட்பட அறுபதாயிரத்துக்கும் அதிகமானோர் காடுகளுக்குச் சென்று ஒளிந்துகொண்டனர். அவர்களில் முப்பதாயிரம் பேர் ஓராண்டு அளவாக, அரசின் முகாம்களில் வாழ்ந்தனர். ஆறாயிரத்துக்கு அதிகமான வீடுகளும், 300க்கு அதிகமான ஆலயங்களும் அழிக்கப்பட்டன.   

மேலும் 120 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2018, 15:38