தேடுதல்

சிரியாவின் தமஸ்கு நகர் பேராலயத்தில் கிறிஸ்தவர்கள் சிரியாவின் தமஸ்கு நகர் பேராலயத்தில் கிறிஸ்தவர்கள் 

துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு உதவும் Knights of Columbus

2014ம் ஆண்டு முதல் Knights of Columbus அமைப்பினர், மத்தியக் கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்களுக்கு, 2 கோடி டாலர்கள் நிதி உதவி வழங்கியுள்ளனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மத்தியக் கிழக்குப் பகுதிகளில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில்,  Knights of Columbus அமைப்பினர், இன்னும் கூடுதலான அர்ப்பண உணர்வுடன் செயலாற்றுகின்றனர் என்று, இவ்வமைப்பின் தலைவர், கார்ல் ஆண்டர்சன் அவர்கள் கூறினார்.

ஆகஸ்ட் 7 இச்செவ்வாய் முதல், 9, இவ்வியாழன் முடிய அமெரிக்க ஐக்கிய நாட்டின் பால்டிமோர் நகரில் நடைபெறும் Knights of Columbus கூட்டத்தில், இச்செவ்வாயன்று வழங்கிய துவக்க உரையில், ஆண்டர்சன் அவர்கள் இவ்வாறு கூறினார்.

2014ம் ஆண்டு முதல் Knights of Columbus அமைப்பினர், மத்தியக் கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்களுக்கு, குறிப்பாக, சிரியா, ஈராக் நாட்டு கிறிஸ்தவர்களுக்கு, உணவு, உறைவிடம், உடை ஆகியவற்றில் 2 கோடி டாலர்கள் நிதி உதவி வழங்கியுள்ளனர் என்று ஆண்டர்சன் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்த Puerto Rico, Texas, மற்றும் Florida பகுதிவாழ் மக்களுக்கு Knights of Columbus அமைப்பினர் ஆற்றிய பணிகள் குறித்தும் தன் உரையில் குறிப்பிட்ட ஆண்டர்சன் அவர்கள், மொத்தத்தில், கடந்த ஆண்டு 18 கோடியே 50 இலட்சம் டாலர்கள் நிதி உதவிகள் உலகெங்கும் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், 2017ம் ஆண்டு, தென் கொரியாவில் Knights of Columbus அமைப்பு துவக்கப்பட்டுள்ளது என்றும், உலகெங்கும் இவ்வமைப்பினரின் எண்ணிக்கை, இதுவரை இல்லாத அளவு, 1,967,585 என உயர்த்திருப்பதாகவும் இவ்வமைப்பின் தலைவர் கார்ல் ஆண்டர்சன் அவர்கள் மகிழ்வுடன் எடுத்துரைத்தார். (CNA)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2018, 15:39