தேடுதல்

வெள்ளத்தில் கேரளா வெள்ளத்தில் கேரளா 

கேரளாவுக்காக செபிக்குமாறு தலத்திருஅவை

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேரள மக்களுக்காகச் செபித்தது மிகவும் ஆறுதலாக இருக்கின்றது, திருச்சூர் பேராயர் Thazhath

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

1924ம் ஆண்டுக்குப் பின்னர், பெரு வெள்ளத்தால் தற்போது மிகக் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்காகச் செபிக்குமாறும், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு இயலக்கூடிய உதவிகளைச் செய்யுமாறும், அம்மாநில பேராயர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.

கேரள மாநிலத்தின் வெள்ளப் பாதிப்பு, மீட்புப்பணிகள் மற்றும் இடர்துடைப்பு பணிகள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ள, திருச்சூர் பேராயர் Andrews Thazhath அவர்கள், கேரள அரசு தன்னால் இயன்ற அனைத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைச் செய்து வருகின்றது என்று கூறியுள்ளார்.

தற்போதைய நெருக்கடியான சூழலில், கத்தோலிக்கத் திருஅவை, முன்னுக்கு நின்று நிவாரணப் பணிகளை ஆற்றி வருகின்றது என்றும், கத்தோலிக்க ஆலயங்கள், பள்ளிகள், துறவு சபைகளின் இல்லங்கள், அருள்பணியாளர்களின் இல்லங்கள் ஆகிய அனைத்திலும் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், பேராயரின் அறிக்கை கூறுகின்றது.

முகாம்களில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றும் பணிகளை, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மிகவும் பாராட்டுகின்றனர் எனவும், மக்களும், இனம், மதம், மொழி வேறுபாடின்றி உதவிகளைச் செய்து வருகின்றனர் எனவும், பேராயர் Thazhath அவர்களின் அறிக்கை கூறுகின்றது.

ஆகஸ்ட் 19, ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேரள மக்களுக்காகச் செபித்தது மிகவும் ஆறுதலாக இருந்தது என்றும் பேராயர் கூறியுள்ளார்.

கேரள வரலாற்றில் முதன்முறையாக, அனைத்து 37 நீர்த்தேக்கங்களும் திறந்துவிடப்பட்டதால், ஆறுகள் நிரம்பி வழிந்து, தடம் மாறி ஓடியுள்ளன மற்றும், நிலச்சரிவுகளால், வீடுகளும், மக்களும் நீரில் அடித்துச் செல்லப்பட்டும், மண்ணில் புதைந்தும் இறந்துள்ளனர் என்றும், பேராயர் Thazhath அவர்கள் கூறியுள்ளார். (CBCI)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2018, 15:35