தேடுதல்

Vatican News
பார்வை பெற்றவர் பரிசேயர்கள் முன்  சாட்சியம் சொல்லுதல் பார்வை பெற்றவர் பரிசேயர்கள் முன் சாட்சியம் சொல்லுதல்  

புதுமைகள் : பார்வை பெறுதலும், இழத்தலும் – பகுதி 7

பார்வையற்றவாய், பிறந்தவர், உடலளவில் முதலில் பார்வை பெற்றார். பின்னர் உள்ளத்தில் ஆழமான தெளிவு பெற்றார். இதற்கு நேர் மாறாக, உடலளவில் பார்வைத்திறன் பெற்ற பரிசேயர்களோ, உள்ளத்தில், கொஞ்சம் கொஞ்சமாய் பார்வை இழந்தனர்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

விவிலியம்-புதுமைகள் 210818

சிலோவாம், அதாவது, அனுப்பப்பட்டவர் என்ற பொருள்படும் குளத்தில் கண்களைக் கழுவி, பார்வை பெற்ற மனிதர், இறைவனின் கருணையை எடுத்துரைக்க அனுப்பப்பட்டவராக மாறினார். அனுப்பப்பட்டவரின் சாட்சிய வாழ்வு, பிரச்சனையோடு ஆரம்பித்தது என்று, சென்ற வாரத் தேடலை நிறைவு செய்தோம்.

பிரச்சனை என்ன? பிரச்சனை என்ன? என்ற கேள்வியைவிட, பிரச்சனை யார்? என்ற கேள்வியே பொருத்தமாக இருக்கும். ஏனெனில் பிரச்சனை, பரிசேயர்கள்தான். காரணம் ஏதுமில்லாத நேரங்களிலேயே, பிரச்சனையை உண்டாக்கும் திறமை படைத்தவர்கள், பரிசேயர்கள். இந்தப் புதுமை, ஒய்வு நாளில் நடந்துவிட்டது. சும்மா இருப்பார்களா?

பார்வை பெற்றவர், பரிசேயர் முன்பு கூட்டிச் செல்லப்பட்டார். வழக்கு ஆரம்பமானது. அவர்கள் கேள்வி கேட்டனர். அவர் பதில் சொன்னார். அவரது பதில்களால் திருப்தியடையாத பரிசேயர்கள், அவரது பெற்றோரை வரவழைத்து விசாரித்தனர். அவர்களோ பயத்தில், அந்தப் பிரச்சனையிலிருந்து நழுவப் பார்த்தனர். பார்வையற்ற மகனுக்கு, இத்தனை ஆண்டுகள் பக்கபலமாக இருந்த பெற்றோர், பார்வை பெற்று, இறைவனின் புதுமைக்கு ஒரு சாட்சியாக மாறிய மகனுக்கு ஆதரவளிக்கத் தயங்கினர். பரிசேயரின் சட்ட திட்டங்கள், அவ்வளவு தூரம், அவர்களைப் பயமுறுத்தி, பார்வை இழக்கச் செய்திருந்தது.

பார்வை பெற்றவர், பிறந்ததுமுதல் தன் பெற்றோரையோ, பரிசேயர்களையோ பார்த்ததில்லை. இன்றுதான், முதல் முறையாக, தன் பெற்றோரையும், பரிசேயரையும், அவர் பார்க்கிறார். தங்கள் மகன் பார்வையற்றவராகப் பிறந்தபோது, அதை, இறைவன் தந்த சாபம் என்று அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சொன்ன வேளையில், தங்கள் மகனை புறக்கணிக்காமல் ஏற்றுக்கொண்ட தன் பெற்றோரை எண்ணி, அவர் பெருமை கொண்டிருந்தார். ஆனால், இன்று, பரிசேயர்களின் அச்சுறுத்தலுக்குப் பயந்து நின்ற தன் பெற்றோர்களைக் கண்டு, அவர் பரிதாபப்பட்டிருக்கவேண்டும். அதற்கு மேலாக, அவருடைய பரிதாபத்தை அதிகம் பெற்றவர்கள், பரிசேயர்கள். கடவுளுக்கும், ஆலயத்திற்கும் இவ்வளவு நெருங்கி வாழ்ந்த பரிசேயர்கள், இப்படி, கடவுளை அறியாத குருடர்களாய் இருக்கிறார்களே என்று, அவர் வேதனைபட்டிருப்பார்.

தன் ஊனக் கண்களால் இன்னும் பார்க்காத இயேசுவை, அவர், அகக் கண்களால் பார்த்துவிட்டதால், பரிசேயர்கள் கேட்ட கேள்விகள் அவரை பயமுறுத்தவில்லை.  மாறாக, அவரது சாட்சியம் படிப்படியாக தீவிரமானது. அதைக் கண்டு, அவரை, கோவிலிலிருந்து, யூத சமூகத்திலிருந்து வெளியேற்றினர் பரிசேயர்கள். அதுவரை ஒதுங்கியிருந்த இயேசு, இப்போது அவரைச் சந்தித்தார். அந்த சந்திப்பில், அம்மனிதரின் சாட்சியம் ஆழமும், முழுமையும் அடைந்தது.

படிப்படியாக பார்வை பெறுதல்

பரிசேயருடன் நிகழ்ந்த வாதத்தில், பார்வை பெற்றவர், இயேசுவைப்பற்றி சொன்ன கூற்றுகளையெல்லாம் தொகுத்து பார்த்தால், அவரது அகக்கண்கள் படிப்படியாய் இயேசுவைக் கண்டுகொண்ட புதுமையை நாம் புரிந்துகொள்ளலாம்.

9/11 - இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி ஏன் கண்களில் பூசினார்.

என்பது, பார்வைபெற்றவர் கூறும் முதல் கூற்று. அவரது சாட்சியத்தின் ஆரம்பத்தில், இயேசு எனப்படும் மனிதர் என்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்.

அடுத்தது, 9/15 - இயேசு என் கண்களில் சேறு பூசினார். என்று பரிசேயர்கள் முன் கூறுகிறார். மூன்றாம் மனிதராக, தூரமாய் இருந்த இயேசு நெருங்கி வந்ததைப் போல் அவர் உணர்ந்ததால், இயேசு என்று மட்டும் கூறுகிறார். இன்னும் சற்று நேரம் சென்று, 9/17 - அவர் ஓர் இறைவாக்கினர் என்று கூறுகிறார்.

இயேசுவை ஒரு பாவி என்று தாங்கள் கூறியது போதாதென்று, பார்வை பெற்ற அவரும் இயேசுவை பாவி என்று கண்டனம் செய்ய வேண்டுமென்று, பரிசேயர்கள் வற்புறுத்துகின்றனர். பார்வை பெற்றவர், அவர்களிடம் இறுதியாகக் கூறும் சொற்கள் வலிமைமிக்க சாட்சியச் சொற்கள்:

யோவான் 9:31-33

"பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை; இறைப்பற்றுடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவி சாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும்.  பிறவியிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே!  இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால் இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது" என்றார்.

இவ்வாறு படிப்படியாக அக ஒளி பெற்ற அவர், இறுதியில் இயேசுவைச் சந்தித்தபோது, அவரது அகம் முழுவதும் இயேசுவின் ஒளியால் நிறைந்தது. அப்பகுதியைக் கூறும் நற்செய்தி இதோ:

யோவான் 9:35-38

யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, “மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?” என்று கேட்டார். அவர் மறுமொழியாக, “ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்” என்றார். அவர், “ஆண்டவரே, நம்பிக்கைகொள்கிறேன்” என்று கூறி அவரை வணங்கினார்.

பார்வை பெற்றவரிடம் இயேசு பேசும்போது, "நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்" என்று கூறும் சொற்கள், நம் கவனத்தை ஈர்க்கின்றன. இயேசுவுக்கும், அவரால் பார்வை பெற்றவருக்கும் இடையே நிகழும் முதல் சந்திப்பு இது. அப்படியிருக்க, "நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்" என்று இயேசு குறிப்பிடுவது, புதிராக உள்ளது. ஆனால், சிறிது ஆழமாகச் சிந்தித்தால், பார்வையற்றவர், இயேசுவை, ஏற்கனவே, தன் உள்ளத்தால் பார்த்துவிட்டார் என்பதை, இயேசு அவருக்கு உணர்த்துவதுபோல் இச்சொற்கள் அமைந்துள்ளன. இயேசு என்ற மனிதர், என்று ஆரம்பித்த இம்மனிதரின் சாட்சியம், கடவுளிடமிருந்து வந்தவர் என்ற அளவு தெளிவு பெற்று, இறுதியில் இயேசுவின் முன் "ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்" என்று முழுமை அடைந்தது.

படிப்படியாக பார்வை இழத்தல்

அகமும், புறமும் பார்வைபெற்ற அந்த ஏழைக்கு நேர் மாறாக, பரிசேயர்கள் படிப்படியாக பார்வை இழக்கின்றனர். அவர்கள் பார்வைக்குத் திரையிட்டது ஒரே ஒரு பிரச்சனை. இந்தப் புதுமை, ஒய்வு நாளன்று நடந்தது என்ற பிரச்சனை. 9/16  "ஒய்வு நாள் சட்டத்தை கடைபிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது" என்று ஆரம்பிக்கும் அவர்களது எண்ண ஓட்டத்தை நற்செய்தியாளர் யோவான், கொஞ்சம், கொஞ்சமாய் வெளிக் கொணர்கிறார்.

ஒய்வு நாள் என்ற பூட்டினால் இறுக்கமாக மூடி வைக்கப்பட்ட அவர்களது மனதில் ஒளி நுழைவதற்கு வாய்ப்பே இல்லாமல் போனது. தங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்ற அந்தப் பார்வையற்ற மனிதரைக் கண்டு பயப்பட ஆரம்பித்தனர். இருளுக்கு பழகிப்போன அவர்கள் கண்களுக்கு, பார்வையற்றவர் கொண்டு வந்த ஒளி, எரிச்சலை உண்டாக்கியது. அவர்களது எரிச்சல், கோபமாக மாறி, அவர்கள், இயேசுவின் சாட்சியை வெளியே தள்ளினர்.

யோவான் 9ம் பிரிவின் இறுதியில் பரிசேயர்களுக்கும், இயேசுவுக்கும் நடந்த உரையாடலை இவ்வாறு கூறுகிறார்.

நற்செய்தி யோவான் 9/ 39-41

அப்போது இயேசு, “தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்” என்றார். அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, “நாங்களுமா பார்வையற்றோர்?” என்று கேட்டனர். இயேசு அவர்களிடம், “நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது. ஆனால் நீங்கள் ‘எங்களுக்குக் கண் தெரிகிறது’ என்கிறீர்கள். எனவே நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்” என்றார்.

பார்வையற்றவாய், பிறரது பரிதாபத்தையும், தர்மத்தையும் நம்பி இருந்தவர், உடலளவில் முதலில் பார்வை பெற்றார். பின்னர் உள்ளத்தில் ஆழமான தெளிவு பெற்றார். இதற்கு நேர் மாறாக, உடலளவில் பார்வைத்திறன் பெற்ற பரிசேயர்களோ, உள்ளத்தில், கொஞ்சம் கொஞ்சமாய் பார்வை இழந்தனர்.

உணர்வுகளால் பார்வை இழத்தல்

உள்ளத்தில் ஏற்படும், உணர்வுகளால், நாம் எப்படி பார்வை இழக்கிறோம் என்பதை பலவாறாக நாம் கூறுகிறோம். பொதுவாக, எந்த ஓர் உணர்ச்சியுமே ஓர் எல்லையைத் தாண்டும்போது, அந்த உணர்ச்சி, நம்மைக் குருடாக்கிவிடுவதாக அடிக்கடி கூறுகிறோம். "தலை கால் தெரியாமல்" ஒருவர் மகிழ்ந்திருப்பதாகக் கூறுகிறோம். கோபத்திலோ, வேறு உணர்ச்சிகளின் கொந்தளிப்பிலோ செயல்படுவோரை, "கண்ணு மண்ணு தெரியாமல்" செயல்படுவதாகக் கூறுகிறோம். ஆத்திரம் கண்களை மறைக்கிறது... எனக்குக் கோபம் வந்தா என்ன நடக்கும்னு எனக்கேத் தெரியாது... சந்தேகக் கண்ணோடு பார்க்காதே... இப்படி எத்தனை விதமான கூற்றுகள், நம் பேச்சு வழக்கில் உள்ளன.

உள்ளத்து உணர்வுகளுக்கும், கண்களுக்கும் நெருங்கிய உறவு உண்டு என்பதால்தான், ‘ஆன்மாவின் சன்னல்கள் நம் கண்கள்’ என்று சொல்வார்கள். இதையே, இயேசு தன் மலைப்பொழிவில் அழகாய் கூறியுள்ளார்.

கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும். (மத்தேயு 6 : 22)

உடலளவில் பார்வை பெற்றால் போதாது, அகத்திலும் பார்வை பெற வேண்டும் என்ற பாடத்தை இறைவன் நம் அனைவருக்கும் சொல்லித்தருகிறார். அக ஒளி பெறுவோம். அகிலத்திற்கு ஒளியாவோம். உடலளவில் பார்வைத்திறன் குறைந்தோரின் வாழ்வில் இறைவன் உள்ளொளி பெருக்கவேண்டுமென செபிப்போம். 

21 August 2018, 14:10