தேடுதல்

ஜப்பான் நினைவுச் சின்னம் ஜப்பான் நினைவுச் சின்னம் 

ஜப்பான் ஆயர்கள் – அமைதிக்காக பத்து நாள்கள்

1981ம் ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி ஹிரோஷிமாவில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், உலகின் அமைதிக்கு விடுத்த விண்ணப்பத்தையொட்டி ‘அமைதிக்காக பத்து நாள்கள்’ ஆரம்பிக்கப்பட்டது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

உலகில் அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட்டு, அமைதி ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில், ஜப்பான் ஆயர்கள், ஆகஸ்ட் 6, வருகிற திங்களன்று, “அமைதிக்காக பத்து நாள்கள்” எனப்படும் செப நடவடிக்கையைத் தொடங்கவுள்ளனர்.

இரண்டாம் உலகப் போரின்போது, 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகரிலும், ஆகஸ்ட் 9ம் தேதி நாகசாகி நகரிலும், அணுகுண்டுகள் வீசப்பட்டதன் நினைவாக, ஜப்பான் ஆயர்கள், இந்த செப நடவடிக்கையை, ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கையையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள, ஜப்பான் ஆயர் பேரவைத் தலைவரான, நாகசாகி பேராயர், Joseph Mitsuaki Takami அவர்கள், 2018ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

முதல் உலகப் போர் (11 நவம்பர் 1918) முடிந்ததன் நூறாம் ஆண்டு நிறைவு, இந்திய விடுதலையின் தந்தை மகாத்மா காந்தி அவர்கள் கொல்லப்பட்டதன் 70ம் ஆண்டு நிறைவு (30 சனவரி, 1948) ஆப்ரிக்க-அமெரிக்க குடியுரிமை இயக்கத் தலைவர் மார்ட்டின் லூத்தர் கிங் அவர்கள் கொல்லப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவு (4 ஏப்ரல் 1968) ஆகியவை, 2018ம் ஆண்டில், நினைவுகூரப்படுவதைக் குறிப்பிட்டுள்ளார் பேராயர் Mitsuaki Takami.

கடந்த ஆண்டு ஜூலையில் ஐ.நா. பொது அவை, அணு ஆயுத தடை ஒப்பந்தத்தைக் கொண்டு வந்தது, ஆனால் கடந்த ஜூலை 7ம் தேதி நிலவரப்படி, வத்திக்கான் உட்பட 11 நாடுகளே அதை அமல்படுத்தியுள்ளன என்பதையும் குறிப்பிட்டுள்ள பேராயர் Mitsuaki Takami அவர்கள், உலகில் ஆணு ஆயுதங்கள் முற்றிலும் ஒழிக்கப்பட அழைப்பு விடுத்துள்ளார். (CBCJ)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 August 2018, 16:28