தேடுதல்

முன்னாள் அரசுத்தலைவரின் துணைவியார் Simone Gbagbo உட்பட பலர் விடுதலை முன்னாள் அரசுத்தலைவரின் துணைவியார் Simone Gbagbo உட்பட பலர் விடுதலை 

அரசியல் கைதிகள் விடுதலை, அமைதிக்கு வழி

ஐவரி கோஸ்ட் நாட்டின் தற்போதைய அரசால் தொடங்கப்பட்டுள்ள ஒப்புரவு நடவடிக்கையில், நீதி அடிப்படை கோட்பாடாக அமைந்துள்ளது. இக்கோட்பாட்டின் அடிப்படையிலே தேசிய ஒப்புரவை அமைக்க முடியும் - அருள்பணி Zagore

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஐவரி கோஸ்ட் நாட்டில் அமைதிக்கு ஒரே வழி அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவது என்று, அந்நாட்டு கத்தோலிக்கத் திருஅவை உட்பட, பல்வேறு அமைப்புகள் அரசை வலியுறுத்தி வந்தவேளை, அந்நாட்டு அரசுத்தலைவர் Alassane Ouattara அவர்கள், 3,100 கைதிகளின் தண்டனை காலத்தைக் குறைத்துள்ளார் என செய்திகள் கூறுகின்றன.

ஆகஸ்ட் 7ம் தேதி இச்செவ்வாயன்று ஐவரி கோஸ்ட் நாட்டில் சிறப்பிக்கப்பட்ட, சுதந்திர தின உரையில், 3,100 கைதிகளின் தண்டனை குறைப்பு பற்றி அறிவித்தார், அரசுத்தலைவர் Ouattara,

ஐவரி கோஸ்ட் நாட்டின் முன்னாள் அரசுத்தலைவரின் துணைவியார் Simone Gbagbo உட்பட பலர் விடுதலை , போர்க்கால குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களுள், ஏறத்தாழ 800 அரசியல் கைதிகளுக்கும் மன்னிப்பு அளிப்பதற்கு அரசுத்தலைவர் தீர்மானித்திருப்பது, உண்மையான ஒப்புரவின் அடையாளமாக உள்ளது என்று, ஆப்ரிக்க மறைபோதக சபையின் அருள்பணி Donald Zagore அவர்கள் கூறினார்.

1999ம் ஆண்டில் இரத்தம் சிந்தும் வன்முறை தொடங்கியதிலிருந்து ஐவரி கோஸ்ட் நாடு, பிரிவினைகளையும், சமூக-அரசியல் வன்முறைகளையும் அனுபவித்துள்ளது என்றும், 2011ம் ஆண்டின் தேர்தலுக்குப்பின் இடம்பெற்ற வன்முறையில் ஏறத்தாழ மூவாயிரம் பேர் இறந்தனர் என்றும், அருள்பணி Zagore அவர்கள் கூறினார்.

தற்போதைய அரசின் ஒப்புரவு நடவடிக்கை ஒருபுறமிருக்க, அந்நாட்டின் நீதித்துறை பாரபட்சமாக நடந்துகொள்வது துரதிஷ்டவசமானது என, அருள்பணி Zagore அவர்கள், பீதேஸ் செய்தியிடம் கவலை தெரிவித்தார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 August 2018, 15:14