ஈராக்கின் மோசூல் நகர் கோவில் இடிபாடுகளுக்கிடையே நிகழும் வழிபாடு ஈராக்கின் மோசூல் நகர் கோவில் இடிபாடுகளுக்கிடையே நிகழும் வழிபாடு 

நினிவே சமவெளியில் நான்காம் ஆண்டு நினைவு ஊர்வலம்

ஈராக்கில், புதிய கல்வியாண்டில், கிறிஸ்தவ, இஸ்லாமிய குழந்தைகள் இணைந்து படிப்பதற்கும், அவர்களிடையே நட்புணர்வை வளர்ப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டின் நினிவே சமவெளியில் அமைந்துள்ள கரம்லெஸ் (Karamles) நகரில், ஆகஸ்ட் 6ம் தேதி திங்களன்று, கிறிஸ்தவர்கள் செப ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர் - பீதேஸ் செய்தி கூறுகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன், 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 6,7 ஆகிய இரு நாள்கள், இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள், நினிவே சமவெளி நகரங்களை ஆக்ரமித்த்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் வெளியேறிச் சென்ற நிகழ்வின் நினைவாக, இந்த செப ஊர்வலம் நடத்தப்பட்டது.

நினிவே சமவெளியில் அமைந்துள்ள Qaraqosh, Karamles, Talkief, மற்றும் Bartalla ஆகிய நகரங்களிலிருந்து வெளியேறிய கிறிஸ்தவர்களில் 300 குடுமபத்தினர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கரம்லெஸ் நகருக்குத் திரும்பிவந்து, கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடினர் என்பதை, பீதேஸ் செய்தி குறிப்பிட்டுள்ளது.

கரம்லெஸ் நகரில் நடைபெற்ற ஊர்வலம் ஒரு வெற்றி ஊர்வலம் அல்ல, மாறாக, வருங்காலத்தைக் குறித்த நம்பிக்கையையும், மகிழ்வையும் குறிக்கும் செப ஊர்வலம் என்று, இந்நகரில் குடியேறியுள்ள கிறிஸ்தவர்களுக்கு பணியாற்றும், அருள்பணி Paul Thabit Mekko அவர்கள் ஆசிய செய்திக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கரம்லெஸ் நகரில் விரைவில் துவங்கவிருக்கும் புதிய கல்வியாண்டில், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய குழந்தைகள் ஒன்றிணைந்து படிப்பதற்கும், வருங்காலத் தலைமுறையினரிடையே ஆரம்பத்திலிருந்தே நட்புணர்வை வளர்ப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அருள்பணி மெக்கோ அவர்கள் கூறினார். (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2018, 15:41