இந்தியாவில் சமூக ஆர்வலர்களை கைது செய்ததை எதிர்த்து போராட்டம் இந்தியாவில் சமூக ஆர்வலர்களை கைது செய்ததை எதிர்த்து போராட்டம் 

இயேசு சபை சமூக ஆர்வலருக்கு நெருக்கடி

இந்தியாவில் மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்போரை அச்சுறுத்தும் முயற்சிகள் இடம்பெறுள்ளன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித உரிமை ஆர்வலர்களையும், சமூக நீதிக்கென பணியாற்றுவோரையும் அச்சுறுத்தும் ஒரு முயற்சியாக, இந்தியாவில் மக்கள் பணியாற்றும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர், அல்லது, அவர்களது உறைவிடங்களில் சோதனைகள் நிகழ்ந்துள்ளன என்று இந்திய ஆயர் பேரவையின் செயலர், ஆயர் தியடோர் மாஸ்கரீனஸ் அவர்கள் கூறியுள்ளார்.

இந்தியாவின் சில மாநிலங்களில் பணியாற்றிவரும் சமூகப் பணியாளர்களின் இல்லங்களில், ஆகஸ்ட் 28, இச்செவ்வாயன்று, காவல்துறையினர் நுழைந்து, அவர்களை கைது செய்து, அவர்கள் இல்லங்களையும், அலுவலகங்களையும் கைப்பற்றி சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிகழ்வு தொடர்பாக, ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினரின் உரிமைகளுக்காக பணியாற்றிவரும், ஸ்டான் சுவாமி என்றழைக்கப்படும் இயேசு சபை அருள்பணியாளர் ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி அவர்களின் கணனி, செல்லிடப்பேசி, மற்றும் அவர் அறையில் இருந்த கோப்புகள் பலவற்றை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

2017ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி, பூனே நகரில் நிகழ்ந்த ஒரு பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து, தலித் மக்களுக்கும், மராத்தா என்ற இனத்தவருக்கும் இடையே மோதல்கள் உருவானதால், அந்நிகழ்வின் விசாரணைக்கென இந்த கைதுகள் நிகழ்ந்துள்ளன என்று காவல் துறை கூறியுள்ளது.

இந்த நிகழ்வுக்கும், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், பொதுவாக, மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்போரை அச்சுறுத்தும் ஒரு முயற்சியாக இந்த நிகழ்வுகள் இடம்பெறுள்ளன என்றும், கிறிஸ்தவ தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 August 2018, 15:15