தேடுதல்

Vatican News
மரண தண்டனை நிறைவேற்றும் இடம் மரண தண்டனை நிறைவேற்றும் இடம்  (Copyright © Ken Piorkowski 2012)

மரண தண்டனை நிறைவேற்றலை திருஅவை ஏற்காது

சிறார்க்கெதிராக பாலியல் குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது, அக்குற்றங்கள் நிறுத்தப்பட உதவுமா?

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கெதிரான பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும் சட்ட முன்வரைவுக்கு நாடாளுமன்றம் இசைவு தெரிவித்துள்ளவேளை, இந்தக் கடுமையான நடவடிக்கை, அதிகரித்துவரும் சிறார்க்கெதிரான பாலியல் குற்றங்கள் ஒழிக்கப்பட உதவுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர், இந்திய கத்தோலிக்கத் தலைவர்கள்.

இந்தியாவில், கடந்த ஜூலை 30ம் தேதி அமலுக்கு வந்துள்ள இந்தப் புதிய சட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் பொதுச் செயலர், ஆயர் தியோடர் மஸ்கரீனஸ் அவர்கள், ஒரு குற்றம் எவ்வளவு கொடியதாக இருந்தாலும், அதற்கு மரண தண்டனை வழங்குவதை, திருஅவை ஒருபோதும் ஏற்காது என்று கூறியுள்ளார்.

கத்தோலிக்கத் திருஅவை, மரண தண்டனையை எதிர்க்கின்றது எனினும், நாட்டின் சட்டத்தின் சார்பாக இருந்து அதை மதிக்கின்றது என்று கூறியுள்ள ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள், இந்திய அரசின் இந்நடவடிக்கை, இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு உதவுமா என்பது, பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்திய அரசின் இந்நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள, இந்திய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அருள்சகோதரி Mary Scaria அவர்கள், குற்றவாளிகளுக்கு, தங்கள் அன்னையர் மற்றும் சகோதரிகளை மதிப்பதற்குக் கற்றுக்கொடுக்கப்படும்வரை, பாலியல் குற்றங்களை நிறுத்த முடியாது என்று கூறியுள்ளார். (UCAN)

03 August 2018, 15:39