இந்திய சுதந்திர தினம் இந்திய சுதந்திர தினம் 

இந்திய கிறிஸ்தவர்கள் நாட்டிற்காகச் செபம்

அனைத்துக் குடிமக்களின் பேச்சு, சமய மற்றும் கலாச்சார சுதந்திரங்கள் மதிக்கப்பட வேண்டும் என்பதை, இந்திய சுதந்திர தினம், நமக்கு நினைவுபடுத்துகின்றது – ஆயர் தியோடர் மஸ்கரீனஸ்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இந்திய நாடு, அடிமை வாழ்விலிருந்து விடுதலை வாழ்வை அடைந்த நாள், சுதந்திர தினமாகும் என்று, இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலர், ஆயர் தியோடர் மஸ்கரீனஸ் அவர்கள் கூறினார்.

இந்தியாவின் 72வது சுதந்திர தினமாகிய இப்புதனன்று, புதுடெல்லி, இந்திய ஆயர் பேரவையின் தலைமை அலுவலகத்தில் திருப்பலி நிறைவேற்றி, நாட்டிற்காகச் செபித்த ஆயர் மஸ்கரீனஸ் அவர்கள், ஒவ்வொரு குடிமகனும் ஒருவரையொருவர் மதிக்கும் சூழல், நாட்டில் உருவாக்கப்பட வேண்டுமென கூறினார்.

மேலும், இத்திருப்பலி முடிந்து நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வில் உரையாற்றிய, ஆயர் பேரவை செயலகத்தின் செயலர், அருள்பணி Ahist Toppo   அவர்கள், இந்நாளில் நாட்டினர் எல்லாரும், சுதந்திரப் போராட்ட வரலாறை நினைவுகூர்ந்து, நாட்டிற்காகத் தியாகம் செய்த அனைவருக்கும் மரியாதை செலுத்துகின்றனர் என்று கூறினார்.

பன்மைத்தன்மை இந்தியாவின் இதயம் என்பதையும், ஒவ்வொரு குடிமகனும், நாட்டின் வரலாற்று மரபையும், மக்களையும் பேணிக் காத்து மதிக்க வேண்டும் எனவும், அருள்பணி Toppo   அவர்கள் கேட்டுக்கொண்டார். (CBCI)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 August 2018, 16:06