இந்திய காரித்தாஸ் கூட்டம் இந்திய காரித்தாஸ் கூட்டம் 

ஆசியாவில் குறுநில விவசாயிகளுக்கு உதவ காரித்தாஸ் திட்டம்

ஆசியாவில் ஏழை விவசாயிகளுக்கு உதவத் திட்டமிட்டுள்ள ஆசிய காரித்தாஸ், இத்திட்டத்தை முதலில் இந்தியாவில் ஆரம்பித்துள்ளது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

ஆசியாவிலுள்ள ஏறத்தாழ நாற்பதாயிரம் குறுநில விவசாயிகளுக்கு, இயற்கை முறையில் விவசாயம் செய்வதற்கு உதவும் திட்டம் பற்றிய விளக்கங்களை, புதுடெல்லியில், இவ்வாரத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் சமர்ப்பித்துள்ளது, ஆசிய காரித்தாஸ் அமைப்பு.

‘குறுநில விவசாயிகளுக்கு ஏற்ற வேளாண்மை மற்றும் பன்முகவடிவ உயிர் கூட்டமைப்பு’ (SAFBIN) என்ற தலைப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய கூட்டத்தில், முதல் கட்டமாக, இதில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு, கூடை நிறைய விதைகள் வழங்கப்பட்டன.

காரித்தாஸ் ஆஸ்ட்ரியா, காரித்தாஸ் சுவிட்சர்லாந்து ஆகிய இரு அமைப்புகளின் உதவியுடன் காரித்தாஸ் இந்தியா இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதன் வழியாக, ஏறத்தாழ பத்தாயிரம் இந்திய குறுநில விவசாயிகளுக்கு உதவத் திட்டமிட்டுள்ளது, இந்திய காரித்தாஸ்.

கடந்த ஜூன் 11ம் தேதி தொடங்கப்பட்டுள்ள SAFBIN திட்டத்தில், பங்களாதேஷ், இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தெற்காசியாவில், 2030ம் ஆண்டுக்குள் பசியை ஒழிக்கும் இலக்கைக் கொண்டுள்ள இத்திட்டம், 2022ம் ஆண்டுவரை செயலில் இருக்கும்.

தெற்காசியாவிலுள்ள குறுநில விவசாயிகள், இரண்டு ஹெக்டருக்கும் குறைவான நிலத்தையே கொண்டிருக்கின்றனர் என்றும், இதே நிலபரப்பில் தென் கொரியா மற்றும் ஜப்பானிய விவசாயிகள் சம்பாதிக்கும் அளவில், ஏனைய தெற்காசிய நாடுகளின் விவசாயிகள் சம்பாதிப்பது இல்லை என்றும், அக்கூட்டத்தில் கூறப்பட்டது. (AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2018, 15:39