பாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வு பாகிஸ்தான் சுதந்திர தின நிகழ்வு 

பாகிஸ்தானில் அனைவருக்கும் சம உரிமை அவசியம்

பாகிஸ்தான் சுதந்திர தினத்திற்கு லாகூர் பேராயர் ஷா அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்தகாலத் தவறுகளை மறுபரிசீலனை செய்வதன் வழியாகவே புதிய சமுதாயம் குறித்து கனவு காண முடியும் என்று கூறியுள்ளார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

பாகிஸ்தானில், ஆகஸ்ட் 18, வருகிற சனிக்கிழமையன்று புதிய பிரதமராக, இம்ரான் கான் அவர்கள் பதவியேற்கவிருக்கும்வேளை, நாட்டில் எல்லாருக்கும் சம உரிமை அளிக்கப்படுவதற்கு புதிய தலைமை ஆவன செய்யும்பொருட்டு, அவருக்காகச் செபிப்போம் என, லாகூர் பேராயர் செபஸ்தியான் ஷா அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆகஸ்ட் 14, இச்செவ்வாயன்று, சிறப்பிக்கப்பட்ட 71வது சுதந்திர தினத்திற்கென, லாகூர் உயர்மறைமாவட்ட கத்தோலிக்க தொலைக்காட்சியில் உரையாற்றிய பேராயர் ஷா அவர்கள், சமூக உரிமைகளின்றி நாட்டில் அமைதி இல்லையென்றும், நாட்டின் தற்போதைய பிரச்சனைக்கு, நாம் எல்லாரும் ஒன்றிணைந்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என்றும் கூறியுள்ளார்.   

சிறுபான்மையினர் நாள்

மேலும், பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில், ஆகஸ்ட் 11ம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட தேசிய சிறுபான்மையினர் நாளையொட்டி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராயர் ஷா அவர்கள், பாகிஸ்தானில் சிறுபான்மையினர், இன்னும் முறையாக நடத்தப்படவில்லை என்றும், அந்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்ட தேசிய சிறுபான்மையினர் நாள், ஒரு வெளிவேடம் என்றும் குறை கூறினார்.

சிறுபான்மையினர், சமூக உரிமைகளைப் பெறாதநிலையில், சிறுபான்மையினர் பற்றிய சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதை விலியுறுத்தும் விதமாக, இந்நாள் சமத்துவ நாள் என அழைக்கப்பட வேண்டும் என்றும், பேராயர் செபஸ்தியான் ஷா அவர்கள் கூறினார்.

லாகூரில், பாகிஸ்தான் அரசால் நடத்தப்பட்ட தேசிய சிறுபான்மையினர் நாள் நிகழ்வில் கலந்துகொள்ளாமல், அதே நாளில் அந்நகரில் மனித நண்பர்கள் அமைப்பு நடத்திய, பன்மைத்தன்மை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார், பேராயர் ஷா.

இதற்கிடையே, பாகிஸ்தான் நாட்டை உருவாக்கிய, முகமது அலி ஜின்னா அவர்கள், 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி நடைபெற்ற முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் உரையாற்றியபோது, சமய சுதந்திரம் அதிகமாக மதிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

பாகிஸ்தானிலுள்ள உங்கள் கோவில்களுக்கும், உங்கள் ஆலயங்களுக்கும், அல்லது வேறு எந்த வழிபாட்டுத்தலங்களுக்கும் நீங்கள் சுதந்திரமாகச் செல்லலாம் என்றும் தன் உரையில், ஜின்னா அவர்கள் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 August 2018, 13:59