தேடுதல்

ஜெனோவா பாலம் இடிந்து விழுந்த விபத்தில்  இறந்தவர்களுக்கு அடக்கச் சடங்கு ஜெனோவா பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களுக்கு அடக்கச் சடங்கு 

ஜெனோவா மக்கள், நம்பிக்கையை இழக்க வேண்டாம்

ஆகஸ்ட் 14ம் தேதி, ஜெனோவாவில் மொராந்தி மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்த 41 பேரில் 18 பேரின் உடல்கள் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டன. இந்த அடக்கச் சடங்கு திருப்பலியில் கலந்துகொண்ட அரசுத்தலைவர், மீட்புப்பணியாளர், மற்றும் தீயணைப்பு படையினருக்கு கர்தினால் பஞ்ஞாஸ்கோ நன்றி

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின் ஜெனோவா நகரில், Polcevera கிளை நதியின் மேல் அமைந்துள்ள நெடுஞ்சாலை மேம்பாலம், திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 41 பேர் பலியாகியுள்ளவேளை, இந்தக் கடும் துயரத்திற்கு மத்தியிலும், ஜெனோவா மக்கள், தங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை என்று, அந்நகர் கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ அவர்கள் கூறினார்.

இவ்விபத்தில் இறந்தவர்களில் 19 பேருக்கு இச்சனிக்கிழமையன்று அடக்கச்சடங்கு திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அனுதாபச் செய்தி, செபம், மற்றும் இவ்வெள்ளிக்கிழமை இரவில் தொலைபேசியில் தன்னை அழைத்து ஆறுதல் தெரிவித்தது போன்ற அனைத்தையும் நினைவுகூர்ந்தார்.

இவ்விபத்திற்குப் பின்னர் எண்ணற்றோர் எழுப்பிய செபங்களை நினைவுகூர்ந்த கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், நாம் எவ்வளவுக்கு பலவீனர்களாக உணர்கின்றோமோ, அவ்வளவுக்கு மனிதரின் பிணைப்புகள் நமக்குத் தேவைப்படுகின்றன என்று, தன் மறையுரையில் உரைத்தார்.

"Jean Nouvel" பந்தலில் நடைபெற்ற இத்திருப்பலியில், இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜோ மத்தரெல்லா, அரசின் உயர்மட்ட அதிகாரிகள் உட்பட முக்கியமான பலர் கலந்துகொண்டனர். சவப்பெட்டிகளின் மீது வெண்மைநிற பெரிய மலர்க்கொத்துக்கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும், சிலே நாட்டுக்கொடிகள், பொம்மைகள், டி-பனியன்கள் மற்றும் ஏனைய பொருள்களால் இப்பெட்டிகள் மூடப்பட்டிருந்தன.

இந்தப் பாலம், ஜெனோவா நகரின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்பதைக் குறிப்பிட்ட கர்தினால் பஞ்ஞாஸ்கோ அவர்கள், இவ்விபத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தங்கள் இடங்களுக்குத் திரும்பவும், நம்பிக்கையுடன், புதிய பாலங்களைக் கட்டியெழுப்பவும், அனைவரும் ஒன்றிணைந்து நடக்கவும் அழைப்பு விடுத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 August 2018, 15:19