தேடுதல்

Vatican News
கர்தினால் லூயிஸ் ரஃபேல் சாக்கோ  நிறைவேற்றும் திருப்பலி கர்தினால் லூயிஸ் ரஃபேல் சாக்கோ நிறைவேற்றும் திருப்பலி  (AFP or licensors)

கலாச்சாரங்களும், பாரம்பரியங்களும் காக்கப்பட வேண்டும்

ஈராக் நாட்டில் குடியிருப்பவர்களின் துன்பம் அகற்றவும், நாட்டைவிட்டு வெளியே சென்றவர்கள் திரும்பி வரவும், ஏதுவானச் சூழல்களை உருவாக்கும் தலத் திருஅவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

தங்கள் முன் நிற்கும் சவால்களையும் தாண்டி, கல்தேய வழிபாட்டுமுறை ஆயர் பேரவை, ஈராக்கில் துன்புறும் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை, கர்தினால் லூயிஸ் ரஃபேல் சாக்கோ அவர்களின் அழைப்பின் பேரில், ஈராக்கின் பாக்தாத்தில், இம்மாதம் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை கூடி விவாதித்த கல்தேய வழிபாட்டுமுறை ஆயர்கள் வெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில், ஈராக் மக்களின் துன்பங்களை அகற்றவும், நினிவே பகுதியிலிருந்தும், ஏனைய பகுதிகளிலிருந்தும் வெளியேறிய மக்கள் திரும்பி வரவும் உதவும் நோக்கத்தில், தங்களால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

கீழை நாடுகளுக்குரிய கல்தேய வழிபாட்டு முறையின் தனித்துவத்தைக் காப்பாற்றும் நோக்கத்திலும், ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரங்களையும் பாரம்பரியத்தையும் காக்கும் நோக்கத்திலும், அப்பகுதியின் அருள்பணியாளர்களையும் துறவறத்தாரையும் தயாரிக்கும் பணிகள் குறித்தும் கல்தேய ஆயர்கள் விவாதித்தனர்.

ஈராக்கில் தேசிய ஒன்றிப்பை கட்டியெழுப்பும் பாதையில் நல் மனதுடைய அனைவரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாகவும், அதற்கு நன்றியுரைப்பதாகவும் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர் ஆயர்கள்.

பாக்தாத்தில் இடம்பெற்ற கல்தேய வழிபாட்டுமுறை ஆயர்களின் கூட்டத்தில், ஆஸ்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடு, கானடா, ஐரோப்பா, ஈரான், ஈராக், லெபனன், சிரியா ஆகிய நாடுகளிலிருந்து ஆயர்கள் கலந்து கொண்டனர்.

13 August 2018, 16:19