தேடுதல்

உரோம் மக்களுக்கு மீட்பு வழங்கும் அன்னை மரியா திரு உருவம் உரோம் மக்களுக்கு மீட்பு வழங்கும் அன்னை மரியா திரு உருவம் 

பனிமய மரியன்னையின் திருவிழாவில் கர்தினால் ரில்கோ

புனித மேரி மேஜர் பசிலிக்காவின் சிறப்புத் திருவிழாவான பனிமய மரியன்னையின் திருவிழாவில் கர்தினால் ரில்கோ அவர்கள் வழங்கிய மறையுரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தன் பிள்ளைகள் இழந்துவிட்ட நம்பிக்கையை அவர்களுக்குத் திரும்ப வழங்கவும், அவர்கள் வாழ்வை மாற்றவும், ஓர் அன்னையின் கனிவுள்ள பார்வை வலிமை மிக்கதாய் அமைந்துள்ளது என்று, புனித மேரி மேஜர் பசிலிக்காவின் தலைமை அருள்பணியாளர், கர்தினால் ஸ்தனிஸ்லாவ் ரில்கோ (Stanisław Ryłko) அவர்கள் மறையுரை வழங்கினார்.

ஆகஸ்ட் 5, கடந்த ஞாயிறு, புனித மேரி மேஜர் பசிலிக்காவின் முதன்மைத் திருவிழாவான பனிமய மரியன்னையின் திருவிழா சிறப்புத் திருப்பலியை தலைமையேற்று நடத்திய கர்தினால் ரில்கோ அவர்கள், மேற்கத்திய நாடுகளில், அன்னை மரியாவுக்கென அர்ப்பணிக்கப்பட்ட முதல் பேராலயம், புனித மேரி மேஜர் பசிலிக்கா என்பதை, தன் மறையுரையில் சிறப்பாகக் குறிப்பிட்டார்.

குழந்தை இயேசு கிடத்தப்பட்டிருந்த தொழுவத்தின் ஒரு பலகையும், உரோம் மக்களுக்கு மீட்பு வழங்கும் அன்னை மரியா திரு உருவமும், புனித மேரி மேஜர் பசிலிக்காவிற்குப் பெருமை சேர்க்கும் புனிதப் பொருள்கள் என்பதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் ரில்கோ அவர்கள், ஆறுதல் வழங்கும் அன்னை மரியாவின் திரு உருவம், பல்லாயிரம் மக்களை ஒவ்வொரு நாளும் ஈர்த்து, இறைவனோடு ஒப்புரவாக்கி வருகிறது என்று கூறினார்.

352ம் ஆண்டு, ஆகஸ்ட் 5ம் தேதி, கோடைக்காலத்தில், உரோம் நகரின் ஒரு சிறு குன்றில், அன்னை மரியா அற்புதமான முறையில், பனியைப் பொழிந்து, அவ்விடத்தில் தனக்கு ஓர் ஆலயத்தை எழுப்ப கட்டளையிட்ட அந்த நிகழ்வைக் கொண்டாடும் வண்ணம், ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 5ம் தேதி, பனிமய மரியன்னை திருநாள் சிறப்பிக்கப்படுகிறது.

புனித மேரி மேஜர் பசிலிக்காவில் வணங்கப்பட்டுவரும், உரோம் மக்களுக்கு மீட்பு வழங்கும் அன்னை மரியா திரு உருவத்திற்கு முன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு திருத்தூதுப் பயணத்தின்போதும், மலர் அஞ்சலி செலுத்தி செபிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2018, 15:50