தேடுதல்

உலக இளையோர் நாளுக்காக பானமா செல்லும் பாத்திமா அன்னை உலக இளையோர் நாளுக்காக பானமா செல்லும் பாத்திமா அன்னை 

பானமா நாட்டிற்குச் செல்லும் பாத்திமா அன்னை

உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் ஒரு முக்கிய பகுதியாக, பாத்திமா திருத்தல அன்னை மரியாவின் திரு உருவம், பானமா நாட்டிற்கு கொண்டு செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பானமா நாட்டில் நிகழும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளையொட்டி, வரலாற்று சிறப்பு மிக்க பாத்திமா அன்னை மரியாவின் திரு உருவம், பானமா நாட்டிற்கு வருகை தரும் என்று பானமா பேராயர் José Domingo Ulloa Mendieta அவர்கள் அறிவித்தார்.

பாத்திமா திருத்தலம் சென்று, அன்னையை தரிசிக்கும் திருப்பயணிகள் அடையும் பரிபூரண பலனை, இளையோர் நாள் நிகழ்வுகளில் பங்கேற்கும் இளையோரும் அடையவேண்டுமென்ற நோக்கத்துடன், இந்த சிறப்பான முடிவு, பாத்திமா திருத்தல பொறுப்பாளர்களால் எடுக்கப்பட்டது என்று, பேராயர் Mendieta அவர்கள் கூறினார்.

பாத்திமா அன்னையை நேரில் கண்ட அருள்சகோதரி லுச்சியா அவர்கள் வழங்கிய விவரங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாத்திமா அன்னையின் திருஉருவம், 1947ம் ஆண்டு, மே மாதம் 13ம் தேதி, முதன் முதலாக மக்களின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பல ஆண்டுகள், பாத்திமா அன்னையின் திரு உருவம் உலகின் 64 நாடுகளுக்கு, அமைதி, அன்பு, ஆகிய செய்திகளைத் தாங்கி, பவனியாகக் கொண்டு செல்லப்பட்டது.

மிக முக்கியமான தருணங்களில் மட்டுமே இந்த திரு உருவம் பாத்திமாவிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படும் என்ற முடிவு 2000மாம் ஆண்டு எடுக்கப்பட்டது.

இளையோரின் உலக நாள் நிகழ்வுகள் மிக முக்கியமான தருணம் என்பதாலும், இளையோர் நாள் நிகழ்வுகளை உருவாக்கிய புனித திருத்தந்தை 2ம் ஜான்பால், பாத்திமா அன்னை மீது மிகுந்த பற்றுகொண்டவர் என்பதாலும், இத்திரு உருவம் பானமா நாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது என்று, பாத்திமா திருத்தல முதன்மை அருள்பணியாளர் Carlos Cabecinhas அவர்கள் கூறினார்.

2019ம் ஆண்டு சனவரி 22ம் தேதி முதல், 27ம் தேதி முடிய நடைபெறும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளையொட்டி, சனவரி 21ம் தேதி, பாத்திமா அன்னையின் திரு உருவம் பானமா நாட்டை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

27ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் நிறைவுத் திருப்பலியில் பீடத்தின் அருகே வைக்கப்படும் பாத்திமா அன்னையின் திரு உருவம், சனவரி 29ம் தேதி மாலை, பானமா நாட்டிலிருந்து, மீண்டும், போர்த்துக்கல் நாட்டிற்கு திரும்பும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 August 2018, 15:45