தேடுதல்

Vatican News
இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கோவில் கோபுரம் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கோவில் கோபுரம்  (AFP or licensors)

திருப்பீடத்துடன் உறவை வலுப்படுத்த ஆர்த்தடாக்ஸ் சபை

இன்றைய சமுதாயத்தில், கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவது மற்றும், பாரம்பரிய கிறிஸ்தவ விழுமியங்களைப் பாதுகாப்பது என்ற தலைப்பில், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை, கத்தோலிக்கருக்குப் பயிற்சியளித்து வருகிறது.

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

திருப்பீடத்திற்கும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைக்கும் இடையே, கல்வி மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை மேலும் ஊக்குவிக்கும் நோக்கத்தில், மாஸ்கோவில், கத்தோலிக்கத் திருஅவையின் பிரதிநிதிகளுக்கு, பயிற்சி பாசறை ஒன்றை ஆகஸ்ட் 24, இவ்வெள்ளிக்கிழமையன்று ஆரம்பித்துள்ளது, மாஸ்கோ முதுபெரும்தந்தை அலுவலகம்.

Mondo Russo அறக்கட்டளை, Urbi et Orbi கத்தோலிக்க பிறரன்பு அறக்கட்டளை ஆகிய இரு அமைப்புக்களின் நிதியுதவியால் நடத்தப்படும் இப்பயிற்சி, வருகிற செப்டம்பர் 2ம் தேதி நிறைவடையும்.

பிரெஞ்ச் ஆயர் பேரவையின் கிறிஸ்தவ ஒன்றிப்பு பணிக்குழுத் தலைவரான, Saint Die 'des Vosges ஆயர் Didier Berthet அவர்கள் தலைமையில், ஏறத்தாழ 15 கத்தோலிக்க அருள்பணியாளர்கள் மற்றும், மாணவர்கள், இப்பயிற்சியில் கலந்துகொள்கின்றனர்.

2016ம் ஆண்டிலிருந்து, இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபை, கத்தோலிக்கத் திருஅவையோடு, இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை ஆற்றத் தொடங்கியுள்ளது என்றுரைத்த மாஸ்கோ முதுபெரும்தந்தை அலுவலகம், ஆர்த்தாடக்ஸ் கிறிஸ்தவம் மற்றும், இக்காலத்திய இரஷ்ய கலாச்சாரம் பற்றிய அறிவை ஆழப்படுத்தும் நோக்கத்தில் இப்பயிற்சி வழங்கப்படுகின்றது என்றும் தெரிவித்தது. (AsiaNews)

24 August 2018, 15:37