வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட வீடுகள் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட வீடுகள் 

தலத்திரு அவையின் மீட்புப் பணிகள்

பெருமழையால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுடன் உடனிருந்து உதவி வரும் தலத்திருஅவை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

கொலம்பியாவின் தொடர் மழையால் Puerto Carreño பகுதியில் ஆறாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பூர்வீக குடிமக்களிடையே திருஅவையின் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும், அறிவித்துள்ளது அந்நாட்டு திருஅவை.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெனிசுவேலா, கொலம்பியா ஆகிய நாடுகளின் எல்லையில் உள்ள Puerto Carreñ  நகரில் பாயும் மூன்று பெரிய ஆறுகளும் தங்கள் கொள்ளளவைவிட அதிகமாக நிரம்பி வழிந்து,  ஏறத்தாழ 15 மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக கவலையை வெளியிட்டார், அப்பகுதி ஆயர் Francisco Antonio Ceballos Escobar.

கடந்த சில நாட்களாக நீர் மட்டம் பெருமளவாக உயர்ந்துவரும் நிலையில், பல்வேறு துன்பங்களை அனுபவித்துள்ள மக்கள், அத்தண்ணீர் வடிந்த பின்னரும், கொசுக்கள், நோய்கள் மற்றும் ஏனைய நல ஆதரவுப் பிரச்னைகளால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது என்றார் ஆயர்.

பாதிக்கப்பட்டுள்ள ஆறாயிரம் குடும்பங்களுக்கும் உதவி வந்தாலும், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள பூர்வீகக் குடிமக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கள் பணிகளை ஆற்றி வருவதாக ஆயர் அறிவித்தார்.

இதேபோல், தென்பகுதியிலும் பெருமழையால் 14 ஆயிரம் குடும்பங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கொலம்பியத் திருஅவை அறிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2018, 16:05