கேரளாவில் வெள்ளப் பெருக்கு கேரளாவில் வெள்ளப் பெருக்கு 

வெள்ள நிவாரணப் பணிகளில் திருஅவை தீவிரம்

கேரளாவில் இடம்பெற்றுவரும் வரலாறு காணாத கன மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணப் பணிகளில் கத்தோலிக்கத் திருஅவையின் நிறுவனங்கள் தீவிரமாய் ஈடுபட்டுள்ளன

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

கேரளாவில் கடந்த நூறு ஆண்டுகளில், முதன்முறையாக, இவ்வாண்டின் பருவமழை மிகத் தீவிரமடைந்து, கடும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளவேளை, பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அம்மாநிலத்தின் 41 கத்தோலிக்க மறைமாவட்டங்களும், தங்களின் பள்ளிகளையும், ஆலயங்களையும், துறவு சபைகளும் தங்களின் இல்லங்களையும், பள்ளிகளையும், ஏனைய கட்டடங்களையும் திறந்து விட்டுள்ளன.

கேரளாவின் 33 அணைகளும் ஆகஸ்ட 13ம் தேதியிலிருந்து நிரம்பிவழியத் தொடங்கியதால், அவற்றைத் திறந்துவிட்ட நிலையில், அம்மாநிலத்தின் 44 ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வீடுகளையும், வயல்களையும், சாலைகளையும் நீரால் மூடியுள்ளன. குன்றுப் பகுதிகளில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இப்பேரிடரில் 300க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் மற்றும் இதுவரை ஏறத்தாழ இரண்டு இலட்சத்து 23 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். 50,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 1,568 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், கேரள காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் ஜார்ஜ் வேட்டிக்கட்டில் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் நிவாரணப் பணிகளை முன்னின்று வழிநடத்தி வருகிறார் என, யூக்கா செய்தி கூறுகிறது.    

இதற்கிடையில் அடுத்த சில நாட்களில் கேரளா முழுவதும் மழை படிப்படியாக குறையும் எனவும், ஒரு சில இடங்களில் மட்டும் கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு, பெருமளவில் வெள்ள நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளவேளை, தேவகோட்டையில் சிறுமிகள், தங்களின் உண்டியல் சிறுசேமிப்புக்களை வழங்கியுள்ளனர். (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 August 2018, 15:41