தேடுதல்

புனித பாட்ரிக் புனித பாட்ரிக் 

சாம்பலில் பூத்த சரித்திரம் – புனித பாட்ரிக் நாள்

புனித பாட்ரிக், ஒரு சமயம் ஒரு குன்றின் உச்சியில் நாற்பது நாள்கள் உண்ணா நோன்பிருந்து செபித்துக்கொண்டிருந்தவேளையில், பாம்புகள் அவரைத் தாக்கியுள்ளன. அவர் அவற்றைக் கடலில் துரத்திவிட்டார். இதனால் அயர்லாந்து நாட்டில் பாம்புகள் இல்லை எனச் சொல்லப்படுகின்றது

மேரி தெரேசா - வத்திக்கான்

புனித பாட்ரிக் அவர்கள், ஒருநாள் தான் கண்ட கனவினால், அயர்லாந்து நாட்டை கிறிஸ்தவத்திற்கு மாற்றுவதில், மாற்றுச்சிந்தனையின்றி இருந்தார். அதனால்,  திருத்தந்தை முதலாம் செலஸ்தீன் அவர்கள், தன்னை அயர்லாந்துக்கு நற்செய்தி அறிவிக்க அனுப்பியபோது அதை உடனடியாக ஏற்றுச் சென்றார் பாட்ரிக்.  அயர்லாந்து தீவில் அவர் முதலில் சென்று இறங்கிய இடத்தின் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமல் அங்கிருந்து விரட்டி விட்டனர். பாட்ரிக் அவர்கள், மனம் தளராமல் தொடர்ந்து வடக்கு நோக்கி பயணித்து தன்னை ஏற்கும் ஊர் மக்கள் மத்தியில் கிறிஸ்துவை அறவிக்கத் தொடங்கினார். புனித பாட்ரிக் பற்றி அயர்லாந்தில் பல கதைகள் சொல்லப்படுகின்றன. அந்நாட்டில் அவர் ஆற்றிய மிகப்பெரிய புதுமை, அந்த நாட்டு மக்களை அந்நியக் கடவுள் வழிபாட்டிலிருந்து மனந்திருப்பி, கிறிஸ்துவைப் பின்பற்றச் செய்ததாகும். கி.பி.432ம் ஆண்டில் அயர்லாந்து சென்ற அவர், ஏறத்தாழ 461ம் ஆண்டு, மார்ச் 17ம் தேதி, அந்நாட்டின் Saul தீவில் காலமானார். இப்புனிதர் அந்நாட்டில் மறைப்பணியாற்றிய காலத்தில், 300க்கும் மேற்பட்ட ஆலயங்களைக் கட்டினார். ஒரு இலட்சத்து இருபதாயிரத்துக்கு மேற்பட்ட மக்களுக்குத் திருமுழுக்கு அளித்தார். ஆயினும் அவர் மிக ஏழையாகவே இறந்தார். அயர்லாந்து மக்கள் மத்தியில் இப்புனிதர் எவ்வளவு மதிக்கப்படுகிறார் என்றால், அந்நாட்டினர், ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளாக, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 17ம் தேதி பாட்ரிக் நாள் என்று சிறப்பிக்கின்றனர்.

புனித பாட்ரிக் ஆற்றிய அற்புதங்கள்

புனித பாட்ரிக் அவர்கள், அயர்லாந்தில் வாழ்ந்த காலத்தில் பல புதுமைகளை ஆற்றியிருக்கிறார். இறந்த குதிரை ஒன்றுக்கு மீண்டும் உயிர் கொடுத்த புதுமை உட்பட, பெண்கள், குழந்தைகள், துறவிகள், இளவரசர்கள், இளவரசிகள் போன்ற, பலருக்கு உயிர் கொடுத்தார் என்று, குறைந்தது 33 புகழ்பெற்ற கதைகள் அவர் பற்றிச் சொல்லப்படுகின்றன. இவர் செய்த ஒவ்வோர் அற்புதமும் மக்கள் மத்தியில் கிறிஸ்தவ விசுவாசத்தைப் புதுப்பித்து, நன்மைத்தனத்தையும் மீட்பையும் கொண்டுவந்துள்ளது. ஒரு சமயம் கப்பல் பயணிகள் உணவின்றி பசியால் மிகவும் வாடினர். அச்சமயத்தில் பாட்ரிக், அப்பயணிகளிடம், கடவுளில் நம்பிக்கை வையுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். திடீரென பன்றிகள் கூட்டம் அவர்கள்முன் வந்தது. ஒருசமயம், பாட்ரிக்கின் அத்தை வளர்த்த பல பசுக்கள் பைத்தியம் பிடித்து திரிந்தன. அவற்றைக் குணப்படுத்தினார் அவர். இன்னொரு சமயம் இவரின் வளர்ப்புத் தந்தை திடீரென இறந்துவிட்டார். அவருக்கு மீண்டும் வாழ்வளித்தார். பாட்ரிக்கின் சகோதரி தடுமாறி விழுந்து தலையில் அடிபட்டு இறந்த நிலையில், அச்சகோதரியின் நெற்றியில் சிலுவை வரைந்து மறுவாழ்வு பெறச் செய்தார். பாட்ரிக் அவர்கள், ஒருசமயம் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தினார்.

புனித பாட்ரிக், அயர்லாந்திலுள்ள ஷாம்ராக்ஸ் இலையை வைத்து,  மூவொரு கடவுள் பேருண்மையை விளக்கினார் எனச் சொல்லப்படுகிறது. இந்த இலை மூன்று பெரிய இதழ்களைக்கொண்ட மணல் புல்லாகும். புனித பாட்ரிக் இறந்த மார்ச் 17ம் தேதி, அயர்லாந்தில் பாட்ரிக் நாளாகச் சிறப்பிக்கப்படுகிறது. 1903ம் ஆண்டிலிருந்து இந்நாள் தேசிய விடுமுறையாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் அயர்லாந்து மக்கள் எல்லாரும் பச்சை நிறத்தில் ஆடையணிவார்கள். பச்சை பீர், ஷாம்ராக்ஸ் மற்றும் அணிவகுப்புடன் நகரங்கள் மின்னும். கடந்த 2017ம் ஆண்டில், புனித பாட்ரிக் தினத்தை முன்னிட்டு உலகப் புகழ்பெற்ற இடங்கள், பச்சை வண்ண விளக்குகளால் மின்னின. சீன பெருஞ்சுவர், உரோம் நகரின் கொலோசியம், ரியோ டி ஜெனிரோவில் உள்ள மீட்பர் கிறிஸ்து உருவம், பைசா நகரின் சாய்ந்த கோபுரம், துபாய் அரபு அமீரகம், நயாகரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில், அடையாளச் சின்னங்களாகப் போற்றப்படும் 275 பல்வேறு கட்டடங்கள், பாரம்பரிய மிக்க இடங்களில் பசுமையை உணர்த்தும் விதமாக பச்சை வர்ண விளக்கு ஒளியில் மின்னியது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

புனித பாட்ரிக், ஒரு சமயம் ஒரு குன்றின் உச்சியில் நாற்பது நாள்கள் உண்ணா நோன்பிருந்து செபித்துக்கொண்டிருந்தார். அச்சமயத்தில் பாம்புகள் அவரைத் தாக்கியுள்ளன. எனவே அவர் அவற்றைக் கடலில் துரத்திவிட்டார். இதனால் அயர்லாந்து நாட்டில் பாம்புகள் இல்லை எனச் சொல்லப்படுகின்றது. மேலும், புனித பாட்ரிக் அவர்கள் அயர்லாந்துக்கு நற்செய்தி அறிவிக்க வந்தபோது, ஊன்றுகோலாக, தன்னோடு ஒரு மரத்தடியையும் கொண்டு சென்றுள்ளார். அவர் நற்செய்தி அறிவித்த இடங்களில் அதை ஊன்றிவிட்டு நற்செய்தியை அறிவித்துள்ளார். அறிவித்து முடிந்தவுடன் அந்த ஊன்றுகோலை எடுக்கும்போது அது ஏற்கனவே தரையில் வேர்விட்டிருந்தது எனவும் பாரம்பரியமாகச் சொல்லப்பட்டு வருகிறது. அயர்லாந்தில் இன்றும் கிறிஸ்தவம் முக்கிய மதமாக உள்ளது. இந்நாட்டில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் உலக கத்தோலிக்க குடும்பங்கள் நிகழ்வுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2018, 14:32