நோர்சியாவின் புனித பெனடிக்ட் நோர்சியாவின் புனித பெனடிக்ட் 

சாம்பலில் பூத்த சரித்திரம் : புனித பெனடிக்ட்

புனித பெனடிக்ட் அவர்களின் வாழ்வும், செயல்களும், ஐரோப்பாவில் உண்மையான ஆன்மீக மணத்தைப் பரப்பின

மேரி தெரேசா – வத்திக்கான்

ஐந்து மற்றும் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலியத் துறவியான புனித பெனடிக்ட் அவர்கள், மேற்கத்திய துறவு சபையின் தந்தை. மேற்குலகில் துறவு வாழ்வு மலர்ந்ததில், மற்ற எல்லாரையும்விட இவரின் பங்கு அதிகம். இவர் எழுதிய துறவு வாழ்வின் கொள்கை நூல், மத்திய காலத்தில் ஆயிரக்கணக்கான துறவறக் குழுக்களுக்கு அடிப்படை ஆவணமாக அமைந்திருந்தது. இந்நூல், 1,400க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக, துறவு இல்லங்களுக்கும் துறவிகளுக்கும் மிகவும் பொதுவான நூலாகவும், மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருந்தது. இப்புனிதரைப் பின்பற்றிய துறவிகள், பல ஆண்டுகளாக, ஐரோப்பா எங்கும் சென்று, கிறிஸ்தவ விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய கலாச்சார ஒன்றிப்பை உருவாக்கினார்கள். மத்திய காலத்தின் ஆரம்பக்காலம், பெனடிக் நூற்றாண்டுகள் என அழைக்கப்பட்டன. 2008ம் ஆண்டு ஏப்ரலில், மேற்கத்திய ஐரோப்பாவில் புனித பெனடிக்டின் தாக்கம் பற்றிய ஒரு கலந்துரையாடலில் உரையாற்றிய முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், புனித பெனடிக்டின் வாழ்வும், பணிகளும், ஐரோப்பாவில் பண்பாடும், கலாச்சாரமும் வளர்வதில் அடிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தின என்றும், மேற்கத்திய உரோமைப் பேரரசு வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, ஐரோப்பா அனுபவித்த வரலாற்றின் இருள் சூழ்ந்த இரவிலிருந்து மீண்டு வருவதற்கு இவை உதவின என்றும் கூறினார். திருத்தந்தை 12ம் பத்திநாதர் அவர்கள், இப்புனிதரை, ஐரோப்பாவின் தந்தை என்ற பெயர் சூட்டினார். மத்திய காலத்தில் பல ஐரோப்பிய நாடுகளில், புனித பெனடிக்ட் துறவு சபையினர் ஆற்றிய, நற்செய்தி மற்றும் கலாச்சாரப் பணிகளைப் பாராட்டி, 1964ம் ஆண்டில் அருளாளர் திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், புனித பெனடிக்ட் அவர்களை, ஐரோப்பாவின் பாதுகாவலர் என அறிவித்தார். 

புனித பெனடிக்டின் துறவு

நோர்சியாவின் புனித பெனடிக்ட் எனப்படும் இப்புனிதரைப் பற்றிய குறிப்புகளை, புனித திருத்தந்தை முதலாம் கிரகரி அவர்களின் உரையாடல்கள் நூல்களின் 2வது தொகுப்பிலிருந்து அறிய வருகிறோம். இப்புனிதரின் நான்கு சீடர்களிடமிருந்து இத்தகவல்களைப் பெற்றதாக இத்திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார். புனித பெனடிக்ட், மத்திய இத்தாலியின் நோர்சியா என்ற ஊரில், 480ம் ஆண்டில் உயர் குலத்தில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை நோர்சியாவில் முடித்து, இலக்கியம் மற்றும் சட்டம் படிப்பதற்காக உரோம் சென்றார். அங்கு அவரோடு படித்த இளையோர் மத்தியில் நிலவிய தீய செயல்கள் மற்றும் உரோம் நகரின் இன்னலான அரசியல் சூழலால், தன் ஆன்மா பற்றிக் கவலைப்பட்டு, படிப்பைக் கைவிட்டு தன்னை இறைவனுக்கு அர்ப்பணிப்பதற்குத் தீர்மானித்தார். இளைஞர் பெனடிக்ட், செல்வம், புகழ், இளமை அனைத்தையும் துறந்து, தனது பழைய பணியாளர் ஒருவருடன், Enfide (தற்போதைய Affile) என்ற சிறிய கிராமத்தில் தனிமை வாழ்வைத் தொடங்கினார். இறைவன் தன்னை ஆழ்நிலை தியான வாழ்வுக்கு அழைப்பதை உணர்ந்து, சுபியாகோ மலைப்பகுதிக்குச் சென்றார் அவர். அங்கு ஒரு குகையில், சுபியாகோவின் ரோமானுஸ் என்ற துறவியின் வழிகாட்டுதலில், தனியாக வாழ்ந்தார். அச்சமயத்தில், ஒருநாள் சாத்தான் அழகிய பெண் வடிவில் அவரைச் சோதித்தது. அந்தச் சோதனையை வெல்வதற்காக, முள்புதரில், தன் உடம்பு முழுவதும் உராய்ப்புகள் ஏற்படும்வரை புரண்டார் பெனடிக்ட். இந்தக் காயங்களின் வழியாக, இவர் தனது ஆன்மாவின் காயங்களைக் குணமாக்கினார்.

மொந்தே கசினோவில் துறவு இல்லம்

பல ஆண்டுகள் செபத்தில் செலவிட்ட இப்புனிதரின் வாழ்வால் ஈர்க்கப்பட்ட, அப்பகுதியில் வாழ்ந்த துறவிகள், தங்களுக்கு அவர் தலைவராக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். தான் மிக கண்டிப்பானவன் என அவர்களிடம் எச்சரித்தார் அவர். ஆனால் அவர்கள் அவரை வற்புறுத்தினர். புனித பெனடிக்ட் குடிக்கவிருந்த பானத்தில் அவர்கள் நஞ்சைக் கலந்தனர். ஆனால் பெனடிக்ட் அவர்கள், அந்தக் கோப்பையின் மீது செபித்து ஆசிர்வதித்தார். நஞ்சு மறைந்தது  எனச் சொல்லப்படுகின்றது. பின்னர் மீண்டும் குகையில் தனிமை வாழ்வைத் தொடர்ந்தாலும், அது நீடிக்கவில்லை. இன்னொரு நேர்மையான துறவியர் குழு அவரிடம் சென்றது. அக்குழுவின் வேண்டுகோளை ஏற்று, சுபியாகோவில், 12 துறவு இல்லங்களை அமைத்தார் பெனடிக்ட். அவை ஒவ்வொன்றிலும், 12 துறவிகள் வாழ்ந்தனர். அச்சமயத்தில், பொறாமை கொண்ட வோறொரு துறவி இவரைத் தாக்கவே, கட்டாயமாக தனது தலைமைப்பணியைத் துறந்து, மொந்தே கசினோ சென்று துறவு இல்லத்தை நிறுவினார். இந்த இல்லம்தான், திருஅவையின் துறவு அமைப்புக்கு அடித்தளமிட்டது. துறவிகள் தனித்தனியாக சிறு குழுக்களில் வாழ்வதைத் தவிர்த்து, எல்லாரையும் ஒரே குழுவாக இணைத்து, துறவிகள் ஒன்றித்து வாழ்வதன் சிறப்பை நிலைநாட்டினார் புனிதர். இவர் தனது துறவிகளிடம், செபத்தையும் உழைப்பையும் வலியுறுத்தினார். புனித பெனடிக்டின் உடன்பிறந்த சகோதரி புனித ஸ்கோலாஸ்டிக்காவும், அதற்கு அருகில், துறவு வாழ்வை மேற்கொண்டார்.   

இறுதி நாள்கள்

புனித பெனடிக்ட், தனிமையை நாடினாலும், அடிக்கடி மக்களைச் சந்தித்து வந்தார். நோயாளிகளைக் குணமாக்கினார். வறுமையில் வாடியோர்க்கு பொருளுதவி செய்தார். ஏழைகளுக்குத் தவறாமல் உணவு வழங்கினார். பலமுறை, இறந்தோரை உயிர்த்தெழச் செய்தார். தனது இறப்பை ஆறு நாட்களுக்கு முன்னறிவித்த இவர், தனக்கென்று கல்லறை குழி ஒன்றைத் தோண்டினார். கி.பி.543 அல்லது 547ம் ஆண்டில் ஒருநாள் திருப்பலியில் திருவுணவு உண்டபின், தனது கைகளை மேலே உயர்த்தி செபித்துக் கொண்டிருந்தபோது  இறைவனடி சேர்ந்தார். துறவு வாழ்வுக்கு இவர் எழுதிய கொள்கை நூல், 15 நூற்றாண்டுகள் கடந்தும், இன்றும் துறவு வாழ்வை வழிநடத்தி வருகின்றது. இறைவன் மற்றும் வானதூதர்களின் பிரசன்னத்தில் நம்மை நிறுத்த வேண்டும் என்று கூறிய புனித பெனடிக்ட், மனித வார்த்தைகளுக்கு உண்மையான, உறுதியான அடித்தளமாக இருப்பது கடவுளின் வார்த்தை என்பதை நமக்கு உணர்த்துகிறார். "மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல; மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் " (மத்.4,4) என்ற இயேசுவின் திருச்சொற்களின்படி வாழ்ந்தவர் புனித பெனடிக்ட்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 August 2018, 14:49