Cerca

Vatican News
அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல், முதுபெரும்தந்தை அத்தனகோரஸ் அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல், முதுபெரும்தந்தை அத்தனகோரஸ்  

சாம்பலில் பூத்த சரித்திரம் : மத்திய காலத்தில் திருஅவை பாகம் 2

கத்தோலிக்கத் திருஅவையும் கான்ஸ்தாந்திநோபிள் சபையும் இணைந்து வெளியிட்ட வரலாற்று சிறப்புமிக்க அறிக்கை, 1965ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி வத்திக்கானில், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க அமர்விலும், இஸ்தான்புல் நகரில் நடந்த சிறப்பு நிகழ்விலும் ஒரே நேரத்தில் வாசிக்கப்பட்டன.

மேரி தெரேசா - வத்திக்கான்

ஐரோப்பாவில் கி.பி.800க்கும், 1300ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் உயர்வான மத்திய காலம் என அழைக்கப்படுகின்றது. எட்டாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டம் மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டில்,  குறிப்பாக, பேரரசர்கள் பெரிய சார்லஸ் மற்றும் லூயிஸ் பயஸ் ஆட்சி காலங்களில்,  மக்களின் அறிவிலும், கலாச்சாரத்திலும் மறுமலர்ச்சி இடம்பெற்றது. இலக்கியம், கலைகள், கட்டடக் கலை, நீதித்துறை, திருவழிபாடு, இறையியல் படிப்புகள் ஆகியவை வளர்ந்தன. அருள்பணியாளர்கள் மற்றும் அரசவை எழுத்தர்கள் மத்தியில் நிலவிய கல்வியறிவின்மை பிரச்சனையை அகற்றுவதற்காக, பேரரசர் பெரிய சார்லஸ், கல்விக்கூடங்களை நிறுவினார். ஐரோப்பாவில் இருந்த சிறந்த கல்வியாளர்களை  தனது அரசவைக்கு அழைத்தார். கலாச்சாரம், அரசியல், மொழி போன்றவற்றில் நிலவிய வேறுபாடுகள், இறையியலிலும் அடிக்கடி கலந்ததால், அது, கிறிஸ்தவர்களின் ஒன்றிப்புக்கு ஊறு விளைவித்து, கிறிஸ்தவத்தில் பெரும் பிரிவினை ஏற்பட காரணமானது. 1054ம் ஆண்டில் கிறிஸ்தவத்தில் இடம்பெற்ற பிரிவினை, கிழக்கு-மேற்கு பிரிவினை என்றும் அழைக்கப்படுகின்றது.

முதலாம் Photios என்பவர், 9ம் நூற்றாண்டில் மிகச் சிறந்த அறிவாளராக நோக்கப்பட்டார். கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தையாகப் பணியாற்றிய புனித இக்னேஷியஸ் அவர்களை நீக்கிவிட்டு,  அப்பணிக்கு, கி.பி.858ம் ஆண்டில், Photiusஐ நியமித்தார் பேரரசர் 3ம் மைக்கிள். அப்போது Photios பொதுநிலையினராகவே இருந்தார். இந்த நியமனம் கிறிஸ்தவத் தலைவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட ஒரு காரணமானது. உரோம் திருத்தந்தைக்கும், கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தைக்கும் இடையே Photius காலத்தில் உருவான நம்பிக்கையின்மை, 11ம் நூற்றாண்டில் மீண்டும் வெடித்தது. தென் இத்தாலியில் வாழ்ந்த கிரேக்கர்கள் மீது இலத்தீன் கலாச்சாரத்தை திருத்தந்தை புகுத்தினார். இதற்குப் பதிலடியாக, கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தை Michael Cerularius அவர்கள், கான்ஸ்தாந்திநோபிள் நகரிலிருந்த எல்லா இலத்தீன் ஆலயங்களையும் மூடினார். இத்தாலியிலிருந்து கர்தினால் Humbert அவர்கள், கான்ஸ்தாந்திநோபிள் சென்று, இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். கர்தினால் Humbert அவர்களுக்கு, அந்நகரில் வரவேற்பும் கொடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து 1054ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, கான்ஸ்தாந்திநோபிள் நகரின் மிகப்பெரிய Hagia Sophia ஆலயத்தின் பலிபீடத்தில், முதுபெரும்தந்தையை திருஅவையைவிட்டு புறம்பாக்கும் அறிக்கை வெளியிடப்பட்டது. முதுபெரும்தந்தை Michael Cerularius அவர்களுக்கு எதிராக கண்டனமும் தெரிவிக்கப்பட்டது.  மூவொரு கடவுள் பற்றிய கிரேக்க கோட்பாடு, கிரேக்க அருள்பணியாளர்களின் திருமணம், திருநற்கருணைக்கு புளித்த அப்பத்தைப் பயன்படுத்துதல் போன்றவைக்கு எதிராகவும் அந்த அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்சமயத்தில் கிரேக்க மொழி பேசும்  மக்களுக்கும், இலத்தீன் மொழி பேசும் மக்களுக்கும் இடையே மனவருத்தங்கள் ஏற்பட்டன. இறுதியில், கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தை Michael Cerularius அவர்களின் தலைமையில், கிழக்கத்திய திருஅவையும், திருத்தந்தை 9ம் சிங்கராயர் அவர்கள் தலைமையில், மேற்கத்திய திருஅவையும் பிரிந்தன. இவ்விருவரும் ஒருவரையொருவர் திருஅவையைவிட்டு புறம்பாக்கிய நிகழ்வு, கிறிஸ்தவ வரலாற்றில் முக்கிய பிரிவினைக்கு காரணமானது.

இந்தப் புறம்பாக்கல் விதிமுறைகள் 1964ம் ஆண்டு சனவரியில்தான் நீக்கப்பட்டன. அவ்வாண்டில், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களும், கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தை முதலாம் அத்தனகோரஸ் அவர்களும், எருசலேமில், அவ்வாண்டு சனவரி 5ம் தேதி ஒலிவ மலையில் சந்தித்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை நிகழ்த்தி, இந்த விதிமுறைகளை அகற்றினர். 1438ம் ஆண்டு பிளாரன்ஸ் பொதுச்சங்கத்திற்குப்பின், இவ்விரு சபைகளின் தலைவர்களும் நேரிடையாகச் சந்தித்தது இதுவே முதன் முறையாகும். "அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக" (யோவா.17,21) என, இயேசு இறுதி இரவுணவின்போது எருசலேம் மாடியறையில் தம் சீடர்களுக்காகச் செபித்த எளிய செபத்தை இந்நிகழ்வில் இவ்விரு தலைவர்களும் செபித்தனர். முதல் ஆயிரம் ஆண்டுகள் பொதுவான மறைக்கோட்பாடுகளையும், ஆன்மீக மரபுகளையும் கொண்டிருந்த இவ்விரு திருஅவைகளும், அடுத்த ஆயிரம் ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தன. இச்சந்திப்புக்கு முன்னர், செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த, முதுபெரும்தந்தை அத்தனகோரஸ் அவர்கள், நான் என் அன்புக்குரிய சகோதரர் திருத்தந்தைக்கு, காலை வணக்கம் சொல்லப் போகிறேன் என்று நகைச்சுவையுடன் சொன்னாராம். இந்த ஒரு நிகழ்வுக்காக, 1964ம் ஆண்டு, சனவரி 5,6 தேதிகளில், 48 மணி நேரங்களுக்கு குறைவான ஒரு திருத்தூதுப் பயணத்தை, புனித பூமிக்கு மேற்கொண்டார், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல். அச்சமயத்தில், இயேசு பிறந்து வளர்ந்து இறந்த பெத்லகேம், நாசரேத், எருசலேம் ஆகிய மூன்று நகரங்களுக்கும், திருத்தந்தை சென்றார். 1809ம் ஆண்டுக்குப் பின், இத்தாலியைவிட்டு வெளியே சென்ற மற்றும், புனித பூமிக்கு, திருத்தந்தையாக, திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட முதல் திருத்தந்தையாகவும், திருத்தந்தை ஆறாம் பவுல் விளங்குகிறார். மேலும், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்கள், அமெரிக்கா, ஆசியா, ஆப்ரிக்கா, ஓசியானியா ஆகிய கண்டங்களுக்கும் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால், அக்கால வரலாற்றில், அதிகம் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை மற்றும், கிறிஸ்தவ ஒன்றிப்பு திருத்தந்தை என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார். 

29 August 2018, 14:54