மத்திய காலத்தில் திருஅவையின் அமைப்பு மத்திய காலத்தில் திருஅவையின் அமைப்பு 

சாம்பலில் பூத்த சரித்திரம் - மத்திய காலத்தில் திருஅவை பகுதி 1

ஐரோப்பாவில் மத்திய காலத்தில் திருஅவை என்று சொன்னால், அது கத்தோலிக்கத் திருஅவையை மட்டுமே குறிக்கும்

மேரி தெரேசா - வத்திக்கான்

 ஐரோப்பாவில் கி.பி.500க்கும், 1500ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் நடந்துள்ளன. அந்தக் காலங்களில் அரசர்கள், மதத்தையும்,   உரோமன் கத்தோலிக்கத் திருஅவையையும் பாதுகாத்து வந்துள்ளனர். ஐரோப்பா கண்டம் முழுவதும் மக்கள் ஆலயங்களுக்கு மிகப் பெரிய அளவில் உதவியிருக்கின்றனர். வருமானத்தில் பத்தில் ஒரு பாகத்தைச் செலுத்த வேண்டுமென அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்டது. வரி கட்டுவதிலிருந்து திருஅவை விலக்குப் பெற்றிருந்து, உலகில் அது, மிகவும் வல்லமைமிக்க நிறுவனமாக மாறியிருந்தது. அக்காலத்தில் வாழ்ந்த மக்கள், விண்ணகம் மற்றும் நரகம் என்ற கருத்தியலில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

கி.பி.500ம் ஆண்டு முதல் ஆயிரமாம் ஆண்டுவரை தொடக்க மத்திய காலம் என வரையறைத்துள்ளனர். இக்காலத்தில், மேற்கு உரோமைப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. பிராங் இனத்தவரின் அரசராக முதலாம் குளோவிஸ் விளங்கினார். இறைவாக்கினர் முகமது நபிகள் அவர்கள் பிறந்தார். எருசலேம் புனித நகரத்தைக் இஸ்லாமியர் கைப்பற்றினர். பிராங் மற்றும் இஸ்லாமியர்க்கிடையே தூர்ஸ் சண்டை இடம்பெற்றது. Charlemagne அதாவது பெரிய சார்லஸ், புனித உரோமைப் பேரரசின் அரசரானார். கிறிஸ்தவத்தில் மாபெரும் பிரிவினை ஏற்பட்டது. பெரிய ஆல்பர்ட், பிரிட்டனின் அரசரானார்.

ஆயிரமாம் ஆண்டுக்கும், 1,500ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஏறத்தாழ 1054ம் ஆண்டில், கீழைத் திருஅவையும், மேற்குலகத் திருஅவையும் பிரிந்தன. எருசலேம் புனித நகரம் முஸ்லிம்களிடம் சென்றதையடுத்து, திருத்தந்தை 2ம் உர்பான் எருசலேமை மீட்பதற்காக சிலுவைப்போருக்கு அழைப்பு விடுத்தார். எனவே, முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவ உலகுக்கும் இடையே, 1095ம் ஆண்டு முதல் 1291ம் ஆண்டுவரை சிலுவைப் போர்கள் நடந்தன. 1189ம் ஆண்டில், சிங்க இதய ரிச்சர்டு எனப்படும் முதலாம் ரிச்சர்டு, சிலுவைப்போரிலிருந்து திரும்பி வந்தார். 1206ம் ஆண்டில், செங்கிஸ் கான் என்பவர் மங்கோலியப் பேரரசை நிறுவினார். இப்பேரரசு பரவத் தொடங்கி, உலகின் மிகப்பெரிய பேரரசாக விளங்கியது. 1215ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி அரசர் ஜான் என்பவரால் மகாசாசனம் கையெழுத்திடப்பட்டது. அரசரும் சட்டத்திற்கு உட்பட்டவர் என்பதை இச்சாசனம் தெளிவுபடுத்தியது. 1271ம் ஆண்டில் மார்க்கோ போலோ ஆசியாவுக்குத் தன் கடல்பயணத்தை ஆரம்பித்தார். 1337க்கும், 1453ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே நூறு ஆண்டுகள் சண்டை இடம்பெற்றது.

1347க்கும், 1353ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஐரோப்பாவில் கொள்ளை நோயால் இறப்புகள் இடம்பெற்றன. எலிகளிலிருந்து பரவியதாகச் சொல்லப்படும் இக்கொள்ளை நோயில் ஐரோப்பாவில் மூன்றில் அல்லது இரண்டில் ஒரு பகுதியினர் இறந்தனர். அச்சமயத்தில் சீனாவுடன் வரத்தகம் ஆரம்பிக்கப்பட்டது. 1431ம் ஆண்டு மே 30ம் தேதி, புனித ஜோன் ஆப் ஆர்க், 19வது வயதில் ஆங்கிலேயர்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார். இப்புனிதை பிரான்ஸ் நாட்டுக்காகப் போரிட்டவர். 1444ம் ஆண்டில் Johannes Gutenburg என்பவர் அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். 1453ம் ஆண்டில் ஒட்டமான்கள், கான்ஸ்தாந்திநோபிள் நகரத்தைக் கைப்பற்றினர். மத்தியகால ஐரோப்பாவில், இவ்வளவு முக்கியமான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இக்காலத்தில் ஐரோப்பாவில் பல கிறிஸ்தவ சபைகளையும், கிறிஸ்தவ ஆலயங்களையும் பார்க்கிறோம். ஏன் இந்துமத கோவில்கள், மசூதிகள் போன்ற பிற சமயத்தவரின் வழிபாட்டுத் தலங்களையும் காண்கிறோம். ஆனால் மத்திய காலத்தில் ஐரோப்பாவில் உரோமன் கத்தோலிக்கத் திருஅவை மட்டுமே இருந்தது. எனவே மத்திய காலத்தில் திருஅவை என்று சொன்னால், அது கத்தோலிக்கத் திருஅவையை மட்டுமே குறிக்கும். கிறிஸ்துவுக்குப் பின், தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள், முதல் சில நூற்றாண்டுகளில் உரோமைப் பேரரசின்கீழ் கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாயினர். ஏனெனில் கிறிஸ்தவர்கள் உரோமையர் கடவுள்களை அல்லது உரோமைப் பேரரசரை வணங்க மறுத்ததால், கிறிஸ்தவம் உரோமைப் பேரரசுக்கு அச்சுறுத்தலாக நோக்கப்பட்டது.  பின்னர், பேரரசர் கான்ஸ்ட்டைன் காலத்தில், உரோமைப் பேரரசில், கிறிஸ்தவம் அரசு மதமாக அங்கீகரிக்கப்பட்டது. பேரரசர் கான்ஸ்ட்டைன்க்கு அடுத்துவந்த பேரரசர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தனர்.

 எனினும், 476ம் ஆண்டில் உரோமைப் பேரரசு சரிந்தது. இப்பேரரசின் இடங்களில் பல்வேறு தனித்த அரசுகள் அமைந்தன. ஜெர்மானிய முரட்டுத்தனம் கொண்ட பழங்குடி இனத்தவர் உரோம் நகரைக் கைப்பற்றினர். இந்நிகழ்வு வரலாற்றின் இருண்ட காலமாக நோக்கப்படுகிறது. இந்த இருண்ட காலத்திலும், மத்திய காலத்தின் தொடக்கத்திலும், ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே கிறிஸ்தவ மதம், உரோமன் கத்தோலிக்கம் மட்டுமே. Catholic என்ற சொல், catholik என்ற மத்தியகால ஆங்கிலச் சொல்லிலிருந்தும், catholique என்ற ப்ரெஞ்ச் வார்த்தையிலிருந்தும் பிறந்தது. Catholicus என்ற இலத்தீன் சொல்லுக்கு, உலகளாவிய அல்லது முழுவதுமான என்று பொருள். 110ம் ஆண்டில் மறைசாட்சியாகக் கொல்லப்பட்ட அந்தியோக்கியோவின் புனித இஞ்ஞாசியார், திருஅவை முழுவதையும் விளக்குவதற்கு, Catholic என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 August 2018, 15:15