கேரளாவில் வெள்ளம் கேரளாவில் வெள்ளம் 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஆயர்கள் ஒருமைப்பாடு

இந்திய கத்தோலிக்கத் திருஅவை, தனது இரக்கம் மற்றும் பிறரன்பு அமைப்பான காரித்தாஸ் வழியாக, கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை ஆற்றி வருகின்றது. புலம்பெயர்ந்த மக்களுக்கு திருஅவையின் பள்ளிகளும், ஏனைய நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளன - ஆயர் மஸ்கரீனஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

கேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு இடம்பெற்றுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுடன் தனது ஆழ்ந்த ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளது, இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை.

இந்திய ஆயர் பேரவையின் பொதுச் செயலரான, ஆயர் தியோடர் மஸ்கரீனஸ் அவர்கள், வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மிகப்பெரும் இயற்கைப் பேரிடரால் துயருறும் அனைத்து மக்களுடன், ஆயர்கள் தங்கள் அருகாமையைத் தெரிவிப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஏழை இளைஞரின் நிவாரண உதவி

இதற்கிடையே, கேரளாவில் தங்கி போர்வைகள் வியாபாரம் செய்து வரும் மத்தியப் பிரதேச மாநில விஷ்ணு கச்சாவா என்ற இளைஞர், தான் விற்பனைக்காக வைத்திருந்த ஆயிரக்கணக்கான போர்வைகளையும், துணிகளையும், அதாவது தனது ஒட்டுமொத்த விற்பனை இருப்பையும், நிவாரண உதவிக்காக அளித்துள்ளார்.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து, கேரளாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. இதுவரை 70-க்கும் மேற்பட்ட மக்கள் மழையினாலும், நிலச்சரிவினாலும் பலியாகியுள்ளனர். இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப்பிரதேசம், உஜ்ஜைனி மண்டலம் நிமுச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு கச்சாவா. இவர் தன்னுடைய 16வது வயதிலிருந்து கண்ணூர் அருகே இரிட்டி பகுதியில் போர்வைகள் மற்றும் துணிகளை விற்பனை செய்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவி, 2 குழந்தைகளுடன் கண்ணூரில் வாழ்ந்து வருகிறார். நாள்தோறும் இவர், தனது தோளிலும், சிறிய வண்டியிலும் போர்வைகளையும், துணிகளையும் வைத்து கண்ணூர் சுற்றுப்பகுதிகளில் வியாபாரம் செய்து வருகிறார். (CBCI, தி இந்து)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2018, 15:16