தேடுதல்

கேரளாவில் உதவிகள் பெறும் மக்கள் கேரளாவில் உதவிகள் பெறும் மக்கள் 

கேரள நிவாரணப் பணிக்கு இத்தாலிய காரித்தாஸ்

கேரளாவின் அனைத்து மறைமாவட்டங்களும், துறவற சபைகளும் நிவாரணப் பணிகளில் முழுவீச்சுடன் ஈடுபட்டுள்ளவேளை, இந்திய காரித்தாஸ் அமைப்பு, அவற்றுடன் சேர்ந்து பணியாற்றுகின்றது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இதுவரை இல்லாத அளவுக்கு பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு, இந்திய காரித்தாஸ் வழியாக உதவியுள்ளது, இத்தாலிய காரித்தாஸ். கேரளாவின் 1,553 கிராமங்களில், 1,287 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, குறைந்தது 350 பேர் இறந்துள்ளனர் என்றும், மனிதர் உயிரிழந்ததைத் தவிர, நாட்டின் உள்கட்டமைப்பு மிகவும் பாதிக்கப்பட்டு, சமூகத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன என்றும், காரித்தாஸ் கூறியது.

பருவமழை தொடங்கியதிலிருந்து, இரண்டாயிரத்துக்கும் அதிகமான வீடுகள் முழுவதும் அழிந்துள்ளன, ஒன்பதாயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன, 24 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி நிலங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன மற்றும் குறைந்தது பத்து இலட்சம் பேர் புலம்பெயர்ந்துள்ளனர் என்றும் காரித்தாஸ் கூறியது.

கேரளாவின் அனைத்து மறைமாவட்டங்களும், துறவற சபைகளும் நிவாரணப் பணிகளில் முழுவீச்சுடன் ஈடுபட்டுள்ளவேளை, இந்திய காரித்தாஸ் அமைப்பு, அவற்றுடன் சேர்ந்து பணியாற்றுகின்றது என, அதன் இயக்குனர் அருள்பணி Paul Moonjely அவர்கள் கூறியுள்ளார்.   

மேலும், கேரளாவுக்கு தமிழகத்திலிருந்து பள்ளிச்சிறார் உட்பட, எல்லாத் தரப்புகளிலிருந்தும் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் சுடுமண் சிற்பக் கலைஞர் முனுசாமி அவர்கள், களிமண் சிலைகளை இலவசமாகச் செய்து திரட்டிய 35 ஆயிரம் ரூபாயை வெள்ள நிவாரணத்துக்கு அளித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 August 2018, 15:46