தேடுதல்

மும்பை உயர்மறைமாவட்ட இயற்கை பாதுகாப்பு மும்பை உயர்மறைமாவட்ட இயற்கை பாதுகாப்பு  

இயற்கையைப் பாதுகாக்கும் மறைமாவட்ட நடவடிக்கை

படைப்பைப் பாதுகாப்பதற்கு நம் ஆண்டவர் விடுத்துள்ள அழைப்புக்கு ஒத்திணங்கும் வகையில், மும்பை உயர்மறைமாவட்டத்தின் இயற்கையைப் பாதுகாக்கும் பணியில் அம்மறைமாவட்டத்திலுள்ள ஒவ்வொருவரும் முழு மனதுடன் இணையுமாறு கர்தினால் கிரேசியஸ் அவர்கள் அழைப்பு

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 1, இச்சனிக்கிழமை, இயற்கையின் பாதுகாப்பு உலக செப நாள் சிறப்பிக்கப்படுவதையொட்டி, இயற்கையைப் பாதுகாக்கும் முயற்சிகளில் கத்தோலிக்கர் ஈடுபடுமாறு, இந்திய ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

'மறைமாவட்டத்தில் இயற்கையின் பாதுகாப்பு' எனும் தலைப்பில், புதிய நடவடிக்கை ஒன்றை, செப்டம்பர் 01, இச்சனிக்கிழமையன்று ஆரம்பித்து வைப்பது குறித்து காணொளிச் செய்தியில் பேசியுள்ள கர்தினால் கிரேசியஸ் அவர்கள், கடவுளின் படைப்பின் பலனை அனைத்து தலைமுறைகளும் அனுபவிப்பதற்கு வழியமைக்க வேண்டியது, நம் அனைவரின் கடமை என்று கூறியுள்ளார்.  

செப்டம்பர் முதல் நாளன்று இயற்கையைப் பாதுகாக்கும் புதிய நடவடிக்கை ஒன்றை மும்பை உயர்மறைமாவட்டத்திற்காக ஆரம்பித்து வைக்கிறேன் என்று, காணொளிச் செய்தியை ஆரம்பித்துள்ளார், மும்பை உயர்மறைமாவட்ட பேராயர், கர்தினால் கிரேசியஸ்.

சுற்றுச்சூழல் நெருக்கடி, இன்றைய உலகுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றது என்பதை ஏற்கும் திருஅவை, காலத்தின் அறிகுறிகள் குறித்து, எப்போதும் விழிப்பாய் இருக்கின்றது எனவும் கூறியுள்ள, கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இவ்விவகாரம், திருஅவையின் மறைப்பணியில், ஓர் ஒருங்கிணைந்த அங்கமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

2015ம் ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட, சுற்றுச்சூழல் பற்றிய Laudato Si’ திருமடல் குறித்தும் குறிப்பிட்டுள்ள, கர்தினால் கிரேசியஸ் அவர்கள், மும்பை உயர்மறைமாவட்டம், பசுமை மறைமாவட்டமாக மாறும் வழிகளைத் தேடுகின்றது எனவும் தெரிவித்துள்ளார். (CBCI)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 August 2018, 15:44