தேடுதல்

ஜெனோவாவில் இடிந்து விழுந்த மொராந்தி பாலம் ஜெனோவாவில் இடிந்து விழுந்த மொராந்தி பாலம் 

காயமடைந்தோரை நேரில் சந்தித்து கர்தினால் ஆறுதல்

இத்தாலியை உலுக்கியுள்ள மொராந்தி பாலம் விபத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சான் எஜிதியோ அமைப்பு, ஒன்றிணைந்து மீண்டும் கட்டியெழுப்புவோம், வருங்காலத்திற்குப் பொறுபேற்க விரும்புபவர்கள் இத்தாலிக்குத் தேவை எனக் கூறியுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின், ஜெனோவா நகரில் மொராந்தி மேம்பாலம் இடிந்து விழுந்ததில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார், ஜெனோவா பேராயர், கர்தினால் ஆஞ்சலோ பஞ்ஞாஸ்கோ.

ஆகஸ்ட் 15, இப்புதன் மாலையில், Carignano பசிலிக்காவில் மரியின் விண்ணேற்பு விழா மாலை வழிபாட்டை முடித்து, அந்நகரின் சான் மார்ட்டின் மருத்துவமனை சென்று, அங்கு சிகிச்சை பெற்றுவரும் காயமடைந்தவர்களைச் சந்தித்த பின்னர், உடல்கள் வைக்கப்பட்டுள்ள அறைப் பகுதியில் கூடியிருந்த, இறந்தவர்களின் குடும்பத்தாரையும் சந்தித்து ஆறுதல் கூறினார், கர்தினால் பஞ்ஞாஸ்கோ. அவ்விடத்திற்கு பெட்டிகளில் கொண்டுவரப்பட்ட உடல்களையும் ஆசிர்வதித்தார், கர்தினால் பஞ்ஞாஸ்கோ.

நெடுஞ்சாலையிலுள்ள மொராந்தி மேம்பாலத்தில் இடிந்து விழுந்த பெரும்பகுதி, தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில் விழுந்துள்ளது. இப்பாலத்தை பழுதுபார்ப்பதற்கு 12 மாதங்கள் எடுக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆகஸ்ட் 14, இப்புதன்கிழமை, திடீரென ஏற்பட்ட இடி மின்னல் மழை, இவ்விபத்திற்கு காரணம் என சொல்லப்படுகின்றது.

மேலும், இந்த விபத்து, கோடை விடுமுறையை இரத்தம் நிறைந்ததாக அமைத்துவிட்டது எனச் சொல்லி, பாதிக்கப்பட்ட எல்லாருக்கும், தன் ஆறுதலையும் செபங்களையும் தெரிவித்துள்ளார், இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர், பெருஜீயா கர்தினால் குவால்தியெரோ பஸ்ஸெத்தி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 August 2018, 15:12