தேடுதல்

Vatican News
மறைந்த முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி மறைந்த முன்னாள் பிரதமருக்கு அஞ்சலி   (ANSA)

வாஜ்பாய், நல்லிணக்க இந்தியாவை விரும்பியவர்

வாஜ்பாய் அவர்கள், புனித அன்னை தெரேசாவின் நல்ல நண்பர், 1999ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களை, இந்தியாவில் வரவேற்றவர் - கர்தினால் கிரேசியஸ்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், கிறிஸ்தவ சமூகத்தின் மிகப்பெரும் நண்பர் மற்றும், பலமதங்கள் கொண்ட இந்தியாவைக் கனவு கண்டவர் என்று, இந்திய ஆயர் பேரவைத் தலைவரும், மும்பை பேராயருமான, கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் அவர்களின் இறப்பை முன்னிட்டு, இந்திய ஆயர்கள் சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ள, கர்தினால் கிரேசியஸ் அவர்கள், வாஜ்பாய் அவர்களின் மரணம் குறித்து இந்திய ஆயர் பேரவை வருந்துகின்றது என்றும், இவரின் மரணம், நாட்டிற்கும், தனக்கும் பெரிய இழப்பு என்றும் கூறியுள்ளார்.

இந்திய நாட்டை தொலைநோக்குடன் பார்த்த, சிறந்த அரசியல்வாதி என்றும், மக்கள் பற்றி, குறிப்பாக, சமூகத்தில் நலிந்த மக்கள் பற்றி மிகவும் கவலைகொண்டிருந்தார்  என்றும், கிறிஸ்தவ சமூகத்தின் தேவைகள் மீது எப்போதும் கவனமாய் இருந்து, அவர்களின் பிரச்சனைகளைப் பொறுமையுடன் கேட்டவர் என்றும், மறைந்த வாஜ்பாய் அவர்களுக்குப் புகழாரம் சூட்டினார், கர்தினால் கிரேசியஸ்.

1999ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் இந்தியாவுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டவேளையில், திருத்தந்தைக்கும்,  வாஜ்பாய் அவர்களுக்கும் இடையே நிலவிய நட்புறவை மகிழ்வுடன் நினைத்துப் பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார், கர்தினால் கிரேசியஸ்.

வாஜ்பாய் அவர்கள், பாகுபாடுகளற்ற மற்றும் சிறுபான்மையினரை வரவேற்கும் ஒரு நாடாக அமைய வேண்டுமென, இந்தியாவை விரும்பினார் எனவும் கர்தினால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், தனது 93வது வயதில், ஆகஸ்ட் 16, இவ்வியாழன், இந்திய நேரம் மாலை 5.05 மணியளவில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். (CBCI)

17 August 2018, 15:33