தேடுதல்

Vatican News
ஹிரோஷிமா நினைவு நாளில் இந்திய மாணவர் ஹிரோஷிமா நினைவு நாளில் இந்திய மாணவர்  (ANSA)

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தை ஊக்குவிக்க..

ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு போடப்பட்டதன் 73ம் ஆண்டு நிறைவு நிகழ்வில், நகர மேயர் உலகில் அணு ஆயுதங்கள் ஒழிக்கப்பட அழைப்பு விடுத்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

உலகில் அமைதிக்காகச் செபிக்கின்றவர்கள் மற்றும் அதற்காகச் பணியாற்றுகின்றவர்களுக்கு, தான் நன்றி தெரிவிப்பதாக, ஹிரோஷிமா ஆயர் Alexis Mitsuru Shirama அவர்கள் கூறியுள்ளார்.

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி ஹிரோஷிமாவிலும், 9ம் தேதி நாகசாகியிலும் அணுகுண்டுகள் போடப்பட்டதன் 73ம் ஆண்டு நிறைவு நிகழ்வு, ஆகஸ்ட் 6, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்டது. இது குறித்து ஆசியச் செய்தியிடம் பேசிய, ஆயர் Shirama அவர்கள், உலகை அணு ஆயுதங்களற்ற இடமாக அமைப்பதற்கும், அமைதிக்காகச் செபித்து பணியாற்றுவதற்கும், இந்த நினைவு நாள் சிறப்பாக அழைப்பு விடுக்கின்றது எனக் கூறியுள்ளார்.

ஐ.நா.வின் அணு ஆயுத தடை ஒப்பந்தம் விரைவில் ஊக்குவிக்கப்பட்டு, ஜப்பானும் அந்த ஒப்பந்தத்தில் பங்குகொள்ளும் என்ற தன் நம்பிக்கையையும் வெளியிட்டார், ஆயர் Shirama.

“அமைதிக்காக என்னால் செய்ய முடியும்?” என்ற தலைப்பில், ஜப்பானின் கத்தோலிக்கர், ஆகஸ்ட் 5, இஞ்ஞாயிறு முதல், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு, அமைதிக்காகச் செபித்தனர்.

ஹிரோஷிமா அமைதிப் பூங்காவில் நினைவு நிகழ்வு

ஆகஸ்ட் 6, இத்திங்கள் காலை 6.15 மணிக்கு, ஹிரோஷிமா நகரின் அமைதிப் பூங்காவில், கத்தோலிக்கர், பிற கிறிஸ்தவ சபையினர், புத்த மதத்தினர், ஷிண்டோயிச மதத்தினர் ஆகியோர் இணைந்து, அணுகுண்டுக்குப் பலியானவர்களை நினைத்து செபித்தனர்.

இச்செப நிகழ்வுக்குப்பின் நடைபெற்ற, நினைவு நிகழ்வில், ஜப்பான் பிரதமர் Shinzo Abe, ஹிரோஷிமா மேயர் Kazumi Matsui உட்பட, 85 நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றிய மேயர் Kazumi Matsui அவர்கள், உலகில் அணு ஆயுதங்கள் ஒழிக்கப்படவும், ஐ.நா.வின் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் நாடுகள் இணைய வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார். 1945ம் ஆண்டில், ஹிரோஷிமாவில், லிட்டில் பாய் என்ற அணுகுண்டு வீசப்பட்ட நேரமாகிய, காலை 8.15 மணிக்கு அனைவரும் மௌன அஞ்சலி செலுத்தினர்.

இரண்டாம் உலகப்போரின்போது, ஜப்பான் மீது அமெரிக்க ஐக்கிய நாடு வீசிய அணுகுண்டு தாக்குதல்களால், 2 இலட்சத்து 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அச்சமயத்தில் உயிர் பிழைத்தவர்கள், தற்போது 82 வயது என்ற விகிதத்தில் ஏறத்தாழ 1 இலட்சத்து 55 ஆயிரம் பேர் உள்ளனர்.

உலகில் தற்போது 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட அணு ஆயுதங்கள் சேமிப்பில் உள்ளன என, செய்திகள் கூறுகின்றன. (AsiaNews)

07 August 2018, 15:46