Cerca

Vatican News
தமஸ்கு நகர் செல்லும் வழியில் இயேசுவைச் சந்திக்கும் சவுல் தமஸ்கு நகர் செல்லும் வழியில் இயேசுவைச் சந்திக்கும் சவுல் 

புதுமைகள் : பார்வை பெறுதலும், இழத்தலும் – பகுதி 8

பார்வை பெறுதலும், பார்வை இழத்தலும் என்ற இரு கண்ணோட்டங்களுடன் நிகழ்ந்த நம் தேடல் பயணத்தின் இறுதியில், நாம் பெற்றுள்ள, பெறக்கூடிய, அல்லது, பெறவேண்டிய பார்வைத்திறன்களைக் குறித்து இன்றையத் தேடலில் புரிந்துகொள்ள முயல்வோம்.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

280818 Bible

புகழ்பெற்ற துப்பறியும் அறிஞர், ஷெர்லாக் ஹோம்ஸ் (Sherlock Holmes) அவர்கள், தன் நண்பர் வாட்சன் என்பவருடன் சுற்றுலா சென்றார். அன்றிரவு, திறந்த வெளியில் கூடாரம் அமைத்து, அவர்கள் இருவரும் உள்ளே உறங்கச் சென்றனர். நள்ளிரவில் ஏதோ ஓர் உணர்வால் உந்தப்பட்டு, கண்விழித்த ஷெர்லாக், அருகில் தூங்கிக்கொண்டிருந்த வாட்சனை எழுப்பி, அவரிடம், "வாட்சன், மேலே பார். என்ன தெரிகிறது?" என்று கேட்டார். "பல நூறு விண்மீன்கள் தெரிகின்றன" என்று வாட்சன் சொல்லவே, ஷெர்லாக் அவரிடம், "சரி, அது உனக்கு என்ன சொல்கிறது?" என்று அழுத்திக் கேட்டார்.

உடனே, வாட்சன், "கண்ணுக்குத் தெரியும் இந்த விண்மீன்களைத் தாண்டி, இன்னும் பலகோடி விண்மீன்கள் உள்ளன என்று வானியல் சொல்கிறது. பளிச்சென மின்னும் விண்மீன்கள், நாளை, நமக்குத் தெளிவான வானிலை இருக்கும் என்று சொல்கின்றன. இவை அனைத்தையும் படைத்த இறைவன் எவ்வளவு வல்லவர் என்று இறையியல் சொல்கிறது" என்று மூச்சுவிடாமல் பேசிய வாட்சன், ஷெர்லாக் பக்கம் திரும்பி, "சரி, அது உனக்கு என்ன சொல்கிறது?" என்று கேட்டார். ஷெர்லாக், தலையில் அடித்துக்கொண்டு, "என் முட்டாள் நண்பரே, நாம் போட்டிருந்த கூடாரத்தை யாரோ திருடிவிட்டார்கள்" என்று கத்தினார்.

இது ஒரு நகைச்சுவைத் துணுக்கு. பல நேரங்களில், நகைச்சுவைத் துணுக்குகள், வெறும் சிரிப்பை மட்டுமல்ல. சிந்தனையையும் தூண்டும் என்பது நமக்குத் தெரியும். இந்த நகைச்சுவைத் துணுக்கில், எது மிகவும் தெளிவாக, எளிதாகத் தெரியவேண்டுமோ, அதைத்தவிர ஏனையவற்றை வாட்சன் கண்டார் என்பதை எண்ணி, சிரிக்கிறோம், பரிதாபப்படுகிறோம். பல கோடி மைல்களுக்கு அப்பால் இருந்த விண்மீன்களைப் பார்க்கத் தெரிந்த வாட்சனுக்கு, தலைக்கு மேல் போடப்பட்டிருந்த கூடாரம் காணாமற்போன உண்மையைப் பார்க்கமுடியாமல் போனது.

பிறவியிலேயே பார்வைத்திறனற்ற ஒருவருக்கு இயேசு பார்வைத்திறன் வழங்கியப் புதுமையில், கடந்த ஏழு வாரங்களாக தேடல் பயணத்தை மேற்கொண்டோம். இந்நிகழ்வை ஒரு புதுமை என்று மட்டும் கருதாமல், இந்நிகழ்வின் வழியே நற்செய்தியாளர் யோவான் நமக்குச் சொல்லித்தரும் இறையியல் பாடத்தையும் கற்றுக்கொள்ள முயன்றோம். பார்வை பெறுதலும், பார்வை இழத்தலும் என்ற இரு கண்ணோட்டங்களுடன் நிகழ்ந்த நம் தேடல் பயணத்தின் இறுதியில், நாம் பெற்றுள்ள, பெறக்கூடிய, அல்லது, பெறவேண்டிய பார்வைத்திறன்களைக் குறித்து இன்றையத் தேடலில் புரிந்துகொள்ள முயல்வோம்.

பார்வைத்திறன் இருந்தும், பார்க்க முடியாமல், அல்லது, பார்க்க மறுத்து வாழ்வதைப் பற்றி, இறைவாக்கினர்கள் விடுக்கும் எச்சரிக்கைகள் இவ்வாறு ஒலிக்கின்றன:

எசாயா 42:20

பலவற்றை நீ பார்த்தும், கவனம் செலுத்தவில்லை; உன் செவிகள் திறந்திருந்தும் எதுவும் உன் காதில் விழவில்லை.

எரேமியா 5:21

கண்ணிருந்தும் காணாத, காதிருந்தும் கேளாத மதிகெட்ட, இதயமற்ற மக்களே, கேளுங்கள்.

எசேக்கியேல் 12:2

காணக் கண்கள் இருந்தும் அவர்கள் காண்பதில்லை; கேட்கச் செவிகள் இருந்தும் அவர்கள் கேட்பதில்லை.

கண்கள் அகலத் திறந்திருந்தாலும், பார்க்க இயலாமல் போகும் நிலை, திருத்தூதர் பவுலின் வாழ்வில் நிகழ்வதைக் காண்கிறோம். கிறிஸ்தவர்களை வேரோடு அழிக்கும் வெறி தன் கண்களை மறைக்க, தமஸ்கு நகர் நோக்கி புறப்பட்ட சவுலை, ஒளிவடிவில் இயேசு சந்தித்தபோது, சவுல் தரையில் வீழ்ந்தார். தொடர்ந்து, அங்கு நிகழ்ந்ததை, திருத்தூதர் பணிகள் நூலில் இவ்வாறு வாசிக்கிறோம்:

திருத்தூதர் பணிகள் 9:8

சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள்.

கண்கள் திறந்திருந்தும், பார்க்க இயலாமல்போன சவுல், வழியில் சந்தித்து, அடையாளம் காண இயலாமல் போன இயேசுவை, அடுத்த மூன்று நாள்கள், தன் அகக்கண்களால் கண்டார். அவர், இயேசுவை, அகக்கண்களால் காண முடிந்ததும், அவரது புறக்கண்களைத் திறக்க, அனனியா வந்து சேர்ந்தார்.

திருத்தூதர் பணிகள் 9: 17-18

அனனியா அந்த வீட்டுக்குள் சென்று கைகளை அவர் மீது வைத்து, "சகோதரர் சவுலே, நீர் வந்த வழியில் உமக்குத் தோன்றிய ஆண்டவராகிய இயேசு, நீர் மீண்டும் பார்வை அடையவும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படவும் என்னை உம்மிடம் அனுப்பியுள்ளார்" என்றார். உடனே அவருடைய கண்களிலிருந்து செதிள்கள் போன்றவை விழவே அவர் மீண்டும் பார்வையடைந்தார். பார்வையடைந்ததும் அவர் எழுந்து திருமுழுக்குப் பெற்றார்.

இறையியல் பேராசிரியரும், எழுத்தாளருமான அருள்பணி ரோன் ரோல்ஹைசர் (Ron Rolheiser) அவர்கள், "இன்னும் ஆழமான முறையில் காணுதல்" (Seeing in a Deeper Way) என்ற தலைப்பில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், திருத்தூதர் பவுல் பார்வை பெறும் நிகழ்வைச் சுட்டிக்காட்டி, தன் சிந்தனைகளை இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

"உண்மையான காணுதல் என்பது, உடலளவில், நலம் மிக்க கண்களைக் கொண்டு காண்பதையும் தாண்டி, பல ஆழமான உண்மைகளை உணர்த்துகிறது" என்று கூறும் அருள்பணி ரோல்ஹைசர் அவர்கள், நாம் உண்மையான காணும் திறமை பெறக்கூடிய சில வழிகளையும் குறிப்பிட்டுள்ளார்.

"நமக்கு மிகவும் பழக்கமானவற்றை, வழக்கமான வழிகளில் காண்பதை விடுத்து, உள்ளார்ந்த வியப்புடன் காணுதல்" என்பது, அருள்பணி ரோல்ஹைசர் அவர்கள், குறிப்பிடும் முதல் வழி. வாழ்வில் நாம் ஒவ்வொருநாளும் கண்டு பழகிப்போனவற்றை, புதிய வழிகளில் காண முயற்சி செய்தால், நம் வாழ்வில் வியப்பும், அழகும் கூடும் என்று, புகழ்பெற்ற எழுத்தாளர் ஜி.கே.செஸ்டர்ட்டன் (G.K.Chesterton) அவர்கள் கூறியுள்ளதை, அருள்பணி ரோல்ஹைசர் அவர்கள், சுட்டிக்காட்டியுள்ளார்.

'பொறாமை' என்ற கண்ணோட்டத்திலிருந்து விலகி, 'பாராட்டு' என்ற கண்ணோட்டத்திற்குச் செல்லவேண்டும் என்று கூறும் அருள்பணி ரோல்ஹைசர் அவர்கள், 'பாராட்டு' என்ற கண்ணோட்டம், நம் உள்ளத்தை, பரந்து விரிந்ததாக மாற்றி, வாழ்வில் புத்துணர்வைக் கொணர்கிறது என்று கூறியுள்ளார்.

கோபத்தாலும், வெறுப்பாலும் குறுகிப்போகும் கண்ணோட்டத்திலிருந்து விலகி, 'மன்னிப்பு' என்ற கண்ணோட்டம் கொண்டிருப்பதை அடுத்த வழியாகக் கூறுகிறார், அருள்பணி ரோல்ஹைசர். கோபம் என்ற கண்புரை நம் பார்வையை வெகுவாக மறைத்துவிடும் நோய். அந்த நோயிலிருந்து விடுபட உதவும் சிறந்த மருந்து, மன்னிப்பு.

'ஏக்கம் நிறைந்த' கண்ணோட்டத்திலிருந்து விலகி, 'நன்றி நிறைந்த' கண்ணோட்டத்துடன் வாழ்வது, அருள்பணி ரோல்ஹைசர் அவர்கள் கூறும் அடுத்த வழி. ஏக்கம் நம் பார்வைத்திறனை, கிட்டப் பார்வையாக மாற்றும்; நன்றியோ, நம் பார்வைத்திறனை தூரமும், அகலமும் நிறைந்ததாக மாற்றும். இதனால், உலகம் அனைத்தையும், நம்மால் நன்றியோடு கண்டு மகிழமுடியும்.

"அன்பே நம் கண்கள்" என்று பல்வேறு மதங்களின் ஞானிகள் கூறியுள்ளனர். "கடவுளே அன்பு" (1 யோவான் 4:8) என்று விவிலியத்தில் வாசிக்கிறோம். அன்பே உருவான கடவுள் நமக்கு சரியான பார்வைத்திறனை வழங்குவதோடு, நமது கண்களாகவே கடவுள் விளங்கவேண்டுமென மன்றாடுவோம்.

28 August 2018, 14:43