கருக்கலைத்தலை சட்டமாக்கும் முயற்சிக்கு எதிராகப் போராடும் அர்ஜென்டீன மக்கள் கருக்கலைத்தலை சட்டமாக்கும் முயற்சிக்கு எதிராகப் போராடும் அர்ஜென்டீன மக்கள் 

அர்ஜென்டீனாவில் கருக்கலைத்தலை சட்டமாக்கும் முயற்சி தோல்வி

அர்ஜென்டீனா செனட் அவையில் நிகழ்ந்த விவாதத்தின் இறுதியில், கருக்கலைத்தலை சட்டமயமாக்கும் முயற்சி தோல்வியடைந்தது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அர்ஜென்டீனா நாட்டைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள், கருக்கலத்தலை சட்டமாக்கும் முயற்சிக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்கு அந்நாட்டு செனட் அவை செவிமடுத்துள்ளது என்று, வாழ்வை ஆதரிக்கும் பாப்பிறைக் கழகத்தின் தலைவரான பேராயர் வின்சென்சோ பாலியா அவர்கள், வத்திக்கான் செய்திக்கு அளித்த  பேட்டியில் கூறினார்.

மக்களின் பொதுவான நன்மையையும், வாழ்வை ஆதரிக்கும் கலாச்சாரத்தையும் கொண்டுள்ள அர்ஜென்டீனா பாராளுமன்றத்தின் மாண்பு மிகுந்த பாரம்பரியத்தைக் காக்க செனட் அவை உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என்று, அந்நாட்டு கர்தினால் Mario Aurelio Poli அவர்கள், விண்ணப்பம் விடுத்திருந்தார்.

அர்ஜென்டீனா நாட்டில், கருக்கலைத்தலை சட்டமாக்கும் விவாதம், செனட் அவையில் நடைபெற்றுவந்த வேளையில், இந்த அவையின் உறுப்பினர்களுக்கு, புவனஸ் அயிரஸ் பேராயர், கர்தினால் Poli அவர்கள் இந்த விண்ணப்பத்தை விடுத்தார்.

சமுதாயத்தில் நலிவுற்ற மக்களைக் காப்பதற்கே பாராளுமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், கருவில் வளரும் உயிர் பாதுகாப்பு ஏதுமற்ற ஓர் உயிர் என்றும், கர்தினால் Poli அவர்கள் தன் விண்ணப்பத்தில் வலியுறுத்திக் கூறினார்.

ஆகஸ்ட் 8, இப்புதனன்று, அர்ஜென்டீனா செனட் அவையில் நிகழ்ந்த விவாதத்தின் இறுதியில், கருக்கலைத்தலை சட்டமாக்கும் முயற்சியை 38 செனட் உறுப்பினர்கள் நிராகரிக்க, 31 உறுப்பினர்கள், அதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்று அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.

கருக்கலைத்தலை சட்டமாக்கும் முயற்சி செனட் அவையில் நடைபெற்ற வேளையில், புவனஸ் அயிரஸ் உயர் மறைமாவட்டத்தின் பல ஆலயங்களில், வாழ்வுக்கு ஆதரவாக திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன என்று SIR இதழில் வெளியான செய்திக்குறிப்பு கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2018, 15:01