Cerca

Vatican News
குணமளிக்கும் இயேசுவின் திருச்சிலுவை குணமளிக்கும் இயேசுவின் திருச்சிலுவை  (ANSA)

பொதுக்காலம் 13ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை

பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் துன்புற்ற ஒருவரும், பன்னிரு வயது நிரம்பிய ஒரு சிறுமியும் என, இருபெண்கள் இயேசுவால் வாழ்வு பெற்றது குறித்து இன்றைய நற்செய்தி உரைக்கிறது.

ஜெரோம் லூயிஸ்  –  வத்திக்கான் செய்திகள்

கடவுளின் பெயரால், மதங்களின் பெயரால், இதுவரை சிந்தப்பட்டுள்ள, இன்றும் தொடர்ந்து சிந்தப்பட்டுவரும் இரத்தத்தைப்போல், வேறு எந்த காரணத்திற்காகவும் அவ்வளவு இரத்தம் இவ்வுலகில் சிந்தப்பட்டிருக்காது என்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை. மனிதர்கள், வன்முறை வெறிக்கு அடிமையாகும்போது, "இந்த ஊரில் இரத்தம் ஆறாய் ஓடும்" என்று சூளுரைகள் விடுவதைக் கேட்டிருக்கிறோம். பொதுவாகவே, மனித உயிர்கள் மதிப்பிழந்து, மலிந்துவிட்டதைப்போன்ற உணர்வு உலகில் வளர்ந்துள்ளது.

எடுத்துக்காட்டாக, நடைபெற்றுவரும் உலகக் கால்பந்தாட்டப் போட்டிகளில் தனக்கு மிகவும் பிடித்த ஒரு நாட்டு விளையாட்டுக் குழு தோற்றுவிட்டதென்று 30 வயது நிறைந்த இளையவர் ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டார் என்பதைக் கேள்விப்படும்போது, மனித உயிர்கள் எவ்வளவு மலிவாகிப் போயுள்ளது என்பதை உணர்ந்து மனம் வருந்துகிறோம். இத்தகையைச் சூழலில், இன்று, இரத்தம், உயிர் என்ற இரு இணைபிரியா உண்மைகளைச் சிந்திக்க இந்த ஞாயிறு வாசகங்கள் வழியாக நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

இலாபம் ஒன்றையே குறியாகக் கொண்டுள்ள நமது ஊடகங்களுக்கு, இரத்தம் சிந்துதலும், உயிர்கள் கொல்லப்படுவதும் சுவையான, விற்பனைக்கு உகந்த செய்திகள். இவற்றை மீண்டும் மீண்டும் நாம் கேட்பதால், பார்ப்பதால், இந்த உலகை ஒரு சுடுகாடாய், கல்லறைத் தோட்டமாய் நாம் எண்ணத் தோன்றுகிறது. இந்தச் சுடுகாட்டின் மத்தியில், கல்லறைத் தோட்டத்தின் நடுவில், கவிதை வரிகளாய், இஞ்ஞாயிறு திருவழிபாட்டின் முதல் வாசகம் ஒலிக்கிறது:

சாலமோனின் ஞானம் 1: 13-15; 2: 23-24

சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை: வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை; அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை; கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை. நீதிக்கு இறப்பு என்பது இல்லை.

விவிலியத்தில், இரத்தம், ஓர் ஆழமான அடையாளம். இஸ்ரயேல் மக்களைப் பொருத்தவரை, உயிர்களுக்கெல்லாம் ஊற்றான இறைவனுக்கு மட்டுமே இரத்தம் சொந்தமாக வேண்டும். எனவே, அவருக்கு அளிக்கப்படும் பலிகளில் மட்டுமே இரத்தம் சிந்தப்பட வேண்டும். மற்ற வழிகளில் சிந்தப்படும் இரத்தம் நமக்கு எதிராக இறைவனிடம் முறையிடும். தொடக்க நூல் 4ம் பிரிவில், காயின் ஆபேலைக் கொன்றதும், இறைவன் காயினிடம் சொன்ன சொற்கள், இந்தக் கருத்தை வலியுறுத்துகின்றன:  “நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது.” (தொ.நூ. 4: 10)  சிந்தப்படும் மிருகங்களின் இரத்தம் இறைவனுக்கு உகந்த பலியாக மாறும். ஆனால், சிந்தப்படும் மனிதர்களின் இரத்தம் நம்மீது பழியாக சுமத்தப்படும்.

இரத்தத்தைப்பற்றி இஸ்ரயேல் மக்கள் கொண்டிருந்த மற்றொரு முக்கியமான எண்ணம்... இரத்தம் நம் உடலில் இருக்கும்வரை அது உயர்வாக, வாழ்வாகக் கருதப்படும். நோயின் காரணமாக, நமது உடலிலிருந்து இரத்தம் வெளியேறினால், அந்த இரத்தம் களங்கமாக, தீட்டாக மாறிவிடும். இந்த எண்ணங்களை, இன்றைய நற்செய்தி நமக்கு வழங்குகிறது.

மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள இப்பகுதியில் இரு புதுமைகள் நிகழ்கின்றன. மேலோட்டமாகப் பார்க்கும்போது, தொடர்பற்ற இருவேறு புதுமைகளை நற்செய்தியாளர்கள் இணைத்துள்ளதைப்போல் தோன்றலாம். ஆனால், ஆழமாகச் சிந்திக்கும்போது, அழகான ஒப்புமைகளும், வேற்றுமைகளும் வெளியாகும்.

இருபெண்கள் குணமடைகின்றனர். நோயுள்ள ஒரு பெண்ணும், நோயுற்று இறந்த ஒரு சிறுமியும் இயேசுவால் வாழ்வு பெறுகின்றனர். நோயுள்ள அந்தப் பெண் பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் தன் உயிரை, கொஞ்சம், கொஞ்சமாய் இழந்து வந்தவர். சிறுமியோ, அதே பன்னிரு ஆண்டுகளாய் சுகமாக, மகிழ்வாக வாழ்ந்து, திடீரென உயிரிழந்தவர்.

இரத்தப்போக்கு நோயுள்ள பெண், தானே வலியவந்து, இயேசுவைத் தொடுகிறார். அதுவும், பிறருக்குத் தெரியாமல் கூட்டத்தோடு, கூட்டமாய் வந்து, அவரது ஆடையின் விளிம்புகளைத் தொடுகிறார். குணமடைகிறார். உயிரிழந்த சிறுமியையோ, இயேசு, தேடிச் சென்று, தொட்டு உயிரளிக்கிறார்.

இவ்விரு நிகழ்வுகளையும் நற்செய்தியாளர்கள் இணைத்து சொல்லியிருப்பது, நம் வாழ்வுக்குத் தேவையான ஒரு முக்கியமானப் பாடத்தைச் சொல்லித்தருகின்றது. நாம் மையம் என்று கருதுபவை ஓரமாகவும், ஓரங்கள் மையமாகவும் மாறும் என்பதே, அந்தப் பாடம். இந்த எண்ணத்தை சிறிது ஆழமாகச் சிந்திப்பது பயனளிக்கும்.

இறக்கும் நிலையில் இருக்கும் தன் மகளைக் காக்க வரும்படி, தொழுகைக் கூடத்தின் தலைவன் யாயிர், இயேசுவின் கால்களில் விழுந்தார் என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இது சாதாரண செய்தி அல்ல, தலைப்புச் செய்தி. நமது ஊடகங்கள் அன்று இருந்திருந்தால், இந்நிகழ்வைப் பலவாறாகத் திரித்துச் சொல்லியிருக்கும். ஒரு சிறுமி சாகக்கிடக்கிறார் என்ற முக்கிய செய்தியைவிட, தொழுகைக் கூடத்தின் தலைவன் யாயிர், இயேசுவின் கால்களில் விழுந்தார் என்ற செய்தியைப் பெரிதுபடுத்தி, அதை, முதல் பக்கத்தில், படமாக வெளியிட்டு, யார் பெரியவர் என்ற விவாதத்தைக் கிளறியிருக்கும்.

ஒருவேளை, இயேசுவின் காலத்திலும் இந்தக் கேள்வி எழுந்திருக்கலாம்... யாருக்கு? இயேசுவுக்கா? யாயிருக்கா? இல்லை. குழந்தையின் நலனில் அக்கறை கொண்ட யாயிருக்கும், இயேசுவுக்கும் இந்த எண்ணமே எழுந்திருக்காது. இவ்விருவரையும் சுற்றி இருந்தவர்களுக்கு அந்தக் கேள்வி எழுந்திருக்கும். தொழுகைக் கூடத்தின் தலைவன், இயேசுவின் கால்களில் விழுந்த செய்தி, காட்டுத் தீபோல் எருசலேம்வரை பரவி, மதத்தலைவர்களை ஆத்திரப்பட வைத்திருக்கும்.

யாயிரின் வேண்டுதலைக் கேட்டதும், இயேசு புறப்பட்டபோது, 'பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்' என்று நற்செய்தி சொல்கிறது. இந்த ஊர்வலமும் முக்கியச் செய்திதான். ஆனால், இதுவரை நாம் சிந்தித்த எதுவும் இன்றைய நற்செய்தியின் முக்கியச் செய்தி அல்ல. பார்ப்பதற்கு மையமாகத் தெரியும் இவை அனைத்தும் ஓரங்களாகிவிட்டன. ஓர் ஓரத்தில் ஆரம்பித்த கதை, மையமாக மாறியது. அதுதான், பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் துன்புற்ற பெண், குணமடையும் அந்த நிகழ்வு.

பெயரற்ற அந்தப் பெண் கூட்டத்தில் இருந்தார். அவர் முண்டியடித்து, முன்னேறிக் கொண்டிருந்தார். ஒரு பெண்... நோயுள்ள பெண்... அதுவும் இரத்தப்போக்கு நோயுள்ள பெண்... கூட்டத்தில் இருந்தார் என்பது, யூத சமுதாயத்திற்கு அதிர்ச்சியைத் தந்திருக்கும். இரத்தப்போக்கு நோயுள்ள பெண், சமூகத்தினின்று விலக்கி வைக்கப்படவேண்டும் என்பது, இஸ்ராயலர்களின் விதி. ஆனால், இவரோ, கூட்டத்தின் மத்தியில் முண்டியடித்து முன்னேறிக் கொண்டிருந்தார். அவர் மனமெங்கும் ஒரே மந்திரம்: "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்." (மாற்கு 5:28)

இயேசுவுக்கு முன்னால் சட்டங்களும், சம்பிரதாயங்களும் சாம்பலாகிப்போகும் என்று அந்தப் பெண்ணுக்குத் தெரியும். வேலிகள் கட்டுதல், வேறுபாடுகள் காட்டுதல், விலக்கிவைத்தல் போன்ற இதயமற்ற போலிச்சட்டங்கள் இயேசுவிடம் பொசுங்கிப்போகும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அந்தத் துணிவில்தான் அவர் முன்னேறிக் கொண்டிருந்தார்.

இருந்தாலும், அவருக்குள் ஒரு சின்ன பயம். முன்னுக்கு வந்து, முகமுகமாய்ப் பார்த்து, இயேசுவிடம் நலம் வேண்டிக்கேட்க ஒரு சின்ன பயம். அவருடைய பயம், இயேசுவைப்பற்றி அல்ல. அவரைச் சுற்றியிருந்த சமூகத்தைப்பற்றி... முக்கியமாக இயேசுவைச் சுற்றியிருந்த ஆண்களை, மதத்தலைவர்களைப்பற்றி.

கூட்டத்தில், அந்தக் குழப்பத்தின் மத்தியில், இயேசுவை அணுகுவதைத் தவிர, வேறு வழி அந்தப் பெண்ணுக்குத் தெரியவில்லை. கூட்டத்தில் நுழைந்தார், இயேசுவை அணுகினார். அவர்மீது தான் வளர்த்திருந்த நம்பிக்கையை எல்லாம் திரட்டி, அவரது ஆடையின் விளிம்பைத் தொட்டார். குணம்பெற்றார்.

"அவரது ஆடையின் ஓரங்கள் போதும் எனக்கு. குணம் பெற்றதும் கூட்டத்திலிருந்து நழுவிவிடலாம்" என்று எண்ணி வந்த பெண்ணை, இயேசு, ஓரங்களிலேயே விட்டுவிட்டுப் போயிருக்கலாம். விளம்பரங்களை விரும்பாத இயேசு, அங்கு நடந்த புதுமையைப் பெரிதுபடுத்தாமல் போயிருக்கலாம். ஆனால், அவருக்கு வேறு எண்ணங்கள் இருந்தன. கூட்டத்தில் குணமானப் பெண், கூட்டத்தையும் குணமாக்கவேண்டும் என்று இயேசு எண்ணினார். சமுதாயத்தின் விளிம்புகளில் வாழ்பவர்களை, விளிம்புகளுக்குத் தள்ளப்பட்டவர்களை, மையத்திற்குக் கொண்டுவரும் கலை, இயேசுவுக்கு நன்கு தெரிந்த கலை.

இயேசு நின்றார். கூட்டமும் நின்றது. தன் மேலுடையைத் தொட்ட பெண்ணை கூட்டத்தின் மையத்திற்குக் கொணர்ந்தார். இயேசுவின் ஆடையைத் தொட்டதால் அந்தப் பெண் உடலளவில் குணமானார். இயேசுவின் இந்த அழைப்பு, அவர் மனதையும் குணமாக்கியது. பன்னிரு ஆண்டுகளாக அந்தப் பெண்ணின் உள்ளத்தில் வேரோடியிருந்த வேதனைகள், தலைமுதல் கால்வரை புரையோடிப் போயிருந்த வெறுப்புக்கள் எல்லாம் அப்போது கரைந்தன.

பெண்ணென்றும், நோயுள்ள பெண்ணென்றும், அதிலும் இரத்தப் போக்கு நோயுள்ள பெண்ணென்றும் அடுக்கடுக்காய் தன்மீது தீட்டுக்களைச் சுமத்தி, தன்னை ஒதுக்கிவைத்த சமுதாயத்தின் மேல்... அந்தச் சமுதாயத்தை இந்நிலைக்கு உள்ளாக்கிய சட்டங்கள், மேல்... அச்சட்டங்களை இம்மியும் பிசகாமல் காப்பாற்றிய மதத்தலைவர்கள் மேல்... இப்படிப்பட்ட ஒரு மதத்தின் மையமென்று சொல்லப்பட்ட அந்தக் கடவுள் மேல்... பன்னிரு ஆண்டுகளாய் அந்தப் பெண் வளர்த்து வந்திருந்த வெறுப்புக்கள் எல்லாம் அந்தக் கணத்தில் விடைபெற்று மறைந்தன. விடுதலை பெற்றார் அவர்.

தன்னைக் கண்டதும், தன் கதையைக் கேட்டதும், அந்தக் கூட்டம் கொதித்தெழும், தங்களைத் தீட்டுப்படுத்தியப் பெண்ணைத் தீர்த்துக்கட்ட கல்லெடுக்கும் என்று அப்பெண்ணுக்குத் தெரியும். கல்லால் சமாதியே கட்டினாலும் பரவாயில்லை. தன் மீட்பைப்பற்றி அவர்களிடம் சொல்லவேண்டும் என்று அந்தப் பெண் தன் கதையைச் சொன்னார். "நிகழ்ந்தது அனைத்தையும் அவர் சொன்னார்" (மாற்கு 5: 33) என்று இன்றைய நற்செய்தி சொல்கிறது. அவரது கதையைக் கேட்ட கூட்டம், அதிர்ச்சியில் உறைந்து நின்றது. இயேசு அந்தப் பெண்ணிடம், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு" (மாற்கு 5: 34) என்று சொன்னார். அதுமட்டுமல்ல, "உன்னால், இன்று, இக்கூட்டத்தில் பலர் குணம் பெற்றனர். சட்டங்களுக்கும், சம்பிரதாயங்களுக்கும் அடிமையாகி, மனிதரை மதிக்கத்தெரியாமல் மக்கிப்போயிருந்த பலர், இன்று, உன்னால் குணம் பெற்றனர், சம்மதானமாகப் போ!" என்று அப்பெண்ணுக்கு அசீர் வழங்கி அனுப்பினார், இயேசு.

இதன்பின், யாயிரின் மகள் குணமான நிகழ்வையும் இன்று நாம் வாசிக்கிறோம். இந்த நிகழ்வின்போது அங்கிருந்தவர்களை இயேசு வெளியில் அனுப்பிவிட்டு, (மாற்கு 5: 40) இப்புதுமையைச் செய்கிறார். தனிப்பட்ட வகையில் இந்தப் புதுமை நிகழ்ந்திருந்தாலும்,  தொழுகைக்கூடத் தலைவனின் மகள் உயிர்பெற்ற நிகழ்வு, அடுத்தநாள் தலைப்புச் செய்தியாக வந்திருக்க வேண்டும். ஆனால், இயேசு “‘இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது' என்று அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்" (மாற்கு 5: 43) என்று இன்றைய நற்செய்தி முடிவடைகிறது.

ஆரவாரமாக, கூட்டமாக ஆரம்பித்த ஒரு நிகழ்வு யாருக்கும் தெரியக்கூடாது என்ற கட்டளையுடன் முடிகிறது. ஆனால், யாருக்கும் தெரியக்கூடாது என்ற எண்ணத்தில் ஆரம்பித்த அந்தப் பெண்ணின் புதுமையை இயேசு ஊரறியச் செய்கிறார்.

ஓரங்கள் மையமாவதும், மையங்கள் ஓரமாவதும் இறைவனின் கணக்கு.

01 July 2018, 06:00