செஸ்டகோவா மாதா திருத்தலம் செஸ்டகோவா மாதா திருத்தலம் 

போலந்தில் இறையழைத்தல் அதிகரிக்க செபம்

இறையழைத்தல்களை ஊக்குவிப்பதற்காக, போலந்தின் அருள்பணியாளர்கள் ஒருமாத, செப நடைப்பயணத்தை துவக்கியுள்ளனர்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள் 

போலந்தில் இறையழைத்தல்கள் குறைவின்றி இருந்தாலும், அவற்றை மேலும் ஊக்குவிப்பதற்காக, அந்நாட்டின் அருள்பணியாளர்கள் ஏறத்தாழ ஒருமாத, நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் அதிகமான இளைஞர்கள் குருத்துவ வாழ்வைத் தேர்ந்தெடுப்பதற்கு செஸ்டகோவா உயர்மறைமாவட்ட விசுவாசிகள் செபித்துவரும்வேளை, அவ்வுயர்மறைமாவட்ட அருள்பணியாளர்கள், இதே நோக்கத்திற்காக, இம்மாதம் 16ம் தேதி செபத்துடன்கூடிய நடைப்பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

அருள்பணியாளர்கள், ஒவ்வொரு நாளும் செபமாலை செபித்துக்கொண்டே, 12 முதல் 25 மைல்கள் வரை நடக்கின்றனர். இத்திருப்பயணம், வருகிற ஆகஸ்ட் 20ம் தேதியோடு நிறைவடையும்.

இறையழைத்தல்களுக்காக உண்ணாநோன்பையும் கடைப்பிடித்துக்கொண்டு நடக்கும் இவர்களுடன், அந்தந்த பங்குத்தளங்களில் ஏனைய விசுவாசிகளும் இணைந்து கொள்கின்றனர். இத்திருப்பயணத்தில் முதலில் நடந்து செல்லும் அருள்பணியாளர் சிலுவையைத் தூக்கிக்கொண்டு நடக்கிறார்.

இச்சிலுவையில், புனிதர்கள் திருத்தந்தை 2ம் ஜான் பால், குழந்தை தெரேசா ஆகியோரின் திருப்பண்டங்கள் வைக்கப்பட்டு, இயேசுவே, நான் உமக்காகக் காத்திருக்கிறேன் என்ற வார்த்தைகளும் பொறிக்கப்பட்டுள்ளன.

செஸ்டகோவா உயர்மறைமாவட்டத்தில் தற்போது 900 அருள்பணியாளர்களும், ஏறக்குறைய நூறு குருத்துவ மாணவர்களும் இருக்கின்றனர் (CNA/EWTN).   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 July 2018, 15:41