Davao பேராயர் Romulo Valles Davao பேராயர் Romulo Valles  

நெருக்கடியான சூழல்கள் விலக செபம், நோன்புக்கு அழைப்பு

பிலிப்பன்ஸ் நாட்டின் பல்வேறு துன்பச் சூழல்கள் குறித்து கத்தோலிக்க ஆயர்கள் மேய்ப்புப்பணி அறிக்கை. ஏழைகளின் துன்பத்தைவிட திருஅவைக்கு எதிரான தாக்குதல் ஒன்றுமில்லை

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

ஜூலை,13,2018. பிலிப்பைன்ஸ் அரசுத்தலைவர் ரொட்ரிகோ துத்தர்த்தே அவர்கள் அந்நாட்டின் கத்தோலிக்கத் திருஅவைக்கு எதிராக, தளராமல் அவதூறுகளைக் கூறிவரும்வேளை, திருஅவை தன் நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாய் இருக்கும் என்று, ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று நாள் ஆண்டு நிறையமர்வு கூட்டத்தை நடத்திய பின்னர், அறிக்கை வெளியிட்டுள்ள பிலிப்பைன்ஸ் ஆயர்கள், நாட்டு மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் பற்றிய கவலையை வெளியிட்டு, இத்துன்பங்களுக்கு மத்தியில், திருஅவை எதிர்கொள்ளும் துயரங்கள் ஒன்றுமில்லை எனக் கூறியுள்ளனர்.

அரசின் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்கீழ் இடம்பெறும் கொலைகள், சோம்பேறிகளாகச் சுற்றித் திரிகின்றனர் என, சேரிவாழ் மக்கள் குற்றம் சாட்டப்பட்டு சிறைவைக்கப்படுதல் உட்பட, நாட்டில் இடம்பெறும் அநீதிகளை ஆயர்கள், தங்கள் அறிக்கையில் வரிசையாகக் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

அரசை கவிழ்க்கும் நோக்கமில்லை

திருஅவை, அரசை கவிழ்ப்பதற்கு முயற்சிக்கின்றது என்ற, அரசுத்தலைவர் துத்தர்த்தே அவர்களின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆயர்கள், இக்குற்றச்சாட்டு, உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Romulo Valles அவர்கள் கையெழுத்திட்டுள்ள அவ்வறிக்கையில், அரசைக் கலைப்பதற்குரிய முயற்சியில் திருஅவை செயல்படாது என்றும், அதேநேரம், சமூக அநீதி மற்றும் அறநெறி வாழ்வு முறைதவறும்போது திருஅவை மௌனம் காக்காது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

செபம், உண்ணா நோன்பு

தெய்வ நிந்தனை, கொலைகள், அவதூறு போன்ற பாவங்களுக்குப் பரிகாரமாக, கார்மேல் அன்னை மரியா விழாவுக்கு அடுத்த நாளான ஜூலை 17ம் தேதியிலிருந்து, 19ம் தேதி வரை, சிறப்பு செபங்கள் மற்றும் உண்ணா நோன்பு கடைப்பிடிக்கப்படும் என்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகின்றது.

இந்த மூன்று நாள்களும் செபம், உண்ணா நோன்பு, தர்மம் செய்தல் ஆகிய செயல்களில் விசுவாசிகள் ஈடுபடுமாறு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் (CBCP)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 July 2018, 15:38